பிரேசிலின் அமேசான் பகுதி பிரேசிலின் அமேசான் பகுதி 

எல்லாருக்கும் பூமியின் மதிப்புமிக்க வளங்கள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கு, வாழ்வின் அடிப்படை பொருளான தண்ணீர் பாதுகாக்கப்பட்டு, அது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைப்பதற்கு வழியமைக்கப்பட வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

"நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கு, முக்கியமாக, வாழ்வின் அடிப்படை பொருளான தண்ணீர் பாதுகாக்கப்பட்டு, அது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைப்பதற்கு வழியமைக்கப்படும் நம் முயற்சிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துவாராக" என்ற சொற்களை, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

செப்டம்பர் 1, இச்சனிக்கிழமையன்று, நான்காவது ஆண்டாக, இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாள் கடைப்பிடிக்கப்பட்டவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த உலக செப நாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தொழிலதிபர்கள் சந்திப்பு

மேலும், இந்த உலக செப நாளையொட்டி உரோம் நகரில் கூட்டம் நடத்திய, ஏறக்குறைய நூறு தொழிலதிபர்களை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் நீடித்த நிலையான வளரச்சிக்கு தங்களை அர்ப்பணித்துள்ள இந்த தொழிலதிபர்களை ஊக்குவித்து பாராட்டினார்.

நாம் ஒவ்வொருவரும், பிறருக்கும், நம் பூமிக்கோளத்தின் வருங்காலத்திற்கும் பணியாற்ற கடமைப்பட்டிருக்கிறோம் என்றும், பொருளாதாரமும், மனிதரைச் சுரண்டி, அவரின் வளங்களை அபகரிப்பதாக இல்லாமல், அது, மனிதருக்குப் பணியாற்றுவதாய் இருக்க வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

இக்கால தொழில்நுட்ப வாய்ப்புகள், வறுமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதாயும் அமைய வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, இக்காலத்திய ஆண்களும், பெண்களும், தாங்கள், படைத்தவராம் இறைவனின் பிள்ளைகள் என்பதை ஏற்று, இப்பூமியின் மதிப்புமிக்க வளங்கள், எல்லாருடனும் பகிரப்பட, தெளிவான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.

இந்த தொழிலதிபர்களின் பணிகளை இறைவன் ஆசிர்வதிக்குமாறு செபித்த திருத்தந்தை, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2018, 14:22