விவிலியத் தேடல்: திருப்பாடல் 41-2, புனித நட்பில் துரோகம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'ஆண்டவரில் மகிழ்வோம்!' என்ற தலைப்பில் 41-வது திருப்பாடலில் 01 முதல் 03 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 04 முதல் 09 வரையுள்ள இறைவார்த்தைதைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளைப் பக்தியுணர்வுடன் வாசிப்போம். ‛ஆண்டவரே, எனக்கு இரங்கும்; என்னைக் குணப்படுத்தும்; உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்’ என்று மன்றாடினேன். என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி, ‛அவன் எப்போது சாவான்? அவன் பெயர் எப்போது ஒழியும்?’ என்கின்றனர். ஒருவன் என்னைப் பார்க்க வந்தால், நயவஞ்சகமாகப் பேசுகின்றான்; என்னைப் பற்றிய தவறான செய்திகளைச் சேகரித்துக்கொண்டு, வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான். என்னை வெறுப்போர் அனைவரும் ஒன்றுகூடி எனக்கு எதிராய்க் காதோடு காதாய்ப் பேசுகின்றனர். எனக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர். ‛தீயது ஒன்று அவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டது; படுக்கையில் கிடக்கின்ற அவன் இனி எழவே மாட்டான்’ என்று சொல்கின்றனர். என் உற்ற நண்பன், நான் பெரிதும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண்டகமாகத் தம் குதிகாலைத் தூக்குகின்றான் (வசனம் 04-09). இங்கே தாவீதின் சிந்தனைகள் இரண்டு வழிகளில் வெளிப்படுகின்றன. முதலாவதாக, கடவுளை மனம்நோகச் செய்த தனது பாவங்களுக்காக மனம் வருத்தி மன்னிப்பு வேண்டுகிறார். இரண்டாவதாக, தனது எதிரிகளின் நயவஞ்சகம், துரோகம், தீச்செயல்கள் ஆகியவற்றைக் குறித்து ஆண்டவரிடம் முறையிடுகின்றார்.
முதலாவதாக "ஆண்டவரே, எனக்கு இரங்கும்; என்னைக் குணப்படுத்தும்; உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்’ என்று மன்றாடினேன்" என்கின்றார் தாவீது அரசர். இந்த வரிகளை நாம் வாசிக்கின்ற போதே, தாவீது அரசர் தனது பாவத்தைக் குறித்துதான் பேசுகின்றார் என்பதை நம்மால் அறிய முடிகிறது. பாவம் ஒரு மனிதரை எல்லா வகையிலும் வீழ்ச்சியடைய செய்கின்றது. ஒரு மனிதர் எவ்வளவுதான் வாழ்வில் பலம் பொருந்தியவராக இருந்தாலும் அம்மனிதர் பாவத்திற்கு அடிமையாகும்போது, எல்லாவற்றையும் இழந்தவராகவே கருதப்படுகின்றார். அது ஒரு அழகிய கிராமம். அக்கிரமத்திற்கு அந்நாட்டின் அரசர் அடிக்கடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். காரணம், அவ்வூரிலிருந்த வாலிபன் ஒருவன் மிகவும் பலம்பொருந்திய யானை ஒன்றை அதன் வாலைப்பிடித்து அதே இடத்தில் நிறுத்துமளவுக்குப் வலிமைகொண்டவனாக இருந்தான். இதைக்கண்டு வியந்துபோன அரசர் இக்காட்சியைப் பார்ப்பதற்காகவே அங்கு அடிக்கடி வந்துகொண்டிருந்தார். அப்போது ஒருநாள், தன் உடனிருந்த அமைச்சரிடம், "அந்த வாலிபனுக்கு இது எப்படிச் சாத்தியமாகிறது அமைச்சரே" என்று கேட்டார். அதற்கு அமைச்சர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் ஓரிரு மாதங்கள் கழித்து அவ்வூருக்கு வந்தார் மன்னர். அப்போது அங்கு வந்த வாலிபன் அந்த யானையின் வாலைப்பிடித்து நிறுத்த எவ்வளவோ முயன்றும் அவனால் முடியாமல் போயிற்று. அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எத்தனையோ முறை அந்த யானையின் வாலைப்பிடித்து அதனை அதே இடத்தில் நிறுத்திய அவனால் ஏன் இம்முறை மட்டும் முடியாமல் போயிற்று!’ என்று வியப்பில் ஆழ்ந்தவராய் அமைச்சரை அழைத்து அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அமைச்சர், "ஒன்றுமில்லை அரசே, நான் அந்த வாலிபனிடம் சென்று, “நீ ஒவ்வொருநாளும் அந்த மலையில் இருக்கும் கோவிலுக்குச் சென்று சாமிக்கு விளக்குப் போட்டால் நாளொன்றுக்கு ஒரு தங்கக் காசு தருகின்றேன்” என்று கூறினேன். அவ்வளவுதான், அதன்பிறகு அவனுடைய முழுக்கவனமும் தங்கக் காசுமீது திரும்பிவிட்டதால், யானையை நிறுத்தும் அவனுடைய முழுப்பலத்தையும் இழந்துவிட்டன் அந்த வாலிபன்" என்று கூறினார். தாவீது எல்லா நிலையிலும் பலம்பொருந்தியவராக இருந்தார். காரணம் கடவுள் அவருடன் இருந்தார். அவர் எப்போது பத்சேபாவுடன் பாவத்தில் வீழ்ந்தாரோ அன்றே அவர் தனது முழுப்பலத்தையும் இழந்தவரானார். அதனால்தான், தனது பாவங்களுக்காக மனம் வருந்தும் தாவீது அரசர், தன்னைக் குணப்படுத்துமாறும், காப்பாற்றுமாறும் பாதுகாக்குமாறும் இறைவனிடம் வேண்டுகின்றார்.
