இறைவனிடம் இறைவேண்டல் எழுப்பும் தாவீது அரசர் இறைவனிடம் இறைவேண்டல் எழுப்பும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 41-3, நேர்மையில் நிலைத்திடுவோம்!

வாழ்வின் எந்த நிலையிலும் இறைவனுக்கு நேர்மையாளர்களாகவும், பிரமாணிக்கம் உள்ளவர்களாகவும், அவரை மட்டுமே சார்ந்து வாழக்கூடியவர்களாகவும் இருப்போம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 41-3, நேர்மையில் நிலைத்திடுவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'புனித நட்பில் துரோகம்!' என்ற தலைப்பில் 41-ஆவது திருப்பாடலில் 04 முதல் 09 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 10 முதல் 13 வரையுள்ள இறைவார்த்தைதைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவிற்குக் கொண்டு வருவோம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். “ஆண்டவரே! என் மீது இரங்கி, நான் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும். என் எதிரி என்னை வென்று ஆர்ப்பரிக்கப் போவதில்லை; இதனால், நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர் என்பதை அறிந்து கொள்கின்றேன். நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்; நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்; உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவாராக! ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! ஆமென்! ஆமென்! (வாசனங்கள் 10-13)

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது. ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது என்பதை நாம் அறிவோம். ஏறத்தாழ எட்டு அடி உயரத்திலிருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடியை வாங்கிக்கொண்டுதான் அக்குட்டி தனது வாழ்க்கையை தொடங்குகிறது. குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப் பார்த்தோமென்றால், அது மிகவும் கொடுமையான ஒன்று என்பது நமக்குப் புரியும். இதைவிடக் கொடுமையான விடயங்கள் அடுத்தது நடக்கும். தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். அப்போது அக்குட்டியானது காற்றில் பறந்து சற்றுத் தள்ளிப் போய் விழும். ஏற்கனவே விழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில் அடுத்த அடி விழுகிறது அக்குட்டிக்கு. தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போது உடம்போடு ஒட்டியிருந்த ஈரம் கூட காயாத நிலையில் அக்குட்டியானது, வலியோடுத் தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும் மீண்டும் தடுமாறிக் கீழே விழுந்து விடும். அத்தருணத்தில் மீண்டும் தாய் தனது குட்டியை உதைக்கும். மீண்டும் குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால், மீண்டும் விழுந்து விடும். தனது குட்டி சுயமாக சொந்த காலில் எழுந்து நிற்கும் வரை தாய் அதனை தொடர்ந்து உதைத்துக் கொண்டே இருக்கும். காட்டில் உலவும் சிங்கம், புலி, ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம். அதுவும் நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் அது அந்த விலங்குகளுக்கு விரைவில் இரையாகிவிடும். இதனை உணர்ந்த தாய், தன் குட்டியை உதைத்து உதைத்து எழுந்து நடக்க கற்றுத்தருகிறது. ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக்கொண்டு போராடவேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிக்குத் தாய் ஒட்டகச்சிவிங்கி கற்றுக்கொடுக்கிறது. குட்டி ஒட்டச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு அது இரையாகியிருக்கும். ஆனால், அதன் தாய் வலியைத் தாண்டி வெற்றி பெறும் வழியை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வைக் கற்றுக்கொள்வததற்கு உதவி செய்கிறது.

