ஈராக், சிரியாவில் பிறரன்பு பணியாற்றும் அமைப்புகள் சந்திப்பு ஈராக், சிரியாவில் பிறரன்பு பணியாற்றும் அமைப்புகள் சந்திப்பு  

சமுதாயம் அமைதிக்காகத் தொடர்ந்து உழைக்க அழைப்பு

பல ஆண்டுகளாக, இரத்தம் சிந்தும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சிரியா மற்றும் அவற்றின் அண்டை நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமை மிகுந்த கவலை தருகின்றது - திருத்தந்தை

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இரத்தம் சிந்தும் ஆயுத மோதல்களால், கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ள மக்கள், தங்களின் சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாகத் திரும்புவதற்கும், அவர்களின் வருங்காலத்தை உறுதிசெய்வதற்கும், போர்கள் நிறுத்தப்பட்டு, அமைதிக்காக உழைப்பதற்கும், உலக சமுதாயம் எடுத்துவரும் முயற்சிகள் புதுப்பிக்கப்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில், தன்னைச் சந்திக்க வந்திருந்த, ஈராக், சிரியா மற்றும் அண்டை நாடுகளில் பிறரன்பு பணியாற்றும் கத்தோலிக்க அமைப்புகளின் ஏறத்தாழ 150 பிரதிநிதிகளிடம் இவ்வாறு கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அழிவுகளையும், மரணத்தையும், சிதைந்த கட்டடங்களையுமே பார்த்துள்ள புலம்பெயர்ந்தோரின் கண்ணீரைத் துடைக்குமாறும் விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, போர்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான மக்களின் தேவைகளை, உலகளாவிய சமுதாயம் புறக்கணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பல ஆண்டுகளாக சண்டைகள் இடம்பெறும் ஈராக், சிரியா மற்றும் பிற நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, தான் தொடர்ந்து செபிப்பதாகவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஈராக், சிரியா மற்றும் ஏனைய அண்டை நாடுகளில் பணியாற்றும் அனைத்து பிறரன்பு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, நற்செய்தியின் ஒளி, முதலில் பரவிய இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் இருப்பு மறையக்கூடிய ஆபத்தை எதிர்கொள்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரதிநிதிகள் குழுவுடன் வந்திருந்த, ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அமைப்பின் உயர் இயக்குனர் ஃபிலிப்போ கிராந்தி அவர்களுக்கும், அந்த அமைப்பு புலம்பெயர்ந்தோர்க்கு ஆற்றிவரும் பணிகளுக்கும் நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடம், மற்ற தலத்திருஅவைகளுடன் இணைந்து, இந்தக் கிறிஸ்தவ சமூகங்களின் வருங்காலத்திற்கு மிகவும் கவனமாயப் பணியாற்றி வருகின்றதென்றும், இப்பகுதி மக்களுடன் அகிலத்திருஅவையும், தன் செபங்களாலும், பிறரன்பு உதவிகளாலும் ஆதரவளித்து வருகின்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவை, திருப்பீட செயலகம், கீழை வழிபாட்டுமுறை பேராயம் ஆகிய மூன்றும் இணைந்து, உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், இவ்வியாழன், இவ்வெள்ளி தினங்களில் இரண்டு நாள்கள் கூட்டத்தை நடத்தின. இக்கூட்டத்தில், ஈராக், சிரியா மற்றும் அவற்றின் அண்டை நாடுகளில் கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகள் ஆற்றிவரும் பணிகள் பற்றி சீர்தூக்கிப் பார்க்கப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2018, 16:20