இரண்டாவதாக, "என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி, ‛அவன் எப்போது சாவான்? அவன் பெயர் எப்போது ஒழியும்?’ என்கின்றனர்" என்று உரைக்கின்றார் தாவீது. இந்த வார்த்தைகள் உலகியல் நடைமுறையை எடுத்துரைக்கின்றன. இன்றைய உலகில் எதிரிகளே இல்லாமல் இருக்கவே முடியாது என்பது திண்ணம். அதுவும் சொந்த உறவுகளே எதிரிகளாக மாறும்போது அது சொல்ல முடியாத அளவிற்குப் பெரும் வேதனைகளையும், துயரங்களையும், வலிகளையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நாம் எப்போது முற்றிலும் ஒழிந்துபோவோம், நமது பெயரே இல்லாமல் போகும் என்று எண்ணுபவர்கள் பெரும்பாலும் அவர்களாகத்தான் இருக்கின்றனர். இவை எல்லாவற்றிக்கும் மேலாக, ஒரு மனிதர் தெய்வபயம் கொண்டவராக, உண்மையும் நேர்மையும் உள்ளவராக, எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் என்று எண்ணுபவராக வாழும்போது அம்மனிதருக்கு எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அதனால்தான் நல்லவர்கள் நீண்டு வாழ்வதில்லை, ஆனால் தீயவர்கள் நீண்டு வாழ்கிறார்கள் என்பதும் உலகியல் நடைமுறையாக இருக்கின்றது. இதன் காரணமாகவே, எதிரிகளின் கொடிய எண்ணங்களையும் திட்டங்களையும் அறிந்திருந்த தாவீது அரசர், “என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்; என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளித்தருளும். தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும். ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்; கொடியவர் என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்” (திபா 59:1-3) என்றும் இறைவனிடம் வேண்டுதல் செய்கின்றார்.
மூன்றாவதாக, "ஒருவன் என்னைப் பார்க்க வந்தால், நயவஞ்சகமாகப் பேசுகின்றான்; என்னைப் பற்றிய தவறான செய்திகளைச் சேகரித்துக்கொண்டு, வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான். என்னை வெறுப்போர் அனைவரும் ஒன்றுகூடி எனக்கு எதிராய்க் காதோடு காதாய்ப் பேசுகின்றனர். எனக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர். ‛தீயது ஒன்று அவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டது; படுக்கையில் கிடக்கின்ற அவன் இனி எழவே மாட்டான்’ என்று சொல்கின்றனர்" என்கின்றார் தாவீது. இன்றைய நடைமுறை வாழ்வில் இது நாள்தோறும் நிகழ்கின்றது. இங்கே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர்தான் அதிகம் காணப்படுகின்றனர். எந்தயொரு உறவிலும் உண்மைத்தன்மை இல்லை. எல்லாமே வெளிவேடம்தான். காரியம் ஆகும்வரை காலைப்பிடித்துக்கொண்டு கெஞ்சுபவர்கள், காரியம் முடிந்ததும் காலை வாரிவிடுகின்றனர். மனிதர்கள் அன்புசெய்யப்படுவதில்லை மாறாக, அவர்கள் பயன்படுத்தப்பட்டு தூக்கியெறிப்படும் பொருள்களாகின்றனர். ஆன்மிக வாழ்வுத் தொடங்கி வாழ்வின் அத்தனை நிலைகளிலும் இந்த use and through policy-தான் பின்பற்றப்படுகிறது. பார்த்தால் ஒன்று பார்க்கவில்லையென்றால் ஒன்று என மனிதர் பல்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு செயல்படுகின்றனர். அதுவும் பதவிக்காகப் பலர் போடும் முகமூடிகள் இங்கே ஏராளம்! தாராளம்! மொட்டைக்கடுதாசி கலாச்சாரம் நம்மத்தியில் அமோகமாக செழித்து வளர்ந்துள்ளது. அதுவும் துறவு வாழ்வில் காது கூசும் அளவிற்கு ஒருவர் மற்றவரின் பெயரைப் பங்கப்படுத்தும் அளவிற்கு மொட்டைக்கடுதாசிகள் நாலாபக்கமும் பறந்துகொண்டிருக்கின்றன. ஒரு நல்ல துறவி பெரிய பொறுப்புக்கு வரப்போகிறார் என்று அறிந்தவுடனேயே அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் பரப்பப்படுகின்றன. தாவீதின் காலத்திலேயே இப்படியென்றால் நம்காலத்தில் சொல்லவும் வேண்டுமோ. ஆக, தனிமனிதனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் இத்தீயச் செயலை நம்மால் முடிவுக்குக் கொண்டுவரவே முடியாது.
