இளையோருடன் திருத்தந்தை செப வழிபாடு இளையோருடன் திருத்தந்தை செப வழிபாடு 

இருளையும் மரணத்தையும் வெல்லும் வல்லமை

இயேசுவை நோக்கி அன்பு, மகிழ்வு மற்றும் நம்பிக்கையுடன் ஓடிச்செல்லுமாறு இளைஞர்களுக்கு அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இளையோர் தாங்கள் மேற்கொள்ளும் வாழ்வுப் பயணத்தில் துணிவுடன் செல்லவும், இருளில் சிக்கியிருப்போரை ஒளிக்குக் கொணரும் உதவிகள் செய்யவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இளையோரைக் கேட்டுக்கொண்டார்.

ஆகஸ்ட் 11, சனிக்கிழமை, உரோம் நகரில் கூடிவந்திருந்த 70,000த்திற்கும் அதிகமான இளையோரை, சிர்கோ மாஸ்ஸிமோ திடலில் மாலை 5 மணியளவில் சந்தித்த திருத்தந்தை, அன்பு, மகிழ்வு, மற்றும் நம்பிக்கை நிறைந்த உள்ளத்துடன், இளையோர், இயேசுவை நோக்கி ஓடவேண்டும் என்று கூறினார்.

துன்பம், தோல்வி மற்றும் மரணத்தைக் கண்டு, கிறிஸ்தவர்கள், விலகி ஓடக்கூடாது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகின் மிகப்பெரும் கொடுமை என்று கருதப்படும் மரணத்தை, இயேசு வெற்றிகொண்டதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இருளும், மரணமும், இன்றைய உலகில், எங்கும் பரவியிருப்பதைப் போன்று தோன்றினாலும், அவற்றை வெல்வதற்குத் தேவையான சக்தியை உயிர்த்த கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளார் என்பதை, இளையோர், இவ்வுலகிற்கு பறைசாற்றக் கடமைப்பட்டுள்ளனர் என்பதை, கூடியிருந்த இளையோரிடம் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2018, 20:22