தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை 

செப்டம்பர், அக்டோபரில் திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்

முத்திப்பேறு பெற்றவர்களான, திருத்தந்தை ஆறாம் பவுல், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ உட்பட எழுவர், அக்டோபர் 14ல், புனிதர்கள் என அறிவிக்கப்படும் திருப்பலியை திருத்தந்தை நிறைவேற்றுவார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நிறைவேற்றும்  முக்கிய திருவழிபாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான, பேரருள்திரு குய்தோ மரினி.

முத்திப்பேறு பெற்ற அருள்பணியாளர் Giuseppe Puglisi அவர்கள், மறைசாட்சியானதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, செப்டம்பர் 15, சனிக்கிழமையன்று, தென் இத்தாலியின் பலேர்மோ நகருக்கு, மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 22, சனிக்கிழமை முதல், செப்டம்பர் 25 செவ்வாய் வரை, லித்துவேனியா, லெத்தோனியா, எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

15வது உலக ஆயர்கள் மாமன்றம்

வருகிற அக்டோபர் 3, புதன்கிழமை, காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், 15வது உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகளுடன் இணைந்து, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி, அந்த மாமன்றத்தை ஆரம்பித்து வைப்பார், திருத்தந்தை பிரான்சிஸ். “இளையோர், விசுவாசம், மற்றும் அழைப்பை தெளிந்து தேர்தல்” என்ற தலைப்பில், இந்த 15வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும்.

அக்டோபர் 14, ஆண்டின் 28ம் ஞாயிறன்று, காலை பத்து மணி, 15 நிமிடத்திற்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை ஆறாம் பவுல், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, பிரான்செஸ்கோ ஸ்பினெல்லி, வின்சென்சோ ரொமானோ, மரிய கத்ரீனா காஸ்பர், குழந்தை தெரேசாவின் நசாரியா இஞ்ஞாசியா, நூன்சியோ சுல்பிரஸ்ஸியோ ஆகிய ஏழு முத்திப்பேறு பெற்றவர்களை புனிதர்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் திருப்பலியை நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

அக்டோபர் 28, ஆண்டின் 30ம் ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தை நிறைவு செய்யும் திருப்பலியை நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2018, 15:41