உடல் நோயுற்றிருந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் உடல் நோயுற்றிருந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் 

திருத்தந்தையர் வரலாறு– திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்- இறுதிப்பாகம்

இயேசு கிறிஸ்துவே நம் வாழ்வின் மையமாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஒரு நல்ல மனிதம் கொண்ட பக்தியுள்ள மனிதர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையை 8 ஆண்டுகள் மிகச் சிறப்புடன் வழிநடத்திச் சென்ற, 95 வயது நிரம்பிய நம் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2022 டிசம்பர் 31, சனிக்கிழமை உரோம் நேரம் காலை 9.34 மணிக்கு இறைபதம் எய்தினார்.

"ஆண்டவரே, நான் உம்மை அன்புகூர்கிறேன்" என்பதே, முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்குமுன் இரவில் கூறிய கடைசி வார்த்தைகள் என்று, அவரின் தனிப்பட்ட செயலரான பேராயர் Georg Gänswein கூறியுள்ளார்.

டிசம்பர் 31 அதிகாலை ஏறக்குறைய மூன்று மணியளவில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இவ்விறுதி வார்த்தைகளை தெளிவாக முணுமுணுத்தபோது அவரைக் கவனித்துக் கொண்டிருந்த தாதியர் கேட்டார் என்றும், அவரது வாழ்வின் இறுதி நேரங்களில் உடன் உழைப்பாளர்களும், உதவியாளர்களும் அவரைப் பராமரித்து வந்தனர் என்றும் பேராயர் Gänswein அவர்கள் தெரிவித்தார்.

1802ஆம் ஆண்டு மறைந்த திருத்தந்தை ஆறாம் பயஸின் இறுதிச் சடங்கை பணியிலிருந்த திருத்தந்தை ஏழாம் பயஸ் நிகழ்த்தியது போன்று, 2023, ஜனவரி 5, வியாழனன்று முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்டின் இறுதிச்சடங்கை இந்நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றினார்.

இயேசு கிறிஸ்துவே நம் வாழ்வின் மையமாக இருக்கவேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், ஒரு நல்ல மனித நேயம் கொண்ட பக்தியுள்ள மனிதர். இவரின் மரணத்தையொட்டி, திருஅவைத் தலைவர்கள் கூறியவற்றுள் சிலவற்றை இப்போது காண்போம்.

மறைந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் சிறந்த மனிதநேயம் கொண்ட இறையியலாளர் என்றும்,  அவர் மிகவும் எளிமையானவர், நட்புகொள்பவர், இளகிய மனது கொண்டவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski.

கடவுள் இயேசுவில் மனுவுரு எடுத்தார் என்பதும், நானே வழியும் உண்மையும் வாழ்வுமாக இருக்கின்றேன் என்பதுமே முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைச் செய்தியாக இருந்தது என்றும், இதனை உண்மையின் அடிப்படையில் அல்ல, மாறாக, நம்பிக்கையின் அடிப்படையில் நாம் ஏற்று பின்பற்றவேண்டும் என்பதும் அவர் நமக்கு வழங்கும் செய்தியாக அமைந்துள்ளது என்றும் எடுத்துரைத்தார் அவரின் தனிச் செயலரான பேராயர் Georg Gänswein.

திறமையான தலைமைத்துவப் பண்பு, மென்மையான குணம், நம்பிக்கை, மற்றும் சிறந்த அறிவாற்றல் கொண்டு தனது வாழ்வின் இறுதிவரை திருஅவைக்காக உழைத்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், விரைவில் திருஅவையின் மறைவல்லுநர் என்று அறிவிக்கப்படுவார் எனத் தான் நம்புவதாகக் கூறினார் ஜெனோவா உயர் மறைமாவட்டத்தின் அப்போதைய பேராயரான கர்தினால் Angelo Bagnasco.

முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் இளகிய மனமும், அன்பு நிறைந்த இரக்கமும், உண்மையான தூய உணர்வைத் தூண்டி எழுப்பியுள்ளன என்று கூறிய Torontoவின் கர்தினால் Thomas Collins அவர்கள், திருத்தந்தை அவர்கள் ஒரு கல்வியியல் இறையியலாளர் மட்டுமல்ல வியக்கத்தக்க அறிவுத்திறனும், மகத்தான கற்றல் ஆற்றலும், இவை அனைத்திற்கும் மேலாக ஆழ்ந்த இறைபக்தியும் கொண்டவர் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் நமது காலத்தின் மிகச் சிறந்த இறைவாக்கினர் என்றும், திருவிவிலியத்தில் நாம் காணும் இறைவாக்கினர்கள்போல நமது தற்போதைய உலகில் கடவுளைப் பற்றி நம்மிடம் அவரால் பேச முடிந்தது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் கர்தினால் Fernando Filoni.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வியின் தந்தை என்று, ஆஸ்ட்ரியாவின் வியன்னா பேராயர் கர்தினால்   Christoph Schönborn அவர்கள் கூறியுள்ளார்.

