சிறப்பு செய்தி வழங்கும் திருத்தந்தை சிறப்பு செய்தி வழங்கும் திருத்தந்தை 

அனைவருக்கும் குடிநீர் என்பதில் திருப்பீடத்தின் அக்கறை

குடிக்கும் நீர் கிடைக்காமல் பொதுமக்கள் துன்புறும் வேளையில், அந்நாடுகளில், ஆயுதங்கள் பலருக்கும் கிடைக்கும்வண்ணம் நிலைமை சீரழிந்துள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வாழ்வின் ஆதாரமாக விளங்குவது தண்ணீர் என்றும், சுத்தமான தண்ணீர் இல்லாத காரணத்தால், உலகின் பல பகுதிகளில் நம் சகோதரர், சகோதரிகள் மாண்பு நிறைந்த வாழ்வு இல்லாமல் வாடுகின்றனர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

உரோம் நகரில் உள்ள உர்பானியா பாப்பிறை பல்கலைக் கழகத்தில், "பொதுவான நலனின் மேலாண்மை: அனைவருக்கும் குடிக்கும் நீர் கிடைத்தல்" என்ற தலைப்பில், நவம்பர் 8, இவ்வியாழனன்று, நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பியிருந்த செய்தி, இக்கருத்தரங்கின் ஆரம்ப அமர்வில் வாசிக்கப்பட்டது.

பல நாடுகளில், குடிக்கும் நீர் கிடைக்காமல் பொதுமக்கள் துன்புறும் வேளையில், அந்நாடுகளில், ஆயுதங்கள் பலருக்கும் கிடைக்கும்வண்ணம் நிலைமை சீரழிந்துள்ளது என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்நிலை மாறுவதற்கு, அந்நாடுகளில் நிலவும் ஊழலின் ஆதிக்கம் முதலில் நீக்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவருக்கும் குடிநீர் கிடைக்கவேண்டும் என்பதில் திருப்பீடம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று இச்செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு வழிகளில், 'குடிநீர் கிடைத்தல்' என்ற கருத்தை உலக அரங்குகளில் பரப்ப, திருப்பீடம், முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று எடுத்துரைத்தார்.

பல்வேறு மதங்களையும், கலாச்சாரங்களையும் சார்ந்தவர்கள் கூடிவந்திருக்கும் இந்தக் கருத்தரங்கில், "நான் தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை" (மத். 25:42) என்று இயேசு கூறிய வார்த்தைகள், மத நம்பிக்கை கொண்ட அனைவர் மனதிலும் ஒலிக்கும் என்று தான் நம்புவதாக திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையும், பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும் மொனாக்கோ ஆகிய நாடுகளின் தூதரகங்களும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களும் ஏனைய திருப்பீட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2018, 14:23