அமைதியே அனைவரின் ஆவல் அமைதியே அனைவரின் ஆவல்  (Vatican Media)

வாரம் ஓர் அலசல் - செப். 21. உலக அமைதி நாள்

1968ஆம் ஆண்டிலிருந்து உலக அமைதி தினத்தை கத்தோலிக்க திருஅவை சிறப்பித்து வர, 1981ஆம் ஆண்டிலிருந்து உலக அமைதி தினக் கொண்டாட்டத்தை உருவாக்கியது ஐ.நா. அவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலக அமைதி நாள், ஐக்கிய நாடுகளின் பொது அவையின் அறிவித்தலின் வழியாக ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ஆம் நாளில் அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள், முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. 1961ஆம் ஆண்டு ஐ.நா.வின் பொதுச்செயலாளராக பணியாற்றிய ஹாமர்சீல்ட் என்பவர் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் இறப்பை நினைவு கூரும் விதமாக செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க் கிழமையை சர்வதேச அமைதி தினம் என்று கடைபிடித்து வந்தனர். பின்னர், 2002ஆம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 21ஆம் தேதியை உலக அமைதி தினம் என்று ஐக்கிய நாடுகள் சபை கடைபிடித்து வருகிறது.

எல்லா மனிதர்களுக்குமே எந்த நெருக்கடியுமற்ற “அமைதியான வாழ்வு” வேண்டும் என்பதே உச்சகட்ட இலட்சியமாக இருக்கும். நமது தேடல் எப்போதுமே நீதி மற்றும் அமைதியை நோக்கியே இருக்கிறது. குடும்பங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். பிள்ளைகள் அமைதியாய் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். பணி சூழல் அமைதியாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். நம்மைச் சுற்றிய சமூகம் அமைதியாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். நமது தேசம் அமைதியாய் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். வாழ்க்கை என்பது அச்சத்தின் நிலப்பரப்பில் நடக்காமல், சுதந்திரத்தின் வீதிகளில் வலம்வர வேண்டுமென ஆசைப்படுகிறோம்.

போர், பதற்றம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, தொற்றுநோய் நெருக்கடிகள்,பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், காற்று மாசுபாடு என உலகமெங்கும் வாழும் மக்கள் அன்றாடம் அமைதியற்ற சூழலில் வாழும் நிலையில் உலக அமைதி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றங்கள், காற்று-நீர் மாசுபாடு, அபரிமிதமான இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் உலகமெங்கும் வாழக்கூடிய அனைத்து நாடுகளுமே கொஞ்சம் கொஞ்சமாக அமைதியை தொலைத்துள்ளன. ஆப்ரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் பலவும் இப்போதும்கூட வறுமை காரணமாக அமைதியை தொலைத்து உழல்கின்றன.

ஆப்கானிஸ்தான், மியான்மார், சிரியா, ஏமன், ஈரான், லிபியா, ஈராக், ஈரான், எத்தியோப்பியா,  தெற்கு சூடான், சொமாலியா, காங்கோ, நைஜீரியா, கொலம்பியா, புருண்டி உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் உள்நாட்டு போர், வறுமை காரணமாக பல ஆண்டுகளாகவே மக்கள் அமைதியை தொலைத்து வாழ்ந்து வருகின்றனர். போர்களை விடவும் மக்களை அதிகம் கொல்லும் ஆபத்தாக தற்போது இயற்கை சீற்றங்களும், காலநிலை மாற்றங்களும் மாறியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அண்மை ஆண்டுகளில் உலக நாடுகளில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளன. சில ஆண்டுகளில் வரலாறு காணாத சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்ததன் காரணமாக பல நாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதுபோலவே துருக்கி, கானடா, இத்தாலி, வட அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஒவ்வொரு கோடைகாலத்திலும்  காட்டுத்தீ கோரதாண்டவம் ஆடுகிறது. மேலும், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பெருவெள்ளமும் மக்களின் அமைதியை சூறையாடியது. அண்மையில் மொரோக்கோவில் நில அதிர்ச்சியும், லிபியாவில் பெருவெள்ளமும் பல ஆயிரம் உயிர்களை எடுத்துச் சென்றது. அமைதியை இழந்து நிற்கின்றனர் அந்நாடுகளின் மக்கள். இப்படி உலகமெங்கும் போர், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட நெருக்கடிகள் மக்களின் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில், “உலக அமைதி” என்பதுதான் ஒவ்வொரு மனிதருக்கான உன்னத தேவையாகிறது என்பதே உண்மை.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தரவாரா’ என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக அமைதிக்கு வித்தூன்றினார் கனியன் பூங்குன்றனார். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே என்று உன்னத உலகுக்கு வழி காட்டினார் தாயுமானவர். மகாத்மா காந்தியோ, “ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் சமூகநீதி இல்லாமல் இருக்கும் வரை அங்கே அமைதி இருப்பதாக கூற முடியாது” என்கிறார்.

