செபிக்க உதவி செபிக்க உதவி 

தியானமும் பிறர் சேவையும் நம் வாழ்வு பாதை

இறைவனுக்காக மேற்கொள்ளப்படும் பணியில் நம்மால் இயன்ற அனைத்தையும் ஆற்றுவோம். தியானமும் சேவையும் இணைந்ததாய் நம் வாழ்வு பாதை அமையட்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தியானமும் பிறர் சேவையும் நம் வாழ்வின் பாதை என்ற கருத்தை மையமாக வைத்து தன் செவ்வாய்க் கிழமை டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'இறைவன் முன்னிலையில், தியானத்தில் நம் நேரத்தைச் செலவிடுவோம், பிறர் சேவையில் இறைவனுக்காக நம்மால் இயன்ற அனைத்தையும் ஆற்றுவோம். தியானமும் சேவையும் நம் வாழ்வின் பாதை' என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

மேலும், இம்மாதம் 18ம் தேதி, கொரிய அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடுவார் என, திருப்பீட தகவல் தொடர்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

இச்சந்திப்புக்கு முந்தைய நாளான 17ம் தேதி, திருப்பீடச் செயலர், கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்கள் தலைமையில், கொரிய தீபகற்பத்தின் அமைதிக்காக வத்திக்கான்  தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் மாலை 6 மணிக்கு நிறைவேற்றப்படும் திருப்பலியிலும், அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2018, 16:43