1985ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் அடிப்படையில் மறைக்கல்வியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து வழங்குமாறு திருத்தந்தையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது எனவும், அதன் தொடர்ச்சியாக, 1983ஆம் ஆண்டில் மறைக்கல்வியின் நெருக்கடி என்ற தலைப்பில், பிரான்சின் லியோன் மற்றும் பாரிசில் நடைபெற்ற கருத்தரங்கில் கர்தினால் இராட்சிங்கர் மிக முக்கியமான பங்கு வகித்தார் என்றும் கர்தினால் Schönborn அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இந்தியாவை அன்புகூர்ந்தார், இந்தியா மீது சிறப்பான கவனம் செலுத்தினார் மற்றும், இந்தியாவோடு தொடர்பில் இருந்தார் என்றும், இவரது மறைவு இந்தியத் திருஅவைக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறிய மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை நிறைவுறச் செய்ததுபோன்று, திருத்தந்தை புனித 2ஆம் யோவான் பவுல் அவர்கள் விதைத்தவை, மற்றும், அவரது எண்ணங்களை முழுமைபெறச் செய்தவர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், தான் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களை சந்தித்தபோது, மனிதகுல மதிப்பீடுகள், மத நல்லிணக்கம், சுற்றுச்சூழல் போன்றவைகளில் தனக்கும் திருத்தந்தைக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருந்ததை காணமுடிந்தது என்றும், இந்த மதிப்பீடுகளுக்காக தன் திருத்தந்தை பணியின்போது அதிகம் அதிகமாக உழைத்து, அர்த்தமுள்ள ஒரு வாழ்வை வாழ்ந்தவர் அவர் என தலாய் லாமா தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் மனத்தாழ்மையும் கண்ணியமும் நிறைந்தவர்,  கிறிஸ்தவ இறையியலின் சிறந்த பிரதிநிதியாகத் திகழ்ந்தார் என்றும், மேற்கத்திய கிறிஸ்தவத் தத்துவத்தில் அவர் ஒரு சிறந்த பின்னணியைக் கொண்டிருந்ததோடு, பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான உறவின் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார் என்றும் நினைவு கூர்ந்துள்ளார் இத்தாலிய இஸ்லாமிய மதச் சமூகத்தின் தலைவரான Shaykh Yahya Pallavicini.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தனது ஏழு ஆண்டுகள், பத்து மாதங்கள் மற்றும், ஒன்பது நாள்கள் தலைமைப்பணியில், கடவுள் நம் வாழ்வின் மையத்தில் இருக்கவேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருந்தவர் என்று பாராட்டப்பட்டுள்ளார். 

2005ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதியிலிருந்து 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை கத்தோலிக்கத் திருஅவையில் தலைமைப்பணியை ஆற்றிய முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், 2013ஆம் ஆண்டில் தனது தலைமைப் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தபோது உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியவர்.

ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் தலைமைப் பணியில் 24 வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களை இவர் மேற்கொண்டுள்ளார், மூன்று உலக இளையோர் நாள் நிகழ்வுகளிலும், குடும்பங்களின் உலக நிகழ்வு ஒன்றிலும் இத்திருத்தந்தை பங்குபெற்றுள்ளார்.