பொதுவாக, அனைத்து உலக சமயங்களும் உலக அமைதியை வலியுறுத்தி, கருத்துக்களை வெளியிட்டுள்ளன. மனிதர் வாழ்கின்ற உலகில் வன்முறைகள் மறைந்து, மனித இனம் ஒரே குடும்பம் என்னும் கருத்து நடைமுறை வாழ்வில் உண்மையாகும்போது உலக அமைதி ஏற்படும் என்பது சமயங்களின் பொதுவான அணுகுமுறை.

பல்லாயிரமாண்டு வரலாற்றைத் தன்னுள் அடக்கி, பல பிரிவுகளாக விளங்கும் சமய மரபாகிய இந்து மதம் உலக அமைதி பற்றிக் கூறுவதைச் சுருக்கிக் கூறுவது கடினம். பிற்காலத்தில் வளர்ச்சியுற்ற சைவமும் வைணவமும் இறைபணியையும் மனிதருக்கு ஆற்ற வேண்டிய சேவையையும் வலியுறுத்தின. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் கருத்து வேரூன்றியுள்ளது. குறிப்பாக, மனிதர்கள் சமய வேறுபாடுகளை மறந்து, உலக அமைதிக்காக உழைத்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

இஸ்லாம் சமயம் உலக அமைதியின் தேவையை எடுத்துரைக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒருவர் ஒருவருக்கு ஒரே குடும்பத்தின் பிள்ளைகள் ஆகின்றனர், தமக்குள் உடன்பிறப்புகளாகத் திகழ்கின்றனர் எனவும், மனிதர்கள் இந்த உறவினை உணர்ந்து தம் வாழ்க்கை முறையை அமைதியான விதத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் இஸ்லாம் சமயத்தின் திருநூலாகிய திருக்குர்ஆன் கூறுகிறது.

மனிதர் தம் உள்ளத்தில் அமைதியை நிலைநாட்டினால் மட்டுமே உலகில் அமைதி ஏற்பட முடியும் என்பது புத்த சமயக் கருத்து. புத்த சமயத்துக்கு அடிகோலிய கவுதம புத்தர் "அமைதி உள்ளத்திலிருந்து பிறக்கிறது. அதை வெளியில் தேடாதே" என்று போதித்தார்.

கத்தோலிக்க திருஅவையை எடுத்துக்கொண்டோமானால், 1962-1965 காலக்கட்டத்தில் நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் உலக அமைதி பற்றி விரிவாக எடுத்துரைத்தது. குறிப்பாக, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் "அவனியில் அமைதி" என்னும் தலைப்பில் 1963, ஏப்ரல் 11ஆம் நாள் ஒரு சுற்றுமடல் எழுதினார். அம்மடலில், அவர் உலக அமைதி ஏற்பட வேண்டும் என்றால் மனித உரிமைகள் எல்லா மட்டத்திலும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

உலக அமைதி நாள் என்பது ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதம் முதல் நாள் கத்தோலிக்க திருஅவையால் கொண்டாடப்படுகின்ற சிறப்பு நிகழ்வு ஆகும். உலக மக்கள் அனைவரும் விரும்பி எதிர்பார்க்கின்ற அமைதி உருவாகிட இறைவனை நோக்கி வேண்டுதல் எழுப்பவும், அமைதியின் இன்றியமையாமை பற்றி அனைவரையும் சிந்திக்கத் தூண்டவும், இந்நாள் பயன்படுகிறது. கத்தோலிக்க திருஅவை கொண்டாடுகின்ற உலக அமைதி நாளைத் திருத்தந்தை ஆறாம் பவுல் 1967ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். முதல் உலக அமைதி நாள் 1968, சனவரி முதல் நாள் கொண்டாடப்பட்டது.

