இரயில் விபத்து நடந்த இடம் இரயில் விபத்து நடந்த இடம் 

அமிர்தசரஸ் நகர் விபத்துக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

அமிர்தசரஸ் இரயில் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவரோடும் இதயம் நிறைந்த ஒருமைப்பாட்டுணர்வை திருத்தந்தை வெளியிடுவதாகக் கூறும் திருப்பீடச் செயலரின் அனுதாபத் தந்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற இரயில் விபத்தில் பலியானவர்கள் குறித்து, திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு, இரங்கல் தந்தியொன்றை அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இந்த இரயில் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவரோடும் இதயம் நிறைந்த ஒருமைப்பாட்டுணர்வை திருத்தந்தை வெளியிடுவதாகக் கூறும் திருப்பீடச் செயலரின் செய்தி, உயிரிழந்தோர், தங்கள் நெருங்கிய உறவுகளை இழந்தோர், காயமடைந்தோர், அனைவருக்கும், திருத்தந்தை அவர்கள், தன் செப உறுதியை வழங்குவதாகவும், பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும், இறைவனின் குணமளிக்கும் ஆசீரையும், பலத்தையும், அமைதியையும் வேண்டுவதாகவும், எடுத்துரைக்கிறது.

இதற்கிடையே, இவ்விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோர், மற்றும், உறவினர்களை இழந்தோர், அனைவருக்கும், செப உறுதியை வழங்கி, இந்திய ஆயர் பேரவை, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அமிர்தசரஸ் நகருக்கருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இராவண உருவ பொம்மை எரிக்கப்படுவதை, இரயில் தண்டவாளங்கள் அருகே நின்று  பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது விரைவு வண்டியொன்று மோதியதில், 61 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும், 72 பேர் காயமடைந்துள்ளனர் என்று, ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2018, 17:13