சாந்தா மார்த்தா சிற்றாலயத் திருப்பலி - 060420 சாந்தா மார்த்தா சிற்றாலயத் திருப்பலி - 060420  (Vatican Media)

ஏழைகளோடு கொண்டிருந்த உறவின் அடிப்படையில் தீர்ப்பிடப்படுவோம்

மார்த்தா, பணியாற்றுவதில் தன்னை ஈடுபடுத்தியது குறித்தும், மரியா, தியான நிலைகளுக்குரிய கதவுகளைத் திறந்துவிட்டது குறித்தும், இப்புனித வாரத்தில் சிந்திப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்த கொரோனா தொற்று நோய்க் காலத்தில், சிறைகளில் வாடும் மக்கள் குறித்தும், பொருளாதார நிலைகளால் துன்புறும் ஏழை மக்கள் குறித்தும் தன் கவலையை  இத்திங்கள் காலை திருப்பலியின்போது வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் விசுவாசிகளின் பங்கேற்பின்றி, காணொளி வழியாக மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய பொருளாதார அநீதிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்கள் குறித்த கவலையை வெளியிட்டதுடன், நம் இவ்வுலக வாழ்வின் முடிவில், நாம் ஏழை மக்களோடு கொண்டிருந்த உறவின் அடிப்படையிலேயே தீர்ப்பிடப்படுவோம் என்றார்.

இந்த கொரோனா தொற்று நோய்க் காலத்தில், சிறைகளில் இடப்பற்றாக்குறையால் கைதிகள், மிக நெருக்கமாக வைக்கப்பட்டிருப்பது, பேராபத்தைக் கொணரும் ஒரு செயலாக இருக்கும் என்ற கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொறுப்பிலுள்ளோர் இந்த துன்பகரமான வேளைகளில் சரியான முடிவுகளை எடுக்க முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இலாசரின் சகோதரி இயேசுவின் பாதங்களை நறுமணத்தைலத்தால் துடைத்த காட்சி குறித்து விளக்கும் இத்திங்களின் நற்செய்தி வாசகம் பற்றி தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை, இந்த நறுமணத்தைலத்தில் வீணான பணம் ஏழைகளுக்கு பயன்பட்டிருக்கலாமே என யூதாஸ் இஸ்காரியோத் கூறியது, ஏழைகள் மீதான அக்கறையால் அல்ல, மாறாக, பணத்தின்மீது அவர் கொண்டிருந்த ஆசையால்தான் என்றார். 

இன்றைய நற்செய்தியின் இறுதியில் நாம், தலைமைக் குருக்கள், இலாசரையும் கொல்ல முடிவெடுப்பதையும் காண்கிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏனெனில் வாழ்வுக்கு ஒரு சான்றாக நின்றதே அவர் செய்த தவறு என்றார்.

பாஸ்காப் பெருவிழாவுக்கு ஆறு நாட்கள் இருக்கும் நிலையில், மார்த்தா,  பணியாற்றுவதில் தன்னை ஈடுபடுத்தியது குறித்தும், மரியா, தியான நிலைகளுக்குரிய கதவுகளைத் திறந்துவிட்டது குறித்தும் சிந்திப்போம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகள் மீது அக்கறையுடையவர்போல் காட்டிக்கொண்ட, அதேவேளை, திருட்டு எண்ணமுடைய யூதாஸ் குறித்தும் எண்ணிப் பார்ப்போம் என்றார்.

நேர்மையற்ற நிர்வாகம் என்பது, சிறிய அளவில் அல்ல, பெரிய துறைகளிலும் இடம்பெறுகின்றது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரன்பு மற்றும் மனிதாபிமான அமைப்புக்களின் பணியாளர்கள் எண்ணிக்கையும், ஊதியம் வழங்கலும் காரணமாக மொத்த பணத்தில் 40 விழுக்காடே, ஏழை மக்களைச் சென்றடைகிறது என்றார்.

ஏழைகள் என்றும் உங்களோடு உள்ளனர் என இயேசு உரைத்திருக்க, நாமோ ஏழைகள் மீது பாராமுகம் கொண்டவர்களாக, அவர்களை கண்டுகொள்ள தவறுகிறோம் எனவும், தெருக்களில் பிச்சையெடுக்கும் மக்களைக் காண்கின்றபோதும், அவைகளை, வாழ்வின் இயல்பு நிலையாக ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிட்டோம், என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டினாவில் புவனஸ் அய்ரஸ் நகரில் வீட்டு வாடகை கட்டமுடியாத மக்கள், ஒரு கைவிடப்பட்ட தொழிற்சாலையை ஆக்கிரமித்து வாழ்ந்ததை, தானே நேரில் போய் கண்டதாக எடுத்துரைத்தார்.

உலகச் செல்வத்தின் பெரும்பகுதி, ஒரு சிலரின் கைகளில் இருக்கும் நிலையில், நாம் ஏழைகளுக்கு என உதவிகளை ஆற்றினோமா, சிறைக் கைதிகளைச் சென்று சந்தித்தோமா என்ற கேள்விகள், இறுதி நாளில் இறைவனால் நம்மிடம் கேட்கப்படும் என மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2020, 13:10
அனைத்தையும் படிக்கவும் >