முதல் உலகப் போர் நிகழ்ந்த காலத்திலும், இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்திலும் கத்தோலிக்க திருஅவையின் தலைவராக இருந்த திருத்தந்தையர்கள் உலக அமைதிக்காக நாடுகளிடையே நல்லுறவை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். குறிப்பாக, திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் மற்றும் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் ஆகியோர் உலக அமைதிக்காக உழைத்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பனிப்போர் காலத்தில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் சோவியத் யூனியனின் தலைவர்களைச் சந்தித்து உலக அமைதிக்காக ஒத்துழைக்குமாறு உருக்கமாக வேண்டிக்கொண்டார். குறிப்பாக, அமைதியின் இன்றியமையாமையை வலியுறுத்தி, "அவனியில் அமைதி", அதாவது "Pacem in Terris" என்னும் தலைப்பில் ஒரு சுற்றுமடலை எழுதி 1963, ஏப்ரல் 11ஆம் நாள் வெளியிட்டார். அம்மடல் கிறித்தவர்களுக்கு மட்டுமன்றி, "நல்லுள்ளம் கொண்ட எல்லா மனிதருக்கும்" எழுதப்பட்டதாகத் திருத்தந்தை குறிப்பிட்டார்.

திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானுக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்ற திருத்தந்தை ஆறாம் பவுல், உலகில் நிலையான அமைதி ஏற்படவேண்டும் என்றால் நாடுகளுக்கிடையே நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகள் மறைய வேண்டும் என்றும், அனைத்துலக மக்களின் வளர்ச்சியே அமைதிக்கு வழி என்றும் வலியுறுத்தி, "மக்களின் முன்னேற்றம்", அதாவது "Populorum Progressio" என்னும் தலைப்பில் 1967, மார்ச் 26ஆம் நாள் ஒரு சுற்றுமடல் வெளியிட்டார்.

இவ்வாறு, அமைதியின் தேவையை வலியுறுத்திய கத்தோலிக்க திருஅவை உலக அமைதியை வளர்ப்பதற்கு "உலக அமைதி நாள்" என்றொரு கொண்டாட்டம் பெரிதும் துணையாக அமையும் என்று கருதியது. உலக அமைதியை வளர்ப்பதற்காக மக்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் கத்தோலிக்க திருஅவை ஒவ்வோர் உலக அமைதி நாளுக்கும் ஒரு மையப் பொருளை அறிவிப்பது வழக்கம்.

அமைதிக்கு வழி, மனித உரிமைகளை மேம்படுத்தலே; அமைதியை உள்ளத்தில் ஏற்று, அனைவரோடும் நல்லுறவு கொண்டிருத்தல்; ஒவ்வொரு மனிதனும் என் உடன்பிறப்பே; அமைதி வேண்டுமா, நீதிக்காக உழை; அமைதி கைகூடும் ஒன்றே!; அமைதிக்காக உழைப்பது உன் பொறுப்பும் கூடவே!; அனைவரோடும் நல்லுறவை வளர்த்தலே அமைதிக்கு வழி; அமைதியின் உண்மையான போர்க்கலன்கள்; அமைதி வேண்டுமானால் மனித உயிரைப் பேண வேண்டும்; வன்முறை தவிர்ப்போம், அமைதியை வளர்ப்போம்! என்பவை புனித திருத்தந்தை 6ஆம் பால் அவர்களால் உலக அமைதி தின தலைப்புக்களாக எடுக்கப்பட்டன.

அதேவேளை புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களோ,  1979ஆம் ஆண்டிலிருந்து, அமைதியை உருவாக்க விரும்பினால் அமைதியைப் புகட்டவேண்டும்; அமைதியின் சக்தி உண்மையில் உள்ளது; அமைதியை வளர்க்க சுதந்திரத்தை மதிக்க வேண்டும்; அமைதி, கடவுள் நம் கைகளில் ஒப்படைக்கும் கொடை; அமைதியை வளர்க்கும் உரையாடல், நம் காலத்துச் சவால்; அமைதியின் பிறப்பிடம் புதுப்படைப்பான இதயம்; அமைதியும் இளமையும் ஒன்றாக முன்னேறிச் செல்லும்; அமைதி ஒன்றே ஒன்றுதான்: வடக்கும் தெற்கும், கிழக்கும் மேற்கும் அமைதிக்கு இல்லை; முன்னேற்ற வளர்ச்சியும் ஒருங்கிணைந்த செயல்பாடும் அமைதியின் இரு திறவுகோல்கள்; மதச் சுதந்திரம் அமைதிக்கு அடித்தளம்; அமைதி வேண்டுமா, சிறுபான்மையினரை மதித்து நட!;

