பாரபட்சமற்ற ஆய்வு நடத்த வேண்டும்: கேரள கத்தோலிக்கர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எங்களின் முக்கிய கோரிக்கையை அரசு ஏற்காததால், நாங்கள் எங்கள் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று, இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இம்மாநிலத்தில் கோடிக்கணக்கான டாலர் செலவில் அமைக்கப்பட்டுவரும் துறைமுகத் திட்டதை எதிர்த்து திருவானந்தபுரம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் போராட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில், இவ்வாறு கூறியுள்ள போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பணி. மைக்கேல் தாமஸ் அவர்கள், துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்தி அதன் புவியியல் மற்றும் சமூகத் தாக்கத்தை மதிப்பீடு செய்வதற்கு ஒரு பாரபட்சமற்ற ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய கோரிக்கை என்று கூறியுள்ளார்.
இத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அம்மாநிலத்தின் முதலமைச்சர் கூறியிருப்பது வெறும் கண்துடைப்புதான் என்று சுட்டிக்காட்டியுள்ள பணி. தாமஸ் அவர்கள், இத்திட்டத்தால், ஏறத்தாழ 500 குடும்பங்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிலங்களை இழந்துள்ளனர், என்றும், அவை துறைமுக கட்டுமானப் பணிகள் தொடங்கிய பின்னர் கடலில் மூழ்கியுள்ளன என்று கவலை தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு நாங்கள் கேட்கவில்லை, ஆனால் மீனவ மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளவேண்டும் என்றுதான் நாங்கள் அரசிடம் கோரிக்கை வைக்கின்றோம் என்று கூறிய பணி.தாமஸ் அவர்கள், மீனவர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு பாரபட்சமற்ற ஆய்வில், எங்கள் அச்சம் தவறு என்று கண்டறியப்பட்டால், நாங்கள் போராட்டத்தை நிறுத்திக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சனையில் நீதிமன்றம் தலையிடவேண்டும் என்று அதானி குழுமம் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில், "நாங்களும் மனுதாரராகப் பங்கேற்று, எங்கள் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் விளக்குவோம்" என்று கூறிய பணி தாமஸ் அவர்கள், இத்திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்படுகின்றன என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்