எத்தியோப்பியா மக்கள் எத்தியோப்பியா மக்கள்  (AFP or licensors)

தீக்ரேவில் நெருக்கடிகளை களையும் மனிதாபிமான உதவிகள்

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எடுக்கப்படுகின்ற முயற்சிகளில் போதுமான அர்ப்பணிப்பு உணர்வு இல்லாதது கவலையளிக்கிறது என்கிறார் எத்தியோப்பியா ஆயர் Medhin.

ஜெயந்த் ராயன் – வத்திக்கான்

எத்தியோப்பியாவின் தீக்ரே (Tigray) பகுதியில் பல ஆண்டுகளாக மக்களின் வாழ்வியலை பாதிக்கும், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் அனுபவிக்கும்  துன்பம், விரக்தி, மரணம், மோதல்கள், வறட்சி, மற்றும் புறக்கணிப்பு போன்றவை குறித்து அண்மையில் தான் எழுதிய திறந்த மடலில் ஆயர் Tesfaselassie Medhin கவலையை வெளியிட்டுள்ளார்.

போதுமான அர்ப்பணிப்பு உணர்வு இல்லாததால் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் போதாது என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆயர் அவர்கள், உள்நாட்டு மோதல்களால் பல இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதையும், அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மனிதாபிமான தேவைகளை நிவர்த்தி செய்வதில் உள்ள இடர்பாடுகளையும் தன்னுடைய கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

தீக்ரே மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவிட  அதிகப்படியான உடனடி மனிதாபிமானத் தேவைகள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆயர், மீட்பு நடவடிக்கைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், நீண்ட கால மற்றும் நிலையானத் தன்மைக்கு முழுமையான நிதியளித்து உதவிட  அனைத்துலக உதவி அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனிதாபிமான உதவிகளுக்கும் மேலாக, இப்பகுதிகளில் நிலவிடும் பரந்த சவால்களான   சமூக, பொருளாதார, அரசியல், உளவியல் மற்றும் ஆன்மிகப் பரிமாணங்களில்  தீக்ரே, அம்ஹாரா, மற்றும் அஃபார் பகுதி மக்கள் சந்தித்துவரும் நெருக்கடிகளை நினைவுகூர்ந்த ஆயர் அவர்கள், விளிம்புநிலை  சமூகங்களாக உள்ள Irob மற்றும் Kunama மக்கள் இவ்விடர்பாட்டின் சுமைகளைத்  தாங்கிக்கொள்ளவும் தன் கடிதத்தில் விண்ணப்பித்துள்ளார்.

காலநிலை மாற்றங்கள் பற்றி எச்சரித்த ஆயர் Medhin,   பருவ நிலை தவறிய மழை, வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்கு போன்றவை, ஏற்கனவே நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலையை மேலும் அதிகப்படுத்தும் என்பதையும், இவ்வகையான பாதிப்புகளைத் தவிர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

அனைத்துலக சமூகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் டைக்ரே மற்றும் அதன் எல்லைப்பகுதியில் வாழும் மக்களின் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் தன்னுடைய கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார் ஆயர் Medhin.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2024, 13:59