இம்மானுவேல் என்ற சிறுவன் திருத்தந்தையுடன் இம்மானுவேல் என்ற சிறுவன் திருத்தந்தையுடன்  

வாரம் ஓர் அலசல்: ஆயுதத்தால் அல்ல, அன்பால் காயப்படுத்துவோம்

போரிடும் சக்திகள் மத்தியில் பிளவுண்டு இருக்கின்ற உலகத்தில், ஒருவரையொருவர் மதிப்பதில் ஒன்றிணைந்த ஓர் உலகு நோக்கிச் செல்ல நாடுகள் எடுத்துக்காட்டாய் விளங்கமுடியும்

மேரி தெரேசா: வத்திக்கான்

2018ம் ஆண்டு ஏப்ரல் 15. அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் பெருநகரிலுள்ள புனித சிலுவை பவுல் பங்குத்தளத்திற்குச் சென்றிருந்தார். அன்று பங்கு மக்களுக்கு திருப்பலியைத் தொடங்குவதற்கு முன்னர், திருத்தந்தை மக்கள் அனைவரையும் சந்தித்தார். அச்சந்திப்பில் கேள்வி-பதில் நேரத்தில் இம்மானுவேல் என்ற சிறுவன் திருத்தந்தையிடம் கேள்வி கேட்பதற்காக ஒலிவாங்கியின்முன் போய் நின்றான். அப்போது அவனால் பேச முடியாமல் பெருத்த மூச்சு வாங்கினான். அருகில் நின்ற அருள்தந்தையும் பேசு, பேசு என்று அன்போடு தட்டிக்கொடுத்தார். திருத்தந்தையும், இம்மானுவேல் தயங்காமல் பேசு என்று உற்சாகப்படுத்தினார்.  என்னால் பேச முடியவில்லை என்று முணுமுணுத்த இம்மானுவேல் கண்களைக் கசக்கி அழத்தொடங்கினான். அவனது நிலைமையைப் புரிந்துகொண்ட திருத்தந்தை, அவனை ஆதரவோடு இருகரம் நீட்டி மேடைக்கு அழைத்தார். இம்மானுவேல், இங்கே வா, என்னருகே வா, என் காதருகில் சொல் என்றார். அங்கு கூடியிருந்த மக்களும் கைதட்டி இம்மானுவேலை உற்சாகப்படுத்தினர். அவனை அரவணைத்துக்கொண்ட திருத்தந்தை, சிறுவனின் தலையைக் கோதிவிட்டபடியே, அவன் தன் காதருகே கூறியதைக் கவனமாகக் கேட்டார். தனது அப்பாவை இதயப்பூர்வமாக அன்புகூர்ந்த இம்மானுவேல், இறந்துபோன தன் அப்பாவுக்காக, இதயத்தின் வலியோடு அழுதான். நாம் பேசியதைப் பொதுவில் சொல்லட்டுமா என்று அவனிடம் அனுமதி கேட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதைப் பொதுவில் கூறினார். சில நாள்களுக்குமுன் என் அப்பா இறந்துவிட்டார். அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் அவர் தனது நான்கு குழந்தைகளும் திருமுழுக்குப் பெறுமாறு செய்துள்ளார். அவர் ஒரு நல்ல மனிதர். என்னுடைய அந்த அப்பா விண்ணக வீட்டில் இருப்பாரா? இவ்வாறு கேள்வி எழுப்பிய சிறுவன் இம்மானுவேலுக்குப் பதிலளித்த திருத்தந்தை, இம்மானுவேல், உன் அப்பா, தன் பிள்ளைகளை கடவுள் நம்பிக்கையற்றவர்களாக ஆக்கிவிடாமல் அவர்களுக்கு திருமுழுக்குக் கொடுத்திருக்கிறார். இப்படிச் செய்த உன் அப்பா, நிச்சயமாக கடவுள் நம்பிக்கையுள்ளவராக இருக்கிறார். கடவுளுக்கு நிச்சயமாக இது பிடித்திருக்கும் என்று கூறினார்.

போர்களில் தந்தையரை இழந்து தவிக்கும் பிள்ளைகள்

ஓர் ஒப்பற்ற அப்பா, நூறு ஆசான்களுக்கு ஒப்பானவர். பொறுமையே இல்லாதவன்கூட ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம். ஆனால் பொறுப்புள்ளவரால்தான் ஒரு பிள்ளையை வளர்த்தெடுக்க முடியும். இன்று உலகின் பல இடங்களில் துண்டு துண்டாய் நடந்துவரும் மூன்றாம் உலகப் போரினால் எத்தனையோ இம்மானுவேல்கள், இறந்துபோன தங்களின் அப்பாக்களுக்காக அழுதுகொண்டிருக்கின்றனர். இரஷ்யாவின் ஆக்ரமிப்பால் உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரால் பல சிறார் தங்களின் அப்பாக்களை நாட்டிலே தவிக்க விட்டுவிட்டு மற்ற நாடுகளுக்கு, அன்னையரோடும், உறவினர்களோடும் புலம்பெயர்ந்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உக்ரைனில் அமைதி திரும்பவேண்டும், ஆயுத சப்தங்கள் அடங்கவேண்டும் என்று அடிக்கடி விண்ணப்பித்து வருகிறார். ஜூலை 03, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கியபின்னரும் உக்ரைன் நாட்டின் அமைதிக்காக திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.

