போதைப்பொருள் குறித்த கருத்தரங்கின் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை போதைப்பொருள் குறித்த கருத்தரங்கின் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை  

போதைக்கு அடிமையான எவரும் மீட்கப்பட முடியாதவர் அல்ல

சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்வில், மனிதர் மையப்படுத்தப்படும் உலகை உருவாக்க வேண்டியது அவசியம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

போதைப்பொருள்களைப் பயன்படுத்துவது, உடல்நலத்திற்கும், மனித வாழ்வுக்கும், சமுதாயத்திற்கும் கடும் கேடு வருவிக்கும்வேளை, இவற்றை உற்பத்தி செய்வது, தயாரிப்பது, உலகளவில் விநியோகிப்பது போன்றவற்றைத் தடைசெய்வதற்கு நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

இவ்விவகாரத்தில், அரசுகள் துணிச்சலுடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இக்காலத்தில் இளையோரும், ஏனையோரும், சில இணையதள பக்கங்களுக்கு அடிமையாகி, அவற்றிலிருந்து வெளிவர இயலாமல் இருக்கின்றனர் மற்றும், இந்நிலை, வாழ்வின் அர்த்தத்தை, ஏன், வாழ்வையே இழக்கும் ஆபத்தையும் கொணர்கின்றது என்று கூறினார்.

போதைப்பொருள் தடுப்பு குறித்து, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, வத்திக்கானில் நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட ஏறத்தாழ 450 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

இன்றைய உலகில் இந்நிலையைக் களையவேண்டியதன் அவசரத் தேவையை உணர்ந்துள்ள கத்தோலிக்க திருஅவை, சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்வில், இரக்க நற்செய்தியில் வேரூன்றப்பட்ட, மனிதர் மையப்படுத்தப்படும் உலகை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.  

தல, தேசிய மற்றும் பன்னாட்டு அமைப்புகளுடனும், பல்வேறு கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் திருஅவை ஈடுபட்டு வருகின்றது எனவும் உரைத்த திருத்தந்தை, போதைப்பொருள் விவகாரம் பற்றிய வத்திக்கான் கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், உலகிற்கு விடுத்துள்ள விண்ணப்பத்திற்கு, தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். கடவுள் யாரையும் புறக்கணிப்பதில்லை மற்றும் எந்தவிதப் போதைக்கும் அடிமையானவர் மீட்கப்பட முடியாதவர் அல்ல என்றும் திருத்தந்தை கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, நவம்பர் 29 இவ்வியாழன் முதல், டிசம்பர் 1, இச்சனிக்கிழமையன்று வரை, போதைப்பொருள்களும், அவற்றுக்கு அடிமையாதலும் என்ற தலைப்பில், இக்கருத்தரங்கை நடத்தியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2018, 14:41