முஸ்லிம் உலகோடு உரையாடலை மீண்டும் தொடங்குவதற்கு..
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பஹ்ரைன் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது, பெரியதொரு முஸ்லிம் உலகோடு உரையாடலை மீண்டும் தொடங்குகின்ற மற்றும், அதனை உருவாக்குகின்ற யுக்தியைக் கொண்டிருக்கிறது என்று, அக்டோபர் 06, இவ்வியாழனன்று, தென் அரேபியாவின் திருப்பீடப் பிரதிநிதி ஆயர் பவுல் ஹின்டர் அவர்கள் கூறியுள்ளார்.
பஹ்ரைன் திருத்தூதுப் பயணம் குறித்து ஆசியச் செய்திக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள ஆயர் ஹின்டர் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, ஈராக், கஜகஸ்தான் ஆகிய, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை, பஹ்ரைன் நாட்டிற்கும் பயணம் மேற்கொள்வது, உரையாடல் மற்றும், சந்திப்புப் பாதையைத் தொடர்வதற்கு அழைப்பு விடுப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இத்திருத்தூதுப் பயணம், இஸ்லாமுக்குள்ளே இருக்கின்ற பல்வேறு கூறுகளை அணுகுவதற்கு எடுத்துள்ள நல்லதொரு யுக்தி என்றும், அரபு நாடுகளுக்குள் பஹ்ரைனைத் தெரிவுசெய்திருப்பது இஸ்லாமின் உலகளாவிய ஷியா பிரிவினருக்கு ஓர் உறுதியான அடையாளமாக உள்ளது என்றும் ஆயர் கூறியுள்ளார்.
பஹ்ரைனில் ஷியா பிரிவினர் பெருமளவாக இருந்தபோதிலும், அந்நாட்டுத் தலைமைத்துவம் சுன்னிப் பிரிவினரிடம் உள்ளது என்பதையும் ஆயர் ஹின்டர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
பஹ்ரைனின் 14 இலட்சம் மக்கள் தொகையில், ஏறத்தாழ 2 இலட்சத்து 40 ஆயிரம் வெளிநாட்டவர். மேலும், அந்நாட்டிலுள்ள எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கரில் பெரும்பான்மையினோர் இந்தியா மற்றும், பிலிப்பீன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள். வளைகுடா நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், கிறிஸ்தவர்களாக இருப்பது அரிதாக இருந்தாலும், இந்நாட்டில் ஏறத்தாழ ஆயிரம் கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்று ஆசியச் செய்தி கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பஹ்ரைன் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது, அந்நாட்டு அரசரின் அழைப்பின்பேரில் இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்