உலகில் கடவுள் மீதுள்ள நம்பிக்கை ஏறத்தாழ மடியும் நிலையில் உள்ளது என்றகூறி, மக்களின் வாழ்வில் கடவுள் மையத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக அதிகம் முயற்சித்தார் இவர்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், திருப்பீட தலைமையகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை. 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், திருப்பீட புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர்க்கு மேய்ப்புப்பணி அவை, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை ஆகிய இரண்டையும், ஒரே தலைவரின்கீழ் கொண்டு வந்தார். கர்தினால் ரெனாத்தோ மர்த்தினோ அவர்கள், அவற்றிற்குத் தலைவராகப் பணியாற்றினார்.  2009ம் ஆண்டில் அவர் ஓய்வு பெற்றபின், இந்த அவைகள் மீண்டும் தனித்தனி தலைவர்களுடன் செயல்படத் தொடங்கின. 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையை, குறுகிய காலத்திற்கு, கலாச்சார அவையுடன் இணைத்தார். 2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், புதியவழி நற்செய்தி அறிவிப்புக்கு திருப்பீட அவையை உருவாக்கி, பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்களை, அதன் முதல் தலைவராக நியமித்தார். 2013ஆம் ஆண்டு சனவரி 16ஆம் தேதி, மறைக்கல்வி பொறுப்பை, அருள்பணியாளர்கள் பேராயத்திடமிருந்து எடுத்து, புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவையிடம் ஒப்படைத்தார்.

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், இயேசு கிறிஸ்துவோடு நட்புறவு என்ற தலைப்பை தனது போதனைகளுக்கு அடிக்கடி எடுத்துக்கொண்டார். Deus caritas est அதாவது "கடவுளே அன்பு" என்பதுதான், அவரது முதல் திருமடலின் தலைப்பு. கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள மனிதரால், கடவுளுக்குத் தன்னை வழங்கவும், மற்றவரை அன்புகூரவும் இயலும் என்று இம்மடலில் குறிப்பிட்டுள்ளார். Spe Salvi அதாவது "எதிர்நோக்கால் மீட்கப்பட்டுள்ளோம்" என்ற இரண்டாவது திருமடல், 2007ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியும், Caritas in veritate அதாவது "உண்மையில் பிறரன்பு" என்ற மூன்றாவது திருமடல், 2009ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதியும் வெளியிடப்பட்டன. அதில், சமுதாய நீதி குறித்த திருஅவையின் போதனைகளை திருத்தந்தை விளக்கியுள்ளார். தொழிலிலும், பொருளாதார உறவுகளிலும் நன்னெறிகள் வாழப்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார். மேலும், திருத்தந்தை தனது பணி ஓய்வை அறிவித்த சமயத்தில், Lumen fidei அதாவது "நம்பிக்கையின் ஒளியில்" என்ற தனது நான்காவது திருமடலை நிறைவு செய்திருந்தார். ஆயினும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே அதனை வெளியிட்டார்.

திருமடல்கள் தவிர, திருத்தூது அறிவுரைகள், தன் சொந்த விருப்பத்தினால் வெளியிடும் Motu Proprio அறிக்கைகள் ஆகியவற்றையும் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

மேலும், பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மற்றும் மதத்தினருடனும் திருத்தந்தை நல்லுறவு கொண்டிருந்தார். 2006ஆம் ஆண்டில், ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் அவர்களும், திருத்தந்தையும் சேர்ந்து, இவ்விரு சபைகளுக்கிடையே நாற்பது ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உரையாடலை மையப்படுத்தி பொதுவான அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இவர், யூத வரலாறு மற்றும், யூத இன அழிவு குறித்து கொண்டிருந்த அக்கறையினால், இவரின் திருத்தந்தை தேர்தலை, யூதக் குழு வரவேற்றது. தலாய் லாமா அவர்கள், இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வாழ்த்தியதுடன், 2006ஆம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் வந்து திருத்தந்தையைச் சந்தித்தார்.

இத்திருத்தந்தை, தன் தலைமைப்பணிக் காலத்தில், திருஅவையில் சில அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடு பிரச்சனை, Vatileak பிரச்சனை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

2013ஆம் ஆண்டில் திருஅவையின் தலைமைப் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததற்குப் பின்னர், Mater Ecclesiae துறவு இல்லத்தில் தங்கியிருந்தார். முதிர்வயதின் காரணமாக, சில நாள்களாகவே இத்திருத்தந்தையின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. 2022, டிசம்பர் 28, புதன் மாலையில் Mater Ecclesiae துறவு இல்லத்தில் நிறைவேற்றப்பட்ட திருப்பலிக்குப் பின்னர், முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு நோயில்பூசுதல் அருளடையாளமும் வழங்கப்பட்டது. டிசம்பர் 31, சனிக்கிழமை உரோம் நேரம் காலை 9.34 மணிக்கு இறைபதம் எய்தினார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்.

இத்துடன் கடந்த கால திருத்தந்தையர்களின் வாழ்க்கை வரலாறு நிறைவுபெறுகிறது. வரும் வாரம் தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறித்து சிறிது நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2023, 11:37