இளையோர் மற்றும் முதியோருடன் திருத்தந்தையின் சந்திப்பு இளையோர் மற்றும் முதியோருடன் திருத்தந்தையின் சந்திப்பு 

இளையோர், முதியோர் சந்திப்பில் திருத்தந்தை

அடுத்தத் தலைமுறையினர் மீது கருத்துக்களைத் திணிப்பதைவிட, முதியோரின் வாழ்க்கை, இளையோருக்கும், குழந்தைகளுக்கும் விசுவாசத்தை ஊட்டி வளர்க்க முடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒப்பனை செய்யப்பட்ட வெளித்தோற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவ்வுலகிற்கு, பெறுவதைவிட, தருவதே சிறந்தது என்று, இயேசுவும், புனிதர்களும் சொல்லித்தரும் பாதையைக் காட்ட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் மாலை, உரோம் நகரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூறினார்.

புனித அகுஸ்தீன் உயர் கல்வி மையத்தில் திருத்தந்தை

இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெற்றுவரும் ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு சிறப்பு நிகழ்வாக, இளையோரும், முதியோரும், திருத்தந்தையை சந்திக்கும் நிகழ்வு, அக்டோபர் 23, இச்செவ்வாய் மாலை, உரோம் நகரில் அமைந்துள்ள புனித அகுஸ்தீன் உயர் கல்வி மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

"காலத்தின் ஞானத்தைப் பகிர்ந்துகொள்ளுதல்" என்ற நூல் வெளியீட்டுடன் துவங்கிய இந்நிகழ்வில், இளையோர், முதியோர் என ஆறு பேர் எழுப்பிய கேள்விகளுக்கு திருத்தந்தை பதிலளித்த வேளையில், இவ்வுலகம் காட்டும் தவறான வழிகளுக்கு மாற்று வழிகளாக, விவிலியம் கூறுவனவற்றை கற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

போட்டிகளை வளர்ப்பதற்கு தூண்டுதலாக இருக்கும் இன்றைய கலாச்சாரத்திற்கு நாம் கூறவேண்டிய பதில், அனைவரையும் அணைக்கக்கூடிய திறந்த கரங்களுடன் வாழப் பழகுவது என்று, திருத்தந்தை தன் உரையாடலில் எடுத்துரைத்தார்.

விசுவாசத்தில் அடுத்த தலைமுறையை வளர்ப்பது குறித்து...

தங்கள் பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் விசுவாசத்தில் எவ்விதம் வளர்க்கமுடியும் என்று, வயதில் முதிர்ந்த தம்பதியர் திருத்தந்தையைக் கேட்ட வேளையில், விசுவாசம், குடும்பங்களில் முதலில் வளர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்தத் தலைமுறையினர் மீது கருத்துக்களைத் திணிப்பதைவிட, முதியோரின் வாழ்க்கை, இளையோருக்கும், குழந்தைகளுக்கும் விசுவாசத்தை ஊட்டி வளர்க்கமுடியும் என்று கூறினார்.

புலம்பெயர்த்தோர் பிரச்சனையைக் குறித்து கேள்வி

இத்தாலி நாட்டைச் சேர்ந்த 83 வயதான ஒரு தாய், உலகெங்கும் நிலவும் புலம்பெயர்த்தோர் பிரச்சனையைக் குறித்து கேள்வி எழுப்பிய வேளையில், தான் அரசியல் பேச விரும்பவில்லை, மாறாக, இந்தப் பிரச்சனையை ஒரு மனிதாபிமானப் பிரச்சனையாகக் காண விழைவதாகக் கூறினார்.

அரசியல், மனிதாபிமானம் என்ற இருவேறு அம்சங்களைத் தெளிவுபடுத்திய அந்த அன்னைக்கு நன்றி கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையத் தெளிவை இளையோர், முதியோரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

முதியோர் பலர் இரு உலகப் போர்களைக் கண்டு பாடங்களைப் பயின்றவர்கள் ஆதலால், அவர்களிடமிருந்து போரின் அழிவுகளைக் குறித்தும், போர்களால் உருவாகும் மனிதாபிமானப் பிரச்சனைகள் குறித்தும் இளையோர் கற்றுக்கொள்வது அவசியம் என்றும் திருத்தந்தை தன் பதிலுரையில் குறிப்பிட்டார்.

வன்முறைகள், குடும்பங்களில் ஆரம்பமாகின்றன

அமெரிக்க ஐக்கிய நாட்டின் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான, 75 வயது நிறைந்த மார்ட்டின் ஸ்கொர்ஸேஸி (Martin Scorsese) அவர்கள், தான் நியூ யார்க் நகரில் வளர்ந்த காலத்தைக் குறிப்பிட்டு பேசியபோது, வீதிகளில் காணப்படும் வன்முறைச் சூழலுக்கும், கோவிலுக்குள் காணப்படும் அமைதியானச் சூழலுக்கும் உள்ள வேறுபாட்டைக் குறித்து கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறைகள், பொதுவாக, குடும்பங்களில் முதலில் ஆரம்பமாகின்றன என்பதை தெளிவுபடுத்தியபின், உலகில் காணப்படும் கொடுமைகளுக்கு, குடும்பங்களிலும், ஆலயங்களிலும் சொல்லித்தரப்பட வேண்டிய பணிவு, மென்மையான உள்ளம், பிறரோடு கொள்ளும் உண்மையான நெருக்கம் ஆகியவை மாற்று வழிகள் என்று எடுத்துரைத்தார்.

கேள்விகள் எழுப்பியவர்களுக்கும், தனக்கு செவிமடுத்தவர்களுக்கும் நன்றி கூறி, இறுதியாக அனைவருக்கும் தன் ஆசீரை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2018, 16:27