நமது கிறித்தவ வாழ்வில் இந்நிகழ்வு மிகவும் பொருத்தமுடையதாக இருக்கின்றது. பல நேரங்களில் நாம் பாவத்துக்குள் விழுந்து எழுந்து நடக்க முடியாமல் தடுமாறும்போது என்றும்வாழும் இறைவன் நம்மீது இரக்கம் கொண்டு நம்மைத் தூக்கிவிடுகின்றார். அந்தக் குட்டி ஒட்டகச்சிவிங்கியைப்போல வலிகளைத் தாங்கிக்கொண்டு நாம் விழுந்துள்ள பாவச் சேற்றினின்று எழுந்து நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் சேற்றில் சிக்கிக்கொள்ளும் மானை எல்லா விலங்குகளுமே இரையாக்கிக்கொள்ள முயற்சி செய்யும். அப்போது அவற்றிலிருந்து தப்பிச்செல்ல அந்த மான் எல்லாவழிகளிலும் முயற்சி செய்யும். அவ்வாறே நாம் பாவச்சேற்றில் விழும்போது நம் எதிரிகள் அனைவரும் நம்மை எள்ளிநகையாடுவர், ஏளனப்படுத்துவர். இதற்கும் மேலாக நாம் அந்தச் சேற்றிலேயே சிக்குண்டு அழிந்துபோய்விடவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பர். அந்நிலையிலும் கடவுள் நம்மைக் காப்பாற்ற நம்முடன் இருப்பார் என்பதை உணர்ந்து அவரை நோக்கி கூவியழைக்கும் வேளை, அவரது அடைக்கலமும் புகலிடமும் நமக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும். இதனை உணர்த்த காரணத்தினால்தான், "ஆண்டவரே! என் மீது இரங்கி, நான் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும். என் எதிரி என்னை வென்று ஆர்ப்பரிக்கப் போவதில்லை; இதனால், நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர் என்பதை அறிந்து கொள்கின்றேன்" என்கின்றார் தாவீது.

இரண்டாவதாக, "நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்; நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்; உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவாராக! ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! ஆமென்! ஆமென்!” என்றுரைக்கின்றார். இங்கே, தான் நேர்மையில் உறுதியாக இருப்பதாகக் கூறுகின்றார் தாவீது அரசர். நேர்மை என்பது கடவுளுக்குப் பிரமாணிக்கமாக, உண்மையாக இருப்பதைக் குறிக்கிறது. மேலும் நேர்மை என்பது கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று நம்பி அவர் காட்டும் வழியில் செல்வது. தனது பலத்தை, தன்னிடமுள்ள பொருள்களை, ஆள்பலத்தை, ஆயுதபலத்தை நம்புவதைக்காட்டிலும் கடவுளை மட்டுமே முழுமையாக நம்பி இருப்பது, அவரை மட்டுமே முழுவதுமாக சார்ந்து வாழ்வது, எல்லாவற்றிலும் அவருக்கே முதன்மைத்துவம் கொடுப்பது, கடவுளுக்கு நம்பிக்கைத்துரோகம் இழைக்காமல் இருப்பது என நேர்மைக்கான இலக்கணத்தை நாம் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இஸ்ரயேல் மக்களின் முதல் அரசராகக் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்தான் சவுல். அவர் தொடக்கத்தில் கடவுள்மீது நம்பிக்கைகொண்டிருந்தாலும் பிறகு நாள்கள் செல்ல செல்ல தன்மீதும், தன் பதவியின்மீதும், தான் கொண்டிருந்த ஆயுதங்கள்மீதும் நம்பிக்கைகொள்ள தொடங்கினார். அதாவது, கொடுத்தவரை மறந்துவிட்டு, கொடுக்கப்பட்ட பொருள்கள்மீதும் நம்பிக்கைக்கொண்டார். அதனால்தான் சவுல் அரசப் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அதேவேளையில், சிறுபிள்ளைமுதல் தன்மீது அசைக்கமுடியாத அன்பும், ஆழமான நம்பிக்கையும், பிரமாணிக்கமும் கொண்டிருந்த தாவீதுக்கு அந்தப் பதவியைக் கொடுத்தார் ஆண்டவராம் கடவுள். மேலும் தாவீது அரசர் கடவுளை மட்டுமே தனக்கு எல்லாமுமாகக் கொண்டிருந்தார். அவருக்குப் பிடிக்காத எச்செயலையும் அவர் செய்யத்துணியவில்லை. தான்கொண்டிருந்த மணிமகுடத்தின்மீதல்ல, மாறாக, அதனை தனக்களித்த ஆண்டவர்மீது மட்டுமே பிரமாணிக்கமாய் இருந்தார். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அவர் பத்சேபாவுடன் பாவம் புரிந்தபோதிலும், தான் ஒரு அரசர், தனக்கு எதையும் செய்ய உரிமையுண்டு, கடவுள் நினைத்தால் கூட என்னை எதுவும் செய்யமுடியாது என்று கர்வமோ மமதையோ கொண்டிராமல் தான் ஒரு பாவி என்று தன்னை முழுதும் தாழ்த்திக்கொண்டார். “கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது" (திபா 51:1-3) என்று கூறி முழுமனத்தாழ்மையுடன் நடந்துகொண்டார் தாவீது. ஆகவே, இத்தகைய காரணங்களினால் தாவீது அரசரை நாம் நேர்மையாளர் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக அமைகிறது.

