சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

கிறிஸ்தவ அனுபவம், மெய்நிகர் அனுபவம் அல்ல - திருத்தந்தை

நாம் வாழும் இந்த முழு அடைப்பு காலத்தில் நம் இறை அனுபவங்களும், அயலவரோடு கொள்ளும் அனுபவங்களும் ஊடகங்களின் வழியே நிகழ்வதால், அவை, மெய்நிகர் அனுபவங்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது - திருத்தந்தை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 17 இவ்வெள்ளியன்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியை, கடினமான இக்காலத்தில், குழந்தையைப் பெறுவதற்காகக் காத்திருக்கும் அன்னையருக்காக ஒப்புக்கொடுத்தார்.

குழந்தை பிறப்பை எதிர்பார்த்திருக்கும் அன்னையருக்காக….

"என் குழந்தை எவ்வித உலகத்தில் வாழப்போகிறது?" என்பது, இந்த அன்னையரின் உள்ளங்களில் எழும் ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது என்று கூறிய திருத்தந்தை, இவ்வுலகம் இறைவன் என்றென்றும் அன்புகூரும் உலகம்தான், இது கட்டாயம் வேறுபட்ட ஓர் உலகமாக இருக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு இறைவன் வழங்க நாம் வேண்டிக்கொள்வோம் என்ற கருத்துடன் இத்திருப்பலியைத் துவக்கினார்.

மீன்பிடிக்கச் சென்ற சீடர்களை மையப்படுத்தி வழங்கப்பட்டிருந்த நற்செய்தியையொட்டி (யோவான் 21:1-14) சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவுடன் அவர்கள் பெற்றிருந்த சுமுகமான உறவையும், அந்த உறவு, ஒரு குழுமமாக அவர்கள் பெற்ற அனுபவம் என்பதையும் மையப்படுத்தி மறையுரையை வழங்கினார்.

சீடர்களின் அழைப்பை நினைவுறுத்தும் நிகழ்வு

பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு ஆகிய அனைத்து சீடர்களையும், அவர்கள் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில் இயேசு அழைத்ததையும், அவர்கள் தங்கள் தொழிலை, படகை, தந்தையை விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்ததையும் இந்நிகழ்வு நமக்கு நினைவுறுத்துகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

திபேரியக் கடல் அருகே நிகழ்ந்த இந்தப் புதுமையான நிகழ்வு, லூக்கா நற்செய்தி 5ம் பிரிவில் நாம் வாசிக்கும் மற்றொரு நிகழ்வை நம் நினைவுக்குக் கொணர்கிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் செயல்பாடுகளுக்கு சீடர்கள் பழக்கப்பட்டிருந்ததாலும், இவ்விரு புதுமைகளும் ஒரே வகையில் அமைந்திருந்ததாலும், அன்புச்சீடர் யோவானுக்கு, "அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்" என்ற உணர்வு எழுந்தது என்று கூறினார்.

இயேசுவின் உறவு குழுமங்களில்...

இயேசுவோடு பழக்கமான உணர்வைப் பெற்ற சீடர்கள், கரைக்கு வந்தபின் "நீர் யார்?" என்ற கேள்வியைக் கேட்காமல், அவர் வழங்கிய காலை உணவை உட்கொண்டனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்விலும் இயேசுவின் செயல்பாடுகள் நிகழ்வதை நாம் உணர்ந்தால், அவர் நம்முடன் எப்போதும் உள்ளார் என்ற உணர்வில் வாழமுடியும் என்று கூறினார்.

இயேசுவுடன் கொள்ளும் இந்த நட்புறவு, தனிப்பட்ட முறையில் கிடைப்பதைக் காட்டிலும், ஒரு குழுமமாக இருக்கும்போது அதிகமாகக் கிடைக்கும் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழும உணர்வு, அக்குழுமங்களில் அப்பத்தைப் பகிர்தல் ஆகிய செயல்பாடுகளில் கிறிஸ்துவின் பிரசன்னமும், நட்பும் நம்மிடையே நிலவுகின்றன என்று எடுத்துரைத்தார்.

மெய் நிகர் அனுபவங்களாக மாறும் ஆபத்து

நாம் வாழும் இந்த முழு அடைப்பு காலத்தில் நம் இறை அனுபவங்களும், ஒருவர் ஒருவரோடு கொள்ளும் அனுபவங்களும் ஊடகங்களின் வழியே நிகழ்வதால், அவை, மெய்நிகர் அனுபவங்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது என்பதையும் திருத்தந்தை தன் மறையுரையில் ஓர் எச்சரிக்கையாக விடுத்தார்.

புனித வார வழிபாடுகளை, மக்களின்  பங்கேற்பு இல்லாத புனித பேதுரு பெருங்கோவிலில் தான் நடத்தப்போவதை செய்தியாகக் கேட்ட ஓர் ஆயர் தனக்கு அனுப்பிய செய்தியை, திருத்தந்தை, இந்த மறையுரையில் நினைவுகூர்ந்தார்.

'வைரலாக'ப் பரவி வரும் காலம்

ஊடகங்களில் தற்போது பல விடயங்கள் 'வைரலாக'ப் பரவி வருகிறது என்பதை அடிக்கடி கேட்டுவரும் நாம், நமது வழிபாடுகளை, அருளடையாளங்களை, இறைமக்களை, திருஅவையை மெய்நிகர் அனுபவமாக்கி, அவற்றை 'வைரலாக'ப் பரப்புகிறோம் என்ற எண்ணம் நம்மிடையே தோன்றும் ஆபத்து உள்ளது என்று அந்த ஆயர் கூறியதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டி, அத்தகைய ஒரு நிலைக்கு நாம் உள்ளாகக்கூடாது என்றும், நமது கிறிஸ்தவ வாழ்வு, இறைவனுடனும், அடுத்தவருடனும் கொள்ளும் நேரடியான உறவில் அமைந்துள்ளது என்றும் கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆன்மீக முறையில் திருவிருந்து

மேலும், ஒவ்வொரு நாளும் திருப்பலியின் இறுதியில், மக்கள் ஆன்மீக முறையில் திருவிருந்தில் பங்கேற்பதற்கு, ஓர் இறைவேண்டலை கூறிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்றும் அந்த இறைவேண்டலை மேற்கொண்டார்.

கடந்த நாள்களைப் போலவே, இத்திருப்பலியின் இறுதி சில நிமிடங்கள் திருநற்கருணை பீடத்தில் வைக்கப்பட்டு ஆராதனை நிகழ்ந்தபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணை ஆசீரை வழங்கினார்.

உயிர்ப்புக் காலத்தில் பாடப்படும் 'விண்ணுலக அரசியே' ("Regina caeli") என்ற பாடலுடன் திருத்தந்தையின் திருப்பலி நிறைவுக்கு வந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2020, 10:43
அனைத்தையும் படிக்கவும் >