கர்தினால் பரோலின் அவர்களின் வருகை நம்பிக்கை தருகிறது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தென்சூடானுக்கு வருகைதந்துள்ளது தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்துள்ளதாக வத்திக்கான் செய்திக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் மாலக்கலின் ஆயர் Stephen Nyodho Ador Maiwok
கர்தினால் பரோலின் அவர்களின் வருகை தங்களுக்கு நம்பிக்கையையும் திருஅவையின் அன்பையும் காட்டுகிறது என்றும், அதேவேளை, துயருறும் மக்களுடன் கத்தோலிக்கத் திருஅவையின் நெருக்கத்தையும் ஒன்றிப்பையும் நிரூபிக்கிறது என்றும் விளக்கியுள்ளார் ஆயர் Nyodho.
மேலும் கர்தினால் பரோலின் அவர்களின் வருகை, பல்வேறுச் சமூகங்களுக்கிடையில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கும், தங்கள் நாட்டை, மாநிலத்தை, மறைமாவட்டத்தைக் கட்டியெழுப்ப முன்னோக்கிச் செல்வதற்கும் மக்களுக்கு மிகுந்த வலிமையைத் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆயர் Nyodho.
மாலக்கல் மறைமாவட்டம் இயற்கைப் பேரழிவுகளாலும் போரினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று எடுத்துக்காட்டியுள்ள ஆயர் Nyodho அவர்கள், இந்நிலையிலும் இம்மறைமாவட்டம் சூடானில் போரினால் வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது என்றும், இது பெரும் சவாலாக இருக்கின்றது என்றும் உரைத்துள்ளார்.
சூடானின் எல்லையில் இருந்து மாலக்கல் வரை புலம்பெயர்ந்தோரை அழைத்து வருவதற்குப் பாலம் ஒன்றை உருவாக்கி முதலில் உதவி வழங்கியவர்களில் மாலக்கல் மறைமாவட்டமும் ஒன்று என்று விளக்கிய ஆயர் Nyodho அவர்கள், கடந்த பிப்ரவரியில் சூடானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை கூறியதுபோன்று, இங்குள்ள மக்களுக்கு அமைதியும் நல்லிணக்கமும் அதிகம் தேவைப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரினால் சிதறடிக்கப்பட்டுள்ள இம்மக்களை ஒன்றிணைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆயர் Nyodho அவர்கள், நைல் நதி மக்களிடையே நல்லிணக்கத்திற்கான பெரும் வலிமையையும் நம்பிக்கையையும் அளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.
நாட்டின் எல்லையில் இருந்து மாலக்கல் வரை புலம்பெயர்ந்து வரும் மக்களை அழைத்துச் செல்ல ஏழாயிரம் முதல் எட்டாயிரம் டாலர்கள் வரை செலவாகும் என்றும், அதன் பிறகு உணவு, தங்குமிடம் வழங்கப்பட வேண்டும், இப்போது நோய்களும் பரவி வருகின்றன என்றும் களத்தின் தற்போதைய நிலைமையை எடுத்துக்காட்டியுள்ள ஆயர் Nyodho அவர்கள், இத்தகையச் சூழலைத் தாங்கள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும், தங்களின் பலத்திற்கேற்ப தங்களால் முடிந்தவற்றையெல்லாம் அம்மக்களுக்குச் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மக்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்குச் சூழல் இல்லையென்றும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிகமான உதவிகள் தேவைபடுகின்றன என்றும் விளக்கியுள்ள ஆயர் Nyodho அவர்கள், அனைத்துலகச் சமுதாயமும், நல்லெண்ணம் கொண்டோரும் தங்களுக்கு உதவமுன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்சூடானின் வடகிழக்கில் அமைந்துள்ள மாலக்கலுக்கு 42,000-க்கும் மேற்பட்ட புலப்பெயர்ந்தோர் வந்தடைந்துள்ளனர். மொத்தத்தில், 15 இலட்சம் தென்சூடானியர்கள் சூடானில் உள்ளனர். ஆனால் பலர் இப்போது நடக்கும் போரிலிருந்துத் தப்பிக்கத் தெற்கு நோக்கி திரும்பி வருகின்றனர். இதனால் ஏறத்தாழ 2,00,000 பேர் தென்சூடானுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்