மேலும் தான் நேர்மையில் உறுதியாக நிலைத்து நிற்பதாக எடுத்துரைக்கும் தாவீது, இந்த நேர்மைக்குப் பரிசாகக் கடவுள் தனக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், அவரது முன்னிலையில் தன்னை நீடித்து நிலைக்கச் செய்வதாகவும் கூறி, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவாராக! ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! ஆமென்! ஆமென்!” எனக் கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. ஒரு நாட்டின் தளபதி இறந்து போனார். அவரது இடத்தை நிரப்புவதற்காக மன்னர் பல இளைஞர்களை வரவழைத்துத் தேர்வு நடத்தினார். பல கட்டங்களாக நடந்த தேர்வில் இறுதியாக இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வெற்றிபெறுபவன் தளபதியாவான். அது மட்டுமின்றி, ஒரு மூட்டை பொற்காசும் அவனுக்குப் பரிசுப் பொருளாக வழங்கப்படும். இறுதிப் போட்டிக்கு ஒரு நாள் முன்பாகவே இருவரும் வரவழைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தனித் தனியாகத் தங்கவைக்கப்பட்டனர். அதிகாலையிலேயே போட்டி ஆரம்பிக்கப்படும் என்பதால் நேரத்துடனேயே உணவருந்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவனின் அறைக்குள் தலைமை சமையல்காரர் திடீரென்று நுழைந்து அவனிடம் இரகசியமான குரலில், "தம்பி... நாளை நடக்கும் போட்டியில் நீ மட்டுமே கலந்து கொள்ளப் போகிறாய். எனவே போட்டியே இல்லாமல் நீதான் வெற்றிபெறுவாய்" என்றார். அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. சமையல்காரர் மீண்டும்,  "இதோ பார். நான் பக்கத்து அறையிலுள்ள உன் போட்டியாளனுடைய உணவில் தூக்கத்திற்கான மருந்தைக் கலந்து விடுவேன். அவனால் காலையில் எழுந்திருக்கவே முடியாது. மன்னர் சோம்பேறியை ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அப்புறம் நீதான் தளபதி. இதற்குப் பிரதிபலனாக, நீ பரிசாகப் பெறும் தங்கத்தை எனக்குத் தந்துவிட வேண்டும். சம்மதமா ?" என்று கேட்டார்.

சமையல்காரர் இதனைச் சொல்லி முடித்தவுடனேயே அவன் சொன்னான், "ஐயா!! இது நாட்டின் பாதுகாப்புத் தொடர்புடைய பதவி. தகுதியுள்ளவன் வென்றால் மட்டுமே நாட்டுக்குப் பாதுகாப்பு. எனவே, எனக்குத் தகுதி இருந்தால் நான் வெற்றி பெறுவேன். தயவு செய்து குறுக்கு வழி வேண்டாம். அதேநேரத்தில் என் போட்டியாளனிடம் பேரம் பேசி என் உணவில் மருந்தைக் கலந்துவிடமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்" என்றான்.  சமையல்காரர் புன்னகைத்தபடி, "கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும், நீ புத்திசாலி. சத்தியமாக நான் உனக்கு நல்ல உணவை மட்டுமே பரிமாறுவேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் சமையல்காரரின் உதவியாளர், மற்றுமுள்ள போட்டியாளனிடம் சென்று அதேபேரத்தைத் தொடங்கியிருந்தார். ஆனால் அங்கே நடந்ததோ வேறொன்று. அவன் பேரத்திற்கு ஒப்புக் கொண்டான். போட்டியில் கிடைக்கும் தங்கப் பரிசு மட்டுமன்றி இன்னும் கொஞ்சம் தங்கமும் சேர்த்துக் கொடுப்பதாகவும் வாக்களித்தான். உதவி சமையல் காரரும், "காரியத்தை சிறப்பாக முடிப்பேன். நீங்கள் தான் இந்நாட்டின் தளபதி" என்று கூறிச் சென்றார்.