நான்காவதாக, "என் உற்ற நண்பன், நான் பெரிதும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண்டகமாகத் தம் குதிகாலைத் தூக்குகின்றான்" என்கின்றார் தாவீது. இந்த உலகில் வறுமையை சந்திக்காத மனிதர்கள் உண்டு. நோய்நொடிகளைச் சந்திக்காத மனிதர்கள் உண்டு, ஏன், பிரச்னைகளையே கூடச் சந்திக்காத மனிதர்கள் உண்டு. ஆனால் துரோகங்களைச் சந்திக்காத மனிதர்களே இருக்க முடியாது. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதரும் கண்டிப்பாக அவர்களது வாழ்வின் ஏதாவதொரு நிலையில் துரோகத்தைச் சந்தித்திருப்பார்கள் என்பது வெள்ளிடைமலை. உயிர்போகும் வலியைக் கூடத் தாங்கிக்கொள்ளும் மனிதர்கள் உண்டு. ஆனால் துரோகத்தைத் தாங்கிக்கொள்ளும் மனிதர்கள் உண்மையிலேயே மிகவும் அரிதுதான். எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் கூடத் துரோகங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தளர்ந்துபோகிறார்கள். கணவன் மனைவிக்குச் செய்யும் துரோகம், மனைவி கணவனுக்குச் செய்யும் துரோகம், பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்யும் துரோகம், பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்யும் துரோகம், ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் சொத்துக்காக ஒருவர் மற்றவருக்குச் செய்யும் துரோகம், மாணவன் ஆசிரியருக்கு இழைக்கும் துரோகம் எனத் துரோகத்தின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இங்கே தாவீது நட்பில் துரோகத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றார். துரோகத்திலெல்லாம் பெரிய துரோகம் அது தூய நட்பில் இழைக்கும் துரோகம்தான் என்பதை வரலாற்று நிகழ்வுகள் பல எடுத்துக்காட்டுகின்றன. 'You too Brutus' அதாவது, நீயும் கூடவா புரூட்டஸ் என்பது இன்றளவும் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற வார்த்தைகளாக ஒலிக்கின்றன. சீசரை எப்படி கொல்வது என்று அவருடைய எதிரிகள் காஷியஸ் என்பவன் தலைமையில் கொலைத் திட்டம் தீட்டி முடிக்கிறார்கள். மறுநாள் காலையில் சீசர் செனட் கூட்டத்தில் கலந்துகொள்ள கிளம்புகிறார். மனைவி ஓடோடி வந்து, ‘நேற்று இரவு, நான் கெட்ட கனவொன்று கண்டேன். நீங்கள் இன்று செனட் கூட்டத்திற்குப் போகவேண்டாம்’ என்கிறாள். அதை ஏற்றுக்கொள்ளாத சீசர் ‘நடப்பது நடக்கட்டும்’ என்றபடி கூட்டத்திற்கு செல்கிறார். அங்குதான் அவர் தனது எதிரிகளால் கொல்லப்படுகிறார். ஆனால் அவர்மீது விழும் கடைசி கத்திக்குத்து அவரது ஆருயிர் நண்பன் புரூட்டசால் நிகழ்கிறது. தன்னோடு ஒன்றாக உண்டு குடித்து, விளையாடி மகிழ்ந்து தன் உயிரோடு ஒன்றரக் கலந்துபோன தன் நண்பன் புரூட்டசும் கூடத் தனக்குத் துரோகம் இழைத்துவிட்டானே என்று எண்ணியபோதுதான், “நீயும் கூடவா புரூட்டஸ்" என்று கூறியவாறு மண்ணில் விழுந்து மரணிக்கிறார் சீசர். ஆக, நண்பனின் நயவஞ்சகம், துரோகம் என்பது தாவீதின் காலத்திலேயே நிகழ்ந்திருக்கின்றது என்பது திண்ணம். ஆகவேதான், எல்லா நிலைகளிலும் தாவீது துயரங்களையும் தோல்விகளையும் சந்தித்தாலும் தனது ஒப்பற்ற வலிமையும் கேடையமுமான கடவுளிடம் சரணடைந்தவராக அனைத்திலும் வெற்றிபெறுகின்றார். நமது அன்றாட வாழ்வில் நாமும் துரோகங்களையும் தோல்விகளையும் சந்திக்கும் வேளை, மனம் தளர்ந்துவிடாமல் இறைவனிடத்தில் சரணடைவோம். இத்தகைய அருளுக்காக இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்