சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி 

பேதுருவை, அச்சத்திலிருந்து, துணிவுக்கு கொணர்ந்த செபம்

பேதுருவுக்காக செபித்த இயேசு, இன்று நம் அனைவருக்காகவும் தொடர்ந்து செபித்து வருகிறார். தன் உடலில் பதிந்த காயங்களை இறை தந்தையிடம் காண்பித்து, நமக்காகப் பரிந்துபேசும் இயேசுவிடம் நமக்காக செபிக்குமாறு மன்றாடுவோம் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 தொற்றுக்கிருமியின் தாக்கத்தால் தங்கள் வேலைகளை இழந்து, ஊதியம் ஏதுமின்றி, குடும்பத்தைக் காப்பாற்ற இயலாமல் தவிப்போருக்காக செபிப்போம் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 23, இவ்வியாழனன்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்தில் கூறினார்.

வறியோரை கடன்களில் மூழ்கடிக்கும் தொற்றுக்கிருமி

தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள வேலையில்லா நிலையை தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வறியோருக்கு கடன்களை வழங்கி, அவர்களிடம் இன்னும் அதிகமாக வசூலிக்கும் மனப்பான்மை, ஒரு சமுதாயத் தொற்றுக்கிருமி என்று வேதனையுடன் குறிப்பிட்ட திருத்தந்தை, வறியோரின் துன்பங்களை வைத்து இலாபம் திரட்ட நினைக்கும் மனிதரை, இறைவன் தொட்டு, அவர்களுக்கு மனமாற்றம் தரவேண்டுமென்று மன்றாடுவோம் என்று கூறினார்.

கோழையான பேதுரு, துணிவுள்ளவராக...

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வழங்கப்பட்ட முதல் வாசகத்தை (தி.ப. 5:27-33) மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோழையான மனம் கொண்டு, இயேசுவை மறுதலித்த பேதுரு, மதத் தலைவர்களை குற்றம் கூறும் அளவு துணிவு கொண்ட மாற்றத்தை விளக்கிக் கூறினார்.

பேதுருவும், யோவானும் கால் ஊனமுற்றவரைக் குணமாக்கிய புதுமையிலிருந்து துவங்கிய பிரச்சனையால், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டு, மதத் தலைவர்களால் எச்சரிக்கப்பட்டிருந்தாலும், தங்கள் பணியைத் தொடர்வதில் அவர்கள் தளரவில்லை என்பதையும், அவ்வேளைகளில், தாங்கள் கடவுளுக்குப் பணிவதே மேல் என்று பேதுரு துணிவுடன் கூறியதையும் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, அச்சத்திலிருந்து, துணிவுக்கு பேதுரு கடந்து வந்த அந்த பயணத்தைச் சிந்திப்பது நல்லது என்று கூறினார்.

உலக அதிகாரங்களோடு சமரசம்

மதத் தலைவர்கள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தபோது, பேதுருவும், சீடர்களும் மதத் தலைவர்களுடன் சமரசம் செய்துகொள்ளும் வகையில் விலகிப்போயிருக்கலாம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு சில வேளைகளில், திருஅவைத் தலைவர்கள், புனிதத் திருஅவையைக் காப்பதற்குப் பதில், தங்களையே காத்துக்கொள்ளும் வகையில், உலக அதிகாரங்களோடு சமரசம் செய்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

பேதுருவுக்காக செபித்த இயேசு, நமக்காகவும்...

கோழையாக இருந்த பேதுரு, துணிவுள்ள திருத்தூதராக மாறியது எப்படி என்ற கேள்விக்குப் பதில் தேடும்போது, இறுதி இரவுணவின் வேளையில், இயேசு பேதுருவுக்கு வழங்கிய எச்சரிக்கை மற்றும் அவருக்கு வழங்கிய உறுதி மொழி ஆகியவை நினைவுக்கு வருகின்றன என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

"சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து" (லூக்கா 22:31-32) என்று இயேசு கூறும்போது, அவர் பேதுருவுக்காக சிறப்பாக செபித்தத்தைக் குறிப்ப்பிடுகிறார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

பேதுருவுக்காக செபித்த இயேசு, இன்று நம் அனைவருக்காகவும் தொடர்ந்து செபித்து வருகிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உடலில் பதிந்த காயங்களை இறை தந்தையிடம் காண்பித்து, நமக்காகப் பரிந்துபேசும் இயேசுவிடம் நமக்காக செபிக்குமாறு மன்றாடுவோம் என்ற கருத்துடன் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆன்மீக அளவில் திருவிருந்து

ஏனைய நாள்களைப் போலவே, இவ்வியாழனன்று நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில், நேரடியாக திருவிருந்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், ஆன்மீக அளவில், திருவிருந்தில் கலந்துகொள்வதற்கு உதவியாக, ஒரு செபத்தைக் கூறியபின், திருநற்கருணை ஆராதனையை, சில நிமிடங்கள் மௌனமாக மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், திருநற்கருணை ஆசீரையும் வழங்கினார்.

ஒவ்வொரு நாளும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலை ஏழு மணிக்கு,  சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றும் திருப்பலி, யூடியூப், தொலைக்காட்சி, வானொலி, மற்றும் வலைத்தளங்கள் வழியே நேரடியாக ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2020, 14:02
அனைத்தையும் படிக்கவும் >