சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாயலத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாயலத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலி  (ANSA)

வெளவால்களைப் போல் இருளில் வாழவேண்டாம் - திருத்தந்தை

ஐரோப்பா என்ற எண்ணத்திற்கு வித்திட்ட மூதாதையர் கொண்டிருந்த உடன்பிறந்த உணர்வு என்ற கனவு, தற்போதைய ஐரோப்பாவில் நிலவ செபிப்போம் – திருத்தந்தையின் திருப்பலி கருத்து

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஐரோப்பா என்ற எண்ணத்திற்கு வித்திட்ட மூதாதையர் கொண்டிருந்த உடன்பிறந்த உணர்வு என்ற கனவு, தற்போதைய ஐரோப்பாவில் நிலவ செபிப்போம் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில் கூறினார்.

ஏப்ரல் 22, புதன் காலை ஏழுமணிக்கு சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாயலத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலி, உலகெங்கும் பல்வேறு ஊடகங்கள் வழியே ஒளிபரப்பான வேளையில், இத்திருப்பலியில் வாசிக்கப்பட்ட யோவான் நற்செய்திப் பகுதியை தன் மறையுரையின் மையமாக்கினார்.

ஓர் இறையியல் ஆய்வுத்தொகுப்பு

பரிசேயரான நிக்கதேமுக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்ததாக, யோவான் நற்செய்தி 3ம் பிரிவில் கூறப்பட்டுள்ள உரையாடல், உண்மையிலேயே ஓர் இறையியல் ஆய்வுத்தொகுப்பு என்று தன் மறையுரையின் துவக்கத்தில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பகுதியில், நற்செய்தியின் பறைசாற்றல், மறைக்கல்விப் பாடங்கள், இறையியல் சிந்தனைகள், ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன என்று கூறினார்.

இந்தக் கருவூலத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய பகுதியில் இரு சிந்தனைகளை மட்டும் பகிர்ந்துகொள்ளப் போவதாகக் கூறியத் திருத்தந்தை, "தன் மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" என்ற இறைவாக்கியத்தை முதல் சிந்தனையாகவும், "மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்" என்ற இறைவாக்கியத்தை இரண்டாவது சிந்தனையாகவும் வழங்கினார்.

மதியற்றதாகத் தோன்றும் அன்பு

உலகின்மீது இறைவன் கொண்டுள்ள அன்பு, மதியற்றதாகத் தோன்றும் அன்பாக உள்ளது என்று ஒரு புனிதர் கூறியதாக எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அன்பு, சிலுவை மரணத்திற்கு தன்னையே கையளித்த தம் ஒரே மகனையே உலகிற்கு அனுப்பிவைத்ததில் வெளியானது என்று கூறினார்.

சிலுவையை ஓர் அழகிய, பழமைவாய்ந்த அல்லது, நவீன நினைவுப்பொருளாகக் காண்பதற்குப் பதிலாக, கடவுளின் அன்பைக் கூறும் ஒரு நூலாக அதைக் கருதவேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

மடமையாகத் தெரியும் சிலுவை

இந்தச் சிலுவை, இவ்வுலகைப் பொருத்தவரை மடமையாகத் தெரியும் என்று கூறிய புனித பவுலின் கருத்துக்களை, தன் மறையுரையில் நினைவுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'யூதருக்கு தடைக்கல்லாகவும், பிற இனத்தாருக்கு மடமையாகவும்' (காண்க. 1 கொரி. 1:23) இருந்த அந்தச் சிலுவையை பறைசாற்ற திருத்தூதர் பவுல் துணிந்தார் என்று கூறினார்.

மெளனமாக இன்று சிலுவையைக் காணவும், அங்கு தன்னையே முழுமையாகக் கையளித்த கிறிஸ்துவை காண்பதால், தந்தை இவ்வுலகின் மீது கொண்ட அன்பை உணரவும் முயல்வோம் என்ற எண்ணத்தை தன் முதல் கருத்தாக திருத்தந்தை வெளியிட்டார்.

"ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்" (யோவான் 3:19) என்ற இறைவாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தன் இரண்டாவது கருத்தைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இருளுக்குப் பழகிப்போனால், ஒளியில் வாழ இயலாது

நாம் இருளுக்குப் பழகிப்போனால், ஒளியில் வாழ இயலாது, ஏனெனில், அந்த ஒளி நம் கண்களைப் பார்வையிழக்கச் செய்துவிடும் என்று கூறிய திருத்தந்தை, இருளில் பறந்துதிரியும் வெளவால்களைப் போல், பல மனிதர்கள் இருளில் செயலாற்றுகின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

பாவத்தில் வாழும்போது, ஒளியிலிருந்து சிறிது, சிறிதாக விலகி, இருளில் நம்மையே உட்படுத்திக் கொள்கிறோம் என்றும், இதன் விளைவாக, ஊழல்களும், பல்வேறு தவறான எடுத்துக்காட்டுகளும் நம்மிடையே வளர்கின்றன என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார் திருத்தந்தை.

சிலுவையில் தொங்கும் இயேசுவைக் காண்பதால் இறையன்பை நாம் இன்னும் ஆழமாக உணரவும், இருளில் செயலாற்றும் வெளவால்களைப் போல் வாழாமல், ஒளியின் மக்களாய் வாழ்வதற்கும் இன்று இறையருளை வேண்டுவோம் என்ற அழைப்புடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வழங்கிய மறையுரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2020, 14:28
அனைத்தையும் படிக்கவும் >