சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி 030420 சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி 030420 

அன்னை மரியாவின் துயரங்களை நினைத்துப் பார்ப்போம்

கோவிட்-19 கிருமி பரவல் தடைசெய்யப்பட்டபின் உருவாகும் பிரச்சனைகள் பற்றி திருப்பலியில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, மறையுரையில், வியாகுல அன்னை, நம் அன்னையாக இருப்பதற்கு நன்றி சொல்வோம் என்று கூறினார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளை நோய்க்குப்பின் உருவாகக்கூடிய, வறுமை, வேலைவாய்ப்பின்மை, பசி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ஏற்கனவே கவலையடையத் தொடங்கியுள்ள பலர் பற்றி நினைவுகூர்ந்த அதேவேளை, இப்பிரச்சனைகள் தீர்வதற்கு இன்று உதவிவரும் அனைவருக்காகவும் மன்றாடுவோம், வருங்காலத்தில் நமக்கு உதவி செய்கின்றவர்களையும் நினைப்போம் என்று, இவ்வெள்ளி காலையில் திருப்பலியைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 03 இவ்வெள்ளி காலையில் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, தவக்காலத்தின் ஆறாவது வாரத்தில், பாடுகளின் வெள்ளியன்று திருஅவை சிறப்பிக்கும் அன்னை மரியாவின் துயரங்கள் பற்றி மறையுரையாற்றினார்.

இன்று நம் அன்னையின் துயரங்கள் பற்றி நினைத்துப் பார்ப்பது நமக்கு நன்மை பயக்கும் என்றும், அன்னையாக இருப்பதற்கு அவர் இசைவு தெரிவித்ததற்கு நாம் அவருக்கு நன்றி கூருவோம் என்றும், மறையுரையில் திருத்தந்தை கூறினார்..

ஏழு துயரங்கள்

நம் கிறிஸ்தவ பக்தி முயற்சியில் அன்னை மரியாவின் ஏழு துயரங்கள் உள்ளன என்றுரைத்த திருத்தந்தை, அந்த ஏழு துயரங்களையும் ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டார்.

இயேசு பிறந்த நாற்பது நாள்களுக்குப்பின், உன் இதயத்தையும் ஒரு வாள் உடுருவும் என்று, சிமியோன் இறைவாக்காகக் கூறியது, தன் மகனைக் காப்பாற்றுவதற்காக எகிப்துக்குத் தப்பித்து ஓடியது, எருசலேம் ஆலயத்தில் இயேசு காணாமல்போனது, கல்வாரிக்குச் செல்லும் வழியில், தன் மகனைச் சந்தித்தது, தன் மகன் கல்வாரியில் உயிர்விட்டது, மகனின் உடலை தன் மடியில் கிடத்தியது, மகனின் திருவுடல் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது ஆகிய ஏழு துயரங்களையும் ஒவ்வொன்றாகக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.    

பொழுது சாய்ந்தவேளையில் மூவேளை மன்றாட்டைச் செபிக்கையில், திருஅவையின் அன்னையின் ஏழு துயரங்களையும் நினைத்துச் செபிப்பது நமக்கு நன்மையைக் கொணரும் என்றும், இந்த அன்னை, எவ்வளவு வேதனையோடு நம் அனைவரையும் பெற்றெடுத்தார் என்றும், திருத்தந்தை எடுத்துரைத்தார்.  

மரியா, அன்னையாக

நம் அன்னை தனக்கென எதையும் ஒருபோதும் கேட்டதில்லை என்பதை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, அவர், அன்னையாக இருப்பதற்கு மட்டுமே இசைவு தெரிவித்தார், அவர் இயேசுவை, ஒரு சீடராகவே பின்தொடர்ந்தார் என்று கூறினார்.

 மரியா, தன் நண்பர்கள், பக்தியுள்ள பெண்கள் ஆகியோருடன் இயேசுவைப் பின்சென்றார், அவர், இயேசு சொல்வதற்குச் செவிமடுத்தார் என நற்செய்தி நமக்குக் காட்டுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

அன்னை மரியா, எனது அன்னை, ஏனெனில் அவர் ஓர் அன்னை, இந்தப் பெயரே அவர் சிலுவையடியில் இயேசுவிடமிருந்து பெற்றார், எனவே அந்த அன்னையைக் கவுரவிப்போம் என்று மறையுரையாற்றிய திருத்தந்தை, அந்த அன்னை, இயேசுவிடமிருந்து எந்த ஒரு சிறப்புப் பெயரையும் பெற விரும்பவில்லை என்று கூறினார்.

மரியா, இயேசுவின் அன்னையாக இருக்கும் கொடையையும், அன்னையாக, நம் அன்னையாக இருந்து, நமக்குத் துணைவரும் கடமையையும் பெற்றார், ஏறத்தாழ மீட்பராக அல்லது உடன்மீட்பராக இருப்பதை அவர் தனக்கென கேட்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை, மீட்பர் ஒருவரே, அந்தப் பெயர் அதற்குமேல் அதிகரிக்கப்படாது  என்றும் திருத்தந்தை கூறினார்.

அன்னை மரியா, ஓர் அன்னையாக இருப்பதற்கு நன்றி சொல்வோம், சிறிதுநேரம் நின்று, நம் அன்னையின் வேதனைகளையும், துயரங்களையும் நினைத்துப் பார்ப்போம் என்று, மறையுரையின் இறுதியில் விசுவாசிகள் அனைவரையும் கேட்டுக்கொண்டார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.  

வழக்கம்போல், இத்திருப்பலி நிறைவு பெறுவதற்குமுன் திருநற்கருணை ஆராதனை நடைபெற்றது. அதன்பின் திருத்தந்தை திருநற்கருணை ஆசீர் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2020, 12:11
அனைத்தையும் படிக்கவும் >