உலக குடும்பங்கள் மாநாட்டின் அதிகாரப்பூர்வ இலச்சினை உலக குடும்பங்கள் மாநாட்டின் அதிகாரப்பூர்வ இலச்சினை 

குடும்பத்தின் நற்செய்தி, உலகுக்கு மகிழ்வு

“குடும்பத்தின் நற்செய்தி, உலகுக்கு மகிழ்வு” என்ற தலைப்பில் நடைபெறும் உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு, ஆகஸ்ட் 25, சனிக்கிழமையன்று அயர்லாந்து செல்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

“அன்பு, அனைத்து இன்னல்களையும் மேற்கொள்கின்றது, அவற்றை ஏற்று வாழ, அன்பு நமக்கு வலிமையளிக்கின்றது” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியானது.

டப்ளின் உலக குடும்பங்கள் மாநாடு

மேலும், “குடும்பத்தின் நற்செய்தி, உலகுக்கு மகிழ்வு” என்ற தலைப்பில், ஆகஸ்ட் 21, வருகிற செவ்வாயன்று டப்ளின் நகரில் தொடங்கும், 9வது உலக குடும்பங்கள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு மாலை செப வழிபாடும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் இணைந்து, உலக குடும்பங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவரிடம் மன்றாடவிருக்கும் இதே மாதிரியான செப வழிபாடு, அதே நாளில், அயர்லாந்தின் எல்லா மறைமாவட்டங்களிலும் நடைபெறும்.

ஆகஸ்ட் 21ம் தேதி மாலை, கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டோடு தொடங்கும் 9வது உலக குடும்பங்கள் மாநாடு, ஆகஸ்ட் 26ம் தேதி ஞாயிறு திருத்தந்தையின் திருப்பலியோடு நிறைவடையும்.

இந்த மாநாட்டின் ஒரு கட்டமாக, டப்ளின் அரச கழக மையத்தில், குடும்பமும் விசுவாசமும், குடும்பமும் அன்பும், குடும்பமும் நம்பிக்கையும் ஆகிய தலைப்புகளில், மூன்று நாள்கள் மேய்ப்புப்பணி கருத்தரங்குகளும் நடைபெறும்.

இந்த மாநாட்டை முன்னிட்டு, முதல்முறையாக, பெண்களின் தலைமைத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது. அயர்லாந்தில் புகழ்பெற்ற ஊடகவியலாளர் Norah Casey, அமெரிக்க ஐக்கிய நாட்டின், ஒரு வர்த்தக நிறுவனத்தின் Susan Ann Davis  ஆகிய இருவரும், இந்தக் கருத்தரங்கிற்கு, தலைமை வகிப்பார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2018, 10:22