Vatican News
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலியின் இறுதியில் - 170320 சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலய திருப்பலியின் இறுதியில் - 170320 

வயது முதிர்ந்தோருக்காக திருத்தந்தை செபம்

ஒரு கையில் என்மீது அன்பும், அடுத்த கையில் உன் சகோதரர் சகோதரி மீது வெறுப்பும் கொண்டு, என்னிடம் வராதே என்று இயேசு சொல்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்நாள்களில், ஒவ்வொரு நாளும் உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, கோவிட்-19 தொற்றுக்கிருமி நெருக்கடியால் துன்புறும் எல்லாருக்காகவும் செபித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 17, இச்செவ்வாய் காலையில், நிறைவேற்றிய திருப்பலியின் துவக்கத்திலேயே வயது முதிர்ந்தோருக்காக, இத்திருப்பலியில் சிறப்பாக செபிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

இந்நாள்களில், உள்ளத்தளவில் தனிமைத் துன்பத்தை அனுபவிக்கும் வயது முதிர்ந்தோருக்காக, சிறப்பான முறையில் செபிக்குமாறு எல்லாரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வயது முதிர்ந்தோர், பல நேரங்களில்  அச்சத்தால் நிறைந்துள்ளனர் என்று கூறியத் திருத்தந்தை, ஞானம், வாழ்வு மற்றும், நம் கதையை வழங்கியுள்ள  நம் தாத்தா பாட்டிகள் மற்றும், அனைத்து வயது முதிர்ந்தோர் அருகில், ஆண்டவர் இருக்குமாறும், அவர்களுக்கு அவர் சக்தியைக் கொடுக்குமாறும் செபிப்போம் என்றும் கூறினார்.

நாமும் நம் செபங்களால் அவர்களுக்கு அருகில் இருப்போம் என்று சொல்லி, திருப்பலியைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு பற்றிக் கூறிய இத்திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை (மத்.18:21-35) அடிப்படையாக வைத்து மறையுரையாற்றினார்.

உடன்பிறந்தநிலை கடவுளின் நன்மைத்தனத்தை ஈர்க்கிறது

உடன்பிறந்தநிலை ஒன்றிப்பு குறித்த மறைக்கல்வியை இயேசு நமக்கு விட்டுச்சென்றுள்ளார் என்று மறையுரையைத் தொடங்கியத் திருத்தந்தை, உங்களுள் இருவர் அல்லது மூவர், எதைக் குறித்தும் மனமொத்திருந்து வேண்டுதல் எழுப்பினால் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார் (cf மத்.18:19) என்ற இயேசுவின் சொற்களையும் மேற்கோள் காட்டினார்.

உடன்பிறந்தவர்கள் மத்தியில் நிலவும், ஒற்றுமை, நட்பு, மற்றும், அமைதி ஆகியவை, கடவுளின் நன்மைத்தனத்தை ஈர்க்கும் என்றும் திருத்தந்தை கூறினார்.

எப்போதும் மன்னிக்க வேண்டும்

ஒருவரை, ஏழு முறை மட்டும் மன்னித்தால் போதுமா என்று பேதுரு இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு, நாம் எப்போதும் மன்னிக்க வேண்டும் என்று இயேசு பதிலளித்தார்  என்று எடுத்துரைத்த திருத்தந்தை, தன்னல இதயங்கள், காழ்ப்புணர்வு, பழிவாங்குதல், கடுஞ்சினம் ஆகியவற்றில் எப்போதும் பற்றுக்கொண்டிருப்பதால், அந்த இதயங்களுக்கு மன்னிப்பது எளிதாக இருக்காது என்றும் கூறினார்.

வெறுப்புணர்வால் அழிக்கப்பட்டுள்ள குடும்பங்களைப் பார்த்திருக்கிறோம், அது, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது, இறந்த உடலின்முன் நின்றுகொண்டுகூட அவர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்வதில்லை, ஏனெனில், அவர்கள், கடந்தகால கோபங்களைச் சுமந்துசெல்கின்றனர், வெறுப்பின்மீது கொண்டிருக்கும் பற்று, அன்பின்மீது கொண்டிருப்பதைவிட வலுவானது என்றும் திருத்தந்தை கூறினார்.

கடவுள்  மன்னிக்கிறார், மறக்கிறார்

வெறுப்புணர்வு எல்லாவற்றையும், ஏன் சிறிய காரியங்களைக்கூட அழித்து விடுகின்றது, இது சாத்தானில் கருவூலம் என்றுரைத்த திருத்தந்தை, கடவுள் நம்மை மன்னிக்கையில், நாம் ஆற்றிய அனைத்து தீமைகளையும் அவர் மறக்கிறார், மன்னித்து மறப்பது, கடவுளின் நோய், அவருக்கு நினைவு கிடையாது, இந்த காரியங்களில் அவர் தம் நினைவை இழக்கிறார் என்றுகூட ஒருவர் சொன்னார் என்றும் கூறினார்.

மன்னிப்பது எப்படி என்பது பற்றி தன்னிடம் கற்றுக்கொள்ளுமாறும், தான் ஆற்றியதுபோல நாமும் செய்ய வேண்டுமென்றும் கடவுள் கேட்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, நமக்கு எதிராக ஏதாவது செய்தவர்களோடு நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள் (மத்.5:24) என்ற நற்செய்தி பகுதியையும் குறிப்பிட்டார்.    

விண்ணகம் செல்ல, மன்னிப்பு

ஒரு கையில் என்மீது அன்பும், அடுத்த கையில் உன் சகோதரர் சகோதரி மீது வெறுப்பும் கொண்டு, என்னிடம் வராதே என்று இயேசு சொல்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, விண்ணகம் செல்வதற்குரிய வரையறை, மன்னிப்பு என்றும் கூறினார்.

நாம் மன்னிப்பதில் தாராளமாக இருப்பதற்கு சிரம் தாழ்த்தி ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் என்று, திருத்தந்தை மறையுரையை நிறைவு செய்தார்.

இத்திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆராதனையும் சில நிமிடங்கள் இடம்பெற்றது. இறுதியில் திருத்தந்தை திருநற்கருணை ஆசீர் வழங்கினார்.

17 March 2020, 15:44
அனைத்தையும் படிக்கவும் >