படைத்தவராம் கடவுளோடு அமைதியில் வாழ்ந்து, படைப்புலகோடு அமைதி ஏற்படுத்துவோம்; அமைதி வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதரின் மனச்சாட்சியை மதிக்க வேண்டும்; நம்பிக்கைகொண்டோர் ஒருங்கிணைந்து அமைதியைக் கட்டியெழுப்பிட வேண்டும்; அமைதி வேண்டுமென்றால் ஏழைகளுக்கு உதவு!; ஒவ்வொரு குடும்பமும் உலகமெனும் குடும்பத்தின் அமைதிக்காக உழைக்க வேண்டும்; பெண்கள், அமைதியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள்; குழந்தைகளுக்கு அமைதி நிறைந்த எதிர்காலத்தைக் கொடுப்போம்;     மன்னிப்பைக் கொடு, அமைதியைப் பெறு!; ஒவ்வொருவருக்கும் நீதி வழங்கப்பட்டால் அனைவருக்கும் அமைதி பிறக்கும்; மனித உரிமைகளை மதிப்பதே உண்மையான அமைதியின் இரகசியம்; கடவுளின் கருணையைப் பெற்றவர்களுக்கு இவ்வுலகில் அமைதி!; பண்பாடுகளுக்கிடையே உரையாடல் அன்பும் அமைதியும் தோய்ந்த பண்பினை வளர்க்கும்; நீதி இன்றி அமைதி இல்லை, மன்னிப்பு இன்றி நீதி இல்லை; அவனியில் அமைதி ஏற்பட, நிலையான ஈடுபாடு வேண்டும்; அமைதியைக் கற்பித்தல் எந்நாளும் நிகழ வேண்டிய ஒன்று; தீமையால் ஆட்கொள்ளப்படாமல், நன்மையால் தீமையை வெல்வோம்! என்பவைகளை அமைதிதின தலைப்புக்களாக எடுத்திருந்தார்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள், உண்மையே அமைதிக்கு ஊற்று; மனிதரே அமைதியின் மையம்; மனித குடும்பம், அமைதி நிலவும் குழுமம்; அமைதியைக் கட்டியெழுப்ப வறுமையை ஒழிப்போம்; அமைதி வேண்டுமா, படைப்புலகத்தைப் பாதுகாத்துப் பேணிடு!; சமயச் சுதந்திரம் அமைதிக்கு வழி என பல்வேறு தலைப்புக்களை எடுத்திருந்தார்.

தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோ, உலக அமைதியின் தேவை குறித்தும், படைப்பைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும், உலகை சுமுகமாக எடுத்துச் செல்வதில் மதங்களின் கடமை குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

இயேசு இவ்வுலகிற்கு வந்தது, சமாதானத்தை, அதாவது அமைதியை அகிலம் முழுவதும் கொடுக்கவே. இயேசு பிறக்கும்போது, வானதூதர்கள், “உன்னதத்தில் மகிமையும், மண்ணகத்தில் மாந்தர்க்கு அமைதியும் ஆகுக” என்று பாடினார்கள். பலர் இயேசுவை தேடிவந்தபோது, அவர், அவர்களை குணப்படுத்தி, “சமாதானமாய் போ” என்றுதான் சொல்கின்றார். இயேசு பாடுகள் பட்டு இறந்து உயிர்த்தெழுந்த பிறகு அச்சத்தில் சீடர்கள் கதவுகளை தாழிட்டு, கலக்கத்தில் என்ன நேருமோ என்று குழம்பியிருந்தபோது இயேசு திடீரென்று உள்ளே தோன்றி, ‘உங்களுக்கு சமாதானம்’ என்று சொல்கிறார்.

நீதியும், அமைதியும் இணைந்தே பயணிப்பவை. நீதி எங்கே நிலவுகிறதோ, அங்கே அமைதியும் அமர்ந்திருக்கும். அமைதி எங்கே உலவுகிறதோ, அங்கே நீதியும் நடமாடும். நீதியற்ற தன்மை, அமைதியற்ற சூழலை உருவாக்குகிறது. நீதியற்ற தன்மை அச்ச உணர்வை உருவாக்குகிறது. நீதியற்ற தன்மை பதட்டத்தை பிரசவிக்கிறது. ஆம். அமைதிக்கான விதை நீதியில் இருக்கிறது. உலக அமைதி தினத்தை செப்டம்பர் 21ஆம் தேதி, அதாவது, வரும் வியாழனன்று சிறப்பிக்கவிருக்கும் வேளையில், அமைதிக்கு நாம் ஆற்றியுள்ள பங்களிப்புக் குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2023, 12:35