ஜோர்டான் நாட்டில் இடம்பெற்ற திடீர் மழை பாதிப்பு ஜோர்டான் நாட்டில் இடம்பெற்ற திடீர் மழை பாதிப்பு 

ஜோர்டான் நாட்டு விபத்து - திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

ஜோர்டான் நாட்டில் இடம்பெற்ற இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டோர், குறிப்பாக, இளம் மாணவர்களின் மறைவு குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளதாகக் கூறும் தந்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜோர்டான் நாட்டில் இடம்பெற்ற திடீர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியொன்று அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டோர், குறிப்பாக, இளம் மாணவர்களின் மறைவு குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளதாகவும், உயிரிழந்தோருக்காக செபிப்பதாகவும், திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள தந்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இப்பேரிடரால் காயமுற்றோர் குணம் பெறவும், உறவுகளை இழந்தோர் ஆறுதல் பெறவும், தன் வேண்டுதல்களை சமர்ப்பிக்கும் திருத்தந்தை, இப்பேரிடர் வேளையில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டோருக்கு தன் ஆதரவையும், ஊக்கத்தையும் தெரிவித்துள்ளதாக இத்தந்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜோர்டான் நாட்டு திருப்பீடத் தூதர், பேராயர் அல்பெர்த்தோ ஒர்தெகா மார்ட்டின் அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் இத்தந்தியை அனுப்பியுள்ளார்.

அக்டோபர் 25 வியாழனன்று அம்மான் நகரின் தனியார் பள்ளியிலிருந்து உல்லாசப் பயணம் மேற்கொண்ட 37 மாணவர்களும் 7 பள்ளி அதிகாரிகளும் சாக்கடல் பகுதியில் யோர்தான் பள்ளத்தாக்கில் அமர்ந்திருந்த வேளையில், திடீரென உருவான மழை வெள்ளத்தில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர் என்றும், இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஜோர்டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2018, 17:22