தடம் தந்த தகைமை : சீலோவில் எல்கானா
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன். அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்; பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை. எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குப் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் இருந்தனர். எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு. அன்னாவின் மீது அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தார். ஏனெனில், ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார். ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்ததால், அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள். இவ்வாறு, ஆண்டுதோறும் நடந்தது; அவர் ஆண்டவரின் இல்லம் வந்த போதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். இதன் காரணமாக, அன்னா உண்ணாமல் அழுவார். அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி “அன்னா நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலானவன் அன்றோ?” என்று கூறி அவருக்கு ஆறுதல் அளித்து வந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்