இரவு உணவு முடிந்து இருவரும் உறங்கினார்கள். பேரத்துக்கு ஒப்புக் கொள்ளாத வீரன் அதிகாலையில் எழுந்து போட்டிக்குக் கிளம்பினான். அங்கே போய்ப் பார்த்தால், அவனோடு போட்டியிட யாருமே வந்திருக்கவில்லை. மன்னர் திடீரென அந்த இடத்திற்கு வந்து, "புதிய தளபதியாருக்கு வாழ்த்துகள்" என்று சொல்லித் தன்னுடைய வீர வாளைப் பரிசளித்தார். அவனுக்கோ ஒரே ஆச்சரியம். போட்டியாளன் இல்லாமல் தேர்வான அதிர்ச்சி. ஆனாலும், மன்னரை நேருக்கு நேராய்ப் பார்த்துவிட்ட மகிழ்ச்சி. தன்னையறியாமல் அவனுக்குக் கண்களில் நீர் கசிந்தது. மன்னர் அவனை அணைத்துக் கொண்டார். "மகனே! நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றுகிறதா உனக்கு? உங்களுக்கான இறுதிப்  போட்டி நேற்றிரவே முடிந்து விட்டது. பணத்தைக் கொடுத்துப் பதவியை வாங்குபவர்கள், அந்தப் பதவியைக் கொண்டு மேலும் சம்பாதிக்கத்தான் முயல்வார்கள். தேசத்தின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இது போன்ற பதவிகளில் அவனைப் போன்ற புல்லுருவிகள் இருந்தால் நாட்டையே கூட விற்றுவிடுவார்கள். எனவே, அவன் அதிகாலையிலேயே விரட்டப்பட்டான். அந்தச் சூழலிலும் உண்மையாய் நடந்து கொண்ட நீ தேர்ந்தெடுக்கப்பட்டாய்" என்றார்.

ஆகவே, இன்றைய நாளிலே நாம் தியானித்த இத்திருப்பாடலின் இறைவார்த்தைகள் நமக்குத் தரும் படிப்பினைகள் என்ன என்பதை ஆழ்ந்து சிந்திப்போம். நாம் வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் இறைவனுக்கு நேர்மையாளர்களாக, பிரமாணிக்கம் உள்ளவர்களாக, அவரை மட்டுமே சார்ந்து வாழக்கூடியவர்களாக இருக்கின்றோமா என்ற கேள்வியை எழுப்புவோம். பதவிக்கு (பணிப்பொறுப்புக்கு) வருவதற்கு முன்பு ஒருமாதிரியும் பதவிக்கு வந்தபின்பு வேறுமாதிரியும் நடந்துகொள்கின்றோமா, அதாவது இரட்டைவேடம் என்னும் முகமூடியை அணிந்துகொண்டு செல்கின்றோமா என்றும் கேள்வி எழுப்புவோம். பதவியைத் தங்களுக்கான பாதுகாப்பு கவசமாகக் கொள்பவர்கள் தங்களைக் கடவுளுக்கும் மேலாகக் கருதிக்கொள்கின்றனர். அவர்கள் மக்களுக்காக வாழ்வதில்லை, மாறாக மக்களைத் தங்களுக்காக வாழும்படி மாற்றுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மன்னர் சவுலைப் போன்று தூக்கியெறிப்பட்டு அழிந்துபோவார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இறையச்சமும், இறையன்பும், பிரமாணிக்கமும் மட்டுமே இவ்வுலகில் மட்டுமல்ல, மறுவுலகிலும் நம்மை நீடித்த புகழுடன் வாழச்செய்யும் என்பதை தாவீது அரசரின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். இந்நாளில் இறைவன் நமக்கு இவ்வருளை வழங்கிட வேண்டுமென இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2023, 12:45