திருத்தந்தையின் மூவேளை செப உரை300918 திருத்தந்தையின் மூவேளை செப உரை300918 

பிரிவுகளால் உருவாகும் கருத்துத் திணிப்புகள்

நாம்-நம்மைச் சாராதவர் என்ற பாகுபாடுகள், ஒவ்வொரு சபையிலும் உருவாகும்போது, அவரவரது கருத்துக்கள், மற்றவர்கள் மீது திணிக்கப்படுகின்றன - திருத்தந்தையின் எச்சரிக்கை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

"நாம்-நம்மைச் சாராதவர்" என்று, இயேசுவின் சீடர்களிடம் காணப்பட்ட பாகுபாடுகள், கிறிஸ்தவ வரலாற்றில், பல காலக்கட்டங்களில் வெளிப்பட்டதென்றும், இன்றும், அத்தகையப் பாகுபாடுகள் நம்மிடையே நிலவுகின்றன என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

செப்டம்பர் 30, இஞ்ஞாயிறு நண்பகலில் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில், இந்த ஞாயிறு நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வை மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நாம்-நம்மைச் சாராதவர் என்ற பாகுபாடுகள், ஒவ்வொரு சபையிலும் உருவாகும்போது, அவரவரது கருத்துக்கள் மற்றவர்கள் மீது திணிக்கப்படுகின்றன என்பதை ஓர் எச்சரிக்கையாகக் கூறியத் திருத்தந்தை, திருஅவையானது, கருத்துத் திணிப்பால் அல்ல, மாறாக, மற்றவர்களை, தங்கள் வாழ்வால் ஈரப்பதன் வழியே வளரவேண்டும் என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறிய கருத்தை நினைவுகூர்ந்தார்.

நண்பர் - பகைவர், நாம் - அவர்கள், உள்ளிருப்பவர் - வெளியில் இருப்பவர் என்ற பாகுபாடுகளை விட்டு வெளியேறவேண்டும் என்று, இயேசு, இன்றைய நற்செய்தியின் வழியே, அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறியத் திருத்தந்தை, நாம் முற்றிலும் எதிர்பாராதச் சூழல்களில், இறைவன் செயலாற்றி, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் என்று எடுத்துரைத்தார்.

பொறாமை, குறுகிய மனம் ஆகியவற்றை களைந்து, நமது எல்லைகளை விரிவாக்க, தூய ஆவியாரின் துணை வேண்டி, அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம் என்று, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்த திருத்தந்தை, இறுதியில், வளாகத்தில் கூடியிருந்தோருக்கு தன் ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2018, 13:01