சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 100520 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 100520 

ஐரோப்பா, பன்மைத்தன்மையில் ஒன்றிணைந்து வளர...

ஆயர்களின் முதல் பணி இறைவேண்டல், அடுத்தது இறைவார்த்தையை அறிவிப்பது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

ஐரோப்பிய ஒன்றியம் உருவாகக் காரணமான, Robert Shuman அவர்கள் அறிக்கை வெளியிட்ட எழுபதாம் ஆண்டு நிறைவு, இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதன் 75ம் ஆண்டு நிறைவு ஆகிய இரு நாள்களைக் குறிப்பிட்டு, ஐரோப்பாவுக்காக ஆண்டவரை மன்றாடுவோம் என்று, மே 10, இஞ்ஞாயிறு காலையில் திருப்பலியை ஆரம்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருப்பலியைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மக்களும், பன்மைத்தன்மையில் ஒன்றிப்பில் வளருவதற்கென, உடன்பிறந்த உணர்வுடன்கூடிய ஒன்றிப்பில், ஐரோப்பா ஒன்றிணைந்து வளர, அக்கண்டத்திற்காகச் செபிப்போம் என்று கூறினார்.

மறையுரை

தம் தந்தையிடம் நமக்காகப் பரிந்துரைக்கும் இயேசுவின் பங்கு பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்திப் பகுதி (யோவா.14:1-12) மற்றும், பேதுரு, திருத்தூதர்களின் பங்கு பற்றிக் கூறும் முதல் வாசகத்தின் (தி.ப.6:1-7). கருத்துக்களை அடிப்படையாக வைத்து மறையுரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது திருத்தூதர்களின் வழிவருகின்ற ஆயர்களின் பணியோடு ஒத்திணங்கிச் செல்கின்றது என்று கூறினார்.

ஆயர்களின் முதல் பணி இறைவேண்டல், அடுத்தது இறைவார்த்தையை அறிவிப்பது என்று கூறிய திருத்தந்தை, இயேசுவின் பரிந்துரையின் பங்கு பற்றி விளக்கினார்.

இயேசுவின் பரிந்துரை

யோவான் நற்செய்தியில், பிரிவு 14ன் முதல் பகுதி, இயேசு நம் சார்பில் தம் தந்தையிடம் பரிந்துபேசுவது பற்றி விவரித்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இறைத்தந்தை நம்மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பது பற்றி, இயேசு பல நேரங்களில் பேசியுள்ளார் என்று கூறினார்.

தம் தந்தை, வானத்துப் பறவைகளையும், காட்டில் மலரும் லில்லிகளையும் பராமரிப்பது போன்று, நம்மையும் பராமரிக்கின்றார் என்று, இயேசு தம் தந்தையைப் பற்றிக் கூறியுள்ளார் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்(யோவா.14,13-14)" என்று இயேசு சொல்லியிருப்பதன் வழியாக, அவர் இறைவேண்டலின் எல்லையற்ற வல்லமையின் கதவுகளைத் திறந்து விடுகிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

இறைவேண்டலுக்கு துணிச்சல் தேவைப்படுகின்றது என்றும், அதே துணிச்சல் நற்செய்தியை அறிவிப்பதற்கும் தேவைப்படுகின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, இதற்கு ஆபிரகாம், மோசே ஆகியோரை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

சோதோமை (தொ.நூ.18:16-33) அழிப்பதாக ஆண்டவர் கூறியபோது ஆபிரகாம் அவரை பலமுறை மன்றாடியது, தன் மக்களை அழித்தொழிக்கப் போகிறேன் என்று கடவுள் மோசேயிடம் (வி.ப.32:7-14) கூறியபோது, மோசே அவரிடம் மன்றாடியது ஆகிய இரு பகுதிகளை எடுத்துக்காட்டாக திருத்தந்தை குறிப்பிட்டார்.

திருத்தொண்டர்கள், ஆயர்கள்

மேலும், இஞ்ஞாயிறு முதல் வாசகம் பற்றிய மறையுரைச் சிந்தனைகளையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனமாற்றமடைந்த கிரேக்க மொழி பேசுவோர், தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப்பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று முறையிட்டபோது, பேதுரு, தூய ஆவியால் தூண்டப்பட்டவராய், இந்த  மாதிரியான காரியங்களைக் கவனிப்பதற்குத் திருத்தூதர்களுக்கு நேரமில்லை, அதனால் அவர் திருத்தொண்டர்களை நியமிக்குமாறு கூறினார் என்றார், திருத்தந்தை.

இந்த நியமனம், அந்த முறையீட்டிற்குத் தீர்வு கண்டது என்றும், தேவையில் உள்ள மக்கள் நன்கு கவனிக்கப்பட வேண்டும், அப்போதுதான், நாங்கள், இறைவேண்டலுக்கும், இறைவார்த்தையை அறிவிப்பதற்கும் எங்களை அர்ப்பணிக்க முடியும் என்று பேதுரு கூறினார் என்றுரைத்த திருத்தந்தை, ஆயர்களின் முதன்மைக் கடமை பற்றி விளக்கினார்.

ஆயர்களின் முதன்மைக் கடமை

ஆயர்களின் முதன்மைக் கடமை இறைவேண்டல் செய்வது என்றும், இயேசு தம் மக்கள் சார்பாகப் போராடுவதற்கு தந்தையிடம் சென்றதுபோன்று, நம்பிக்கை மற்றும், துணிவோடு, இறைத்தந்தையிடம் முதலில் செல்ல வேண்டியவர்கள், ஆயர்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.  

இறைவேண்டல் நேரத்தை மற்ற காரியங்கள் நிரப்பினால், அது சரியல்ல என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, கடவுளே செயலாற்றுகிறவர், நாம் மிகச்சிறிதளவே ஆற்றுகிறோம், அவர் தம் திருஅவையில் காரியங்களை ஆற்றுகிறார், திருஅவை வளரச் செய்வது இறைவேண்டலே என்றும் கூறினார்.

இந்த உண்மையானது, ஏனெனில், “நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன் (யோவா.14,13-14)" என்று, இயேசு அளித்திருக்கும் உறுதியில் தெரிகின்றது  என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இத்தகைய துணிவுமிக்க செபத்திலே, இறைவேண்டலிலே, திருஅவை முன்னேற்றம் காண்கிறது, ஏனெனில், இறைத்தந்தையிடம் இவ்வாறு செல்லாமல், தன்னால் வாழ இயலாது என்பதை திருஅவை அறிந்திருக்கிறது என்று கூறி, மே 10, இஞ்ஞாயிறன்று மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2020, 12:44
அனைத்தையும் படிக்கவும் >