கத்தோலிக்க சட்ட அமைப்பாளர்களைச் சந்தித்த திருத்தந்தை கத்தோலிக்க சட்ட அமைப்பாளர்களைச் சந்தித்த திருத்தந்தை 

கத்தோலிக்க சட்ட அமைப்பாளர்களுடன் திருத்தந்தை

கத்தோலிக்க சட்ட அமைப்பாளர்கள், மனித மாண்பையும், மதச் சுதந்திரத்தையும் தங்கள் வாழ்வின் வழியே பறைசாற்ற அழைக்கப்பட்டுள்ளனர் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சட்ட அமைப்பாளர்களாக உலகெங்கும் பணியாற்றும் கத்தோலிக்கர்கள், திருஅவையின் படிப்பினைகளுக்கு ஏற்ப, மதச் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டங்களை வலியுறுத்தவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு பிரதிநிதிகளிடம் கூறினார்.

கத்தோலிக்க சட்ட அமைப்பாளர்களின் 9வது பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில் சந்தித்த வேளையில் இவ்வாறு கூறினார்.

மதச் சுதந்திரம் பல நாடுகளில் ஒடுக்கப்படுவதைக் குறித்து, மனித மாண்பு என்று பொருள்படும் Dignitatis Humanae என்ற ஏட்டின் வழியே, இரண்டாம் வத்திக்கான் சங்கம், 1965ம் ஆண்டில் வெளியிட்ட கருத்துக்களை, திருத்தந்தை, தன் உரையில் எடுத்துரைத்தார்.

அடிப்படைவாதப் போக்கினை, மற்றொரு அடிப்படைவாத கருத்தியல் வழியே அழிக்க இயலாது என்பதை, வலியுறுத்திப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுவாகவே, சகிப்புத்தன்மை இவ்வுலகில் வெகுவாக குறைந்து வருகிறது என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டினார்.

கத்தோலிக்க சட்ட அமைப்பாளர்கள், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரைப் போலவே, மனித மாண்பையும், மதச் சுதந்திரத்தையும் தங்கள் வாழ்வின் வழியே பறைசாற்ற அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை, திருத்தந்தை பன்னாட்டு பிரதிநிதிகளிடம் கூறினார்.

உரோம் நகரில் நடைபெற்ற, கத்தோலிக்க சட்ட அமைப்பாளர்களின் 9வது பன்னாட்டு கூட்டத்தில், உலகெங்கும் வன்முறைகளைச் சந்திக்கும் கிறிஸ்தவர்களைக் குறித்தும், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வழிமுறைகளை எடுத்துரைப்பது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2018, 15:39