சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 030520 சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 030520 

தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது பணியாற்றுவோருக்காக....

ஒரு நல்ல ஆயர், ஒவ்வோர் ஆட்டையும், அன்போடு தன்பக்கம் ஈர்ப்பார் மற்றும், ஒவ்வொருவரின் பெயரையும் அறிந்திருப்பார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, மந்தைகளைக் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துள்ள மருத்துவர்கள் மற்றும், அருள்பணியாளர்களுக்காக, மே 03, இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் சிறப்பாகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில், சாந்தா மார்த்தா இல்லத்திலுள்ள சிற்றாலயத்தில், இஞ்ஞாயிறு காலை ஏழு மணிக்கு, திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, நல்லாயன் ஞாயிறாகிய இன்று, மேய்ப்பர்களாகிய மருத்துவர்கள் மற்றும், அருள்பணியாளர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு, இறைமக்களைப் பராமரிப்பதற்கு நமக்கு உதவுவதாக என்று கூறினார்.

இத்தாலியில் கொரோனா தொற்றுக்கிருமி நோயாளிகள் மத்தியில் பணியாற்றிய மருத்துவர்களில் ஏறத்தாழ 154 பேரும், நூற்றுக்கு அதிகமான அருள்பணியாளர்களும் உயிரிழந்துள்ளதை, இஞ்ஞாயிறு திருப்பலியின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களுக்காக இன்று சிறப்பாகச் செபிப்போம் என்று கூறினார்.

இயேசு, நல்லாயன்

திருத்தூதர் பேதுரு தனது முதல் திருமடலில் (2:20-25), வழிதவறி அலையும் தன் ஆடுகளைக் காப்பாற்றும் நல்லாயனாக இயேசுவைச் சித்தரித்துள்ளார் என்றும், நற்செய்தியாளர் யோவான் (10:1-10), இயேசுவை, நல்லாயனாக மட்டுமல்ல, தம் மந்தைகள் நுழையும் வாயிலாகவும் விளக்கியுள்ளார் என்று, மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆடுகள் மேய்ப்பரை அறியும்

நற்செய்தியில் இயேசு கூறியிருப்பதுபோன்று, துரதிஷ்டவசமாக, பல போலி மேய்ப்பர்களும், ஆண்டவரின் மந்தைக்குள் நுழைந்து திருடுகிறார்கள் மற்றும், மோசடி செய்கிறார்கள் என்றும், அவர்கள் மந்தையின் மீது அக்கறை உள்ளவர்கள் அல்ல என்றும் கூறிய திருத்தந்தை, அத்தகைய மேய்ப்பர்களின் ஆர்வமெல்லாம், பதவி உயர்வு, அரசியல் அல்லது பணத்தின் மீது உள்ளது என்றும் கூறினார்.

ஆயினும், மந்தையானது எப்போதும் நல்ல மேய்ப்பர்கள் யார், திருடுகிறவர்கள் யார் என்பதை கண்டுகொள்கிறது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நல்ல ஆயர், தனது மந்தையால் பிரித்துப் பார்க்கப்படுகிறார் என்று எடுத்துரைத்தார்.        

மேய்ப்பர் தன் ஆடுகளுக்குச் செவிமடுப்பதால், அவற்றை வழிநடத்துவதால் மற்றும், அவற்றின் மீது அக்கறை செலுத்துவதால், மந்தை செழுமை அடைகிறது என்றும், நல்ல மேய்ப்பராம் இயேசுவைப்போல் இருக்கும் மேய்ப்பர்களிடம் மட்டுமே, ஆடுகள் தங்களை கையளிக்கின்றன என்றும், இவ்வாறு வாழ்கையில், மந்தை ஒருபோதும் தவறிழைக்காது என்றும், திருத்தந்தை கூறினார். 

இயேசுவின் முன்மாதிரி

இயேசுவின் வாழ்வுமுறையே, மேய்ப்பரின் வாழ்வுமுறையாக அமைய வேண்டும், அதற்கு மாறான வாழ்வுமுறையே கிடையாது என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, இயேசுவின் வாழ்வுமுறையை, புனித பேதுரு தனது திருமுகத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றார். 

தன் மந்தை, தன் வழிகளைப் பின்பற்றவேண்டும் என்பதற்காக, இயேசு ஆடுகளுக்காகத் துன்புற்றார், அவர் பழிக்கப்பட்டபோது பதிலுக்கு ஒருபோதும் பழிக்கவில்லை, இதுவே கனிவான பண்பு என்று விளக்கிய திருத்தந்தை, கனிவான பண்பு, ஒரு நல்ல ஆயரின் அடையாளங்களில் ஒன்று என்று கூறினார்.

ஒரு மேய்ப்பர் கனிவுள்ளம் கொண்டவராய் இல்லாதிருந்தால், அவர் எதையோ மறைக்கிறார், ஏனெனில் கனிவுள்ளம், தன்னை இருப்பதுபோலவே வெளிப்படுத்தும் என்றும், ஒரு நல்ல ஆயர், ஒவ்வோர் ஆட்டையும், அன்போடு தன்பக்கம் ஈர்ப்பார் மற்றும், ஒவ்வொருவரின் பெயரையும் அறிந்திருப்பார் என்றும், மறையுரையில் திருத்தந்தை கூறினார். 

ஒரு நல்ல மேய்ப்பர், ஒவ்வோர் ஆடும் அது மட்டுமே இருப்பதுபோன்று, அனைத்து ஆடுகள் மீதும் அக்கறை காட்டுவார் என்று மறையுரையைத் தொடர்ந்து ஆற்றிய திருத்தந்தை, உண்மையில் நாளின் இறுதியில், ஓர் ஆடு வீடு திரும்பவில்லையென்று உணர்ந்தால், அவர் எவ்வளவு களைப்பாய் இருந்தாலும், அந்த ஆட்டைத் தேடுவதற்குச் செல்வார், இவரே நல்ல மேய்ப்பர் என்றும், இதுவே இயேசுவின் பண்பு என்றும் கூறினார்.

இந்த ஞாயிறு, அமைதி, இரக்கம், மற்றும் கனிவின் ஞாயிறு, ஏனெனில், நம் ஆயர் நம்மைப் பராமரிக்கிறார், ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை என்று கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2020, 10:44
அனைத்தையும் படிக்கவும் >