காசாவில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தப் பூமியில் ஒவ்வொரு மனிதரும் முக்கியமானவர் என்பதை உணர்ந்து இஸ்ரயேல் மற்றும் ஹமாஸ் இருதரப்பினரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவார்கள் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கான MONA எனப்படும் (Caritas Middle East & North Africa) காரித்தாஸ் அமைப்பு.
மூன்று வாரங்களுக்கு முன்பு காசாவில் உள்ள புனித Porphyrios ஆர்த்தடாக்ஸ் ஆலயத்தில் நிகழ்ந்த வான்வழித் தாக்குதலில் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் கொல்லப்பட்ட 26 வயதான Viola என்ற காரித்தாஸ் அமைப்பின் சக ஊழியரின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள வேளை இவ்வாறு தெரிவித்துள்ளது அவ்வமைப்பு.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள காரித்தாஸ் MONA-வின் இயக்குனர் Karam Abi Yazbeck அவர்கள், காசாவில் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மனிதரின் மதிப்பையும் அங்கீகரிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
அவசர அறைகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் இயங்குவதற்கு மின்சாரம் அதிகமாகத் தேவைப்படுகிறது என்றும், உணவு உதவி, மருத்துவ உதவி அல்லது எரிபொருளை வழங்குவது சாத்தியமற்றது என்பதால் காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் Karam.
எருசலேமிலுள்ள தங்களின் ஊழியர்கள் தொலைபேசி வழியாகப் போரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் உளவியல் ஆதரவை வழங்குவதுடன் அவர்களுக்கு உதவவும் முயற்சித்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் Karam.
உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு அங்குப் போர்நிறுத்தம் ஏற்படவேண்டுமெனவும், மனிதாபிமான உதவிப்பொருள்கள் மக்களைச் சென்றடைய வழிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், அனைத்துலகப் போர்நிறுத்தச் சட்டங்கள் அமலாக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார் Karam.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்