புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 

பால்டிக் நாடுகளுக்கு திருத்தந்தை நன்றி

பால்டிக் நாடுகளில் எனக்கு இனிய வரவேற்பளித்த இம்மூன்று நாடுகளின் அரசுத்தலைவர்கள் மற்றும், அரசு அதிகாரிகளுக்கு நன்றி - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளுக்கு மேற்கொண்ட நான்கு நாள் திருத்தூதுப் பயணத்தை செப்டம்பர் 25, இச்செவ்வாயன்று நிறைவுசெய்து, அன்று இரவு 8.20 மணியளவில் உரோம் சம்ப்பினோ விமான நிலையம் வந்திறங்கினார். செப்டம்பர் 26, இப்புதன் காலையில் வழங்கிய தனது வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரையில், இத்திருத்தூதுப் பயணம் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். உரோம் நகரில் இப்புதன் காலையில் குளிர்காற்றும், அதேநேரம், சூரியனின் வெண்கதிர்களும் பளிச்சென வீசிக்கொண்டிருக்க, இம்மறைக்கல்வியுரை, வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் இடம்பெற்றது.

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர், சகோதரிகளே, லித்துவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகள், சுதந்திரம் அடைந்ததன் நூறாம் ஆண்டையொட்டி, அந்நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளேன். இம்மூன்று நாடுகளும், முதலில் நாத்சி, பின்னர் சோவியத் ஆகியவற்றின் ஆக்ரமிப்பின் நுகத்தடியின்கீழ் துன்புற்றுள்ளன. இம்மக்கள் கடுமையாய் துன்புற்றதால், ஆண்டவரும் அவர்களை கனிவுடன் நோக்கியுள்ளார். எனக்கு இனிய வரவேற்பளித்த இம்மூன்று நாடுகளின் அரசுத்தலைவர்கள் மற்றும், அரசு அதிகாரிகளுக்கு நன்றி. இந்தத் திருஅவை நிகழ்வு தயாரிப்புகளில் ஒத்துழைத்த ஆயர்களுக்கும் நன்றி. நற்செய்தியின் மகிழ்வையும், இரக்கம் மற்றும் கனிவின் புரட்சியையும், மீண்டும் அறிவிக்கும் நோக்கத்தை இந்தப் பயணம் கொண்டிருந்தது. ஏனெனில், கடவுளன்பும், பிறரன்பும் இன்றி, சுதந்திரம் மட்டும் வாழ்வுக்கு முழு அர்த்தத்தை தர இயலாது. நற்செய்தி, நம் துன்பவேளைகளில், உறுதிப்படுத்தி, விடுதலைக்கான போராட்டத்தைத் தாங்கிப் பிடிக்கின்றது. சுதந்திரத்தின் நேரங்களில், அது உப்பாக இருந்து, ஒவ்வொரு நாள் வாழ்வில் மணத்தை அளித்து, புறக்கணிப்பு மற்றும் தன்முனைப்பிலிருந்து தடுக்கின்றது. வில்நியூஸ் நகரில் இளையோரைச் சந்தித்தவேளையில், இயேசு கிறிஸ்துவே நம் நம்பிக்கை என்பதை நன்றாக உணர முடிந்தது.  ரீகா நகரில், வயது முதிர்ந்தோரைச் சந்தித்தபோது, நம்மைத் தாங்கிப் பிடிக்கும் பொறுமை மற்றும் நம்பிக்கைக்கு இடையேயுள்ள தொடர்பை வலியுறுத்தினேன். இந்த நம்பிக்கையே, அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும் குருத்துவ மாணவர்களை உறுதிப்படுத்தி, பல மறைசாட்சிகள் கடவுளுக்குச் சாட்சியம் பகரச் செய்துள்ளது. காலங்கள் கடந்துள்ளன. பல்வேறு சர்வாதிகார அரசுகள் வந்துபோயுள்ளன. இவ்வேளையில், வில்நியூசில், விடியலின் வாயிலுக்கு மேலே, இரக்கத்தின் அன்னை மரியா, உறுதியான நம்பிக்கை மற்றும் ஆறுதலின் அடையாளமாக, தம் மக்களைத் தொடர்ந்து பாதுகாத்து வருகிறார். கவுனாஸ், அக்லோனா, தாலின் ஆகிய மூன்று நகரங்களில் நிறைவேற்றப்பட்ட திருப்பலி கொண்டாட்டங்களில், விசுவாசிகள், நம் நம்பிக்கையாகிய கிறிஸ்துவுக்கு, ஆகட்டும் என்பதை, புதுப்பித்தனர். ஏனெனில், இந்த விசுவாசிகளின் இதயங்களில், இறைவன் திருமுழுக்கின் அருளை உயிர்த்துடிப்புள்ளதாக மாற்றியுள்ளார்.  

இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பால்டிக் நாடுகளின் திருத்தூதுப் பயணம் பற்றி உரையாற்றிய பின்னர், இந்த மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தினார். மேலும், சீன மக்கள் எல்லாருக்கும், அமைதி எனும் கொடையை இறைவன் வழங்குமாறு செபிப்போம் என்று, அனைவரையும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். சீனாவில் ஆயர்கள் நியமனம் குறித்து, சீன மக்கள் குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே, செப்டம்பர் 22, சனிக்கிழமையன்று கையெழுத்திடப்பட்டுள்ள ஓர் இடைக்கால ஒப்பந்தம், கடந்தகால காயங்களைக் குணப்படுத்தவும், சீன கத்தோலிக்கரின் முழு ஒன்றிப்பை ஊக்குவிக்கவும் உதவுவதற்குச் செபியுங்கள் என்றும் திருத்தந்தை கூறினார். பின்னர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2018, 15:23