உக்ரைனில் அமைதி நிலவ திருத்தந்தை

உலகிற்கு அமைதி தேவைப்படுகிறது. உக்ரைனிலும், உலகெங்கிலும் அமைதி நிலவுமாறு தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம். போரிடும் இருதரப்புகளும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதாலோ அல்லது, ஒருவர் ஒருவர் மீது அச்சம் கொள்வதாலோ அமைதியை எட்ட முடியாது. இத்தகைய யுக்தி, கடிகாரத்தை எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் திருப்புவதாக இருக்கும். அதனால், போர், மற்றும், காழ்ப்புணர்வை வலியுறுத்தும் போக்கிற்கு எதிராய்ச் செயல்படுமாறு, நாடுகளின் தலைவர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அழைப்புவிடுக்கிறேன். உக்ரைனில் இடம்பெறும் போர், உரையாடல் வழியாக வருங்காலத் தலைமுறைகளுக்கு சிறந்ததோர் உலகைக் கட்டியெழுப்ப நாடுகளின் ஞானமுள்ள தலைவர்களுக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது. இது, கடவுளின் உதவியோடு  எப்போதும் இயலக்கூடியதே. எனினும், போரிடும் சக்திகள் மத்தியில் பிளவுண்டு இருக்கின்ற உலகத்தில், ஒருவரையொருவர் மதிப்பதில் ஒன்றிணைந்த ஓர் உலகு நோக்கிச் செல்ல நாடுகள் எடுத்துக்காட்டாய் விளங்கமுடியும். உக்ரைனில் போரை அதிகரிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும். போரை எதிர்ப்பதற்கு சொல்திறனைப் பயன்படுத்துவதை விடுத்தும், அரசியல், பொருளாதாரம், மற்றும், இராணுவ சக்தி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட யுக்திகளிலிருந்து வெளியேறியும், உலகளாவிய அமைதிக்கான ஒரு திட்டம் நோக்கி நாடுகள் செல்லவேண்டும்.  

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைனின் அமைதிக்காக அழைப்புவிடுத்தார்.

காங்கோ மக்களாட்சி குடியரசில் அமைதி நிலவ..

ஜூலை 03, இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், உரோம்வாழ் காங்கோ மக்களாட்சி குடியரசின் மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட திருப்பலியில், மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காயப்பட்டுள்ள இந்நாட்டின் அமைதிக்காக, அந்நாட்டில் இதேநாளில் எழுப்பப்படும்  இறைவேண்டுதல்களோடு இணையுமாறு அம்மக்களைக் கேட்டுக்கொண்டார். கிறிஸ்தவர்கள், வெறுப்பு, மற்றும், பழிவாங்குதல் ஆகிய உணர்வுகளையும், மற்ற இனத்தவர் மீது வெறுப்புக்கு இட்டுச்செல்லும் தன் இனம் மீதுள்ள பற்றையும் தவிர்த்து, ஒப்புரவு இயலக்கூடியதல்ல என்ற சோதனையை வென்று, அமைதிக்குச் சான்றுகளாய் வாழுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார். அன்புச் சகோதரர், சகோதரிகளே, அமைதி நம்மில் உள்ளது. அது, உங்களோடும் என்னோடும் ஒவ்வொருவரின் இதயத்திலும் பிறக்கின்றது என்றும், இயேசுவின் சீடர்கள் வன்முறையைப் புறக்கணிக்கவேண்டும், யாரையும் புண்படுத்தக் கூடாது, அனைவரையும் அன்புகூரவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார். இதேநாளில் திருத்தந்தையின் பிரதிநிதியாக அந்நாட்டில் திருப்பலி நிறைவேற்றிய, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும், காங்கோ மக்களாட்சி குடியரசின் கிழக்குப் பகுதியில் ஆயுதக் குழுக்களால் அமைதி எப்போதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது என்று கூறி, அந்நாட்டில் அமைதி நிலவுவதாக எனச் செபித்தார்.

இன்று உலகுக்கு மட்டுமல்ல, தனிமனிதர் பலருக்கும், குடும்பங்களுக்கும் அமைதி தேவைப்படுகிறது. நம் ஆன்மாவுக்கு வெளியே எந்த எதிரியும் இல்லை. ஆனால் உண்மையான நம் பகைவர்கள் நமக்குள்ளே இருக்கின்றனர். கோபம், தற்பெருமை, பேராசை, காழ்ப்புணர்வு போன்றவையே அந்தப் பகைவர்கள். அவற்றை நாம் விலக்கி வாழ்ந்தால் அமைதியான வாழ்வை அனுபவிக்கலாம்.

அன்பால் காயப்படுத்திய மேற்கு ஜெர்மானியர்கள்

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதிக்குமுன், மேற்கு, மற்றும், கிழக்கு ஜெர்மனிகளின் பனிப்போர் அடையாளமாக விளங்கியது பெர்லின் சுவர். ஆணவத்துக்கு அடிபணிந்த சுவர் அது. இரு பகுதிகளின் ஜெர்மானியர்களை மனரீதியாகப் பிரித்து வைத்திருந்த சுவர் அது. ஒருநாள் கிழக்கு பெர்லினைச் சேர்ந்தவகள், மேற்கு பெர்லினில் வாழ்ந்தவர்களை அவமானப்படுத்த நினைத்தார்கள். அதனால் இரவோடு இரவாக, ஒரு லாரி நிறையக் குப்பைக்கூளங்களைக் கொண்டுபோய்க் கொட்டினார்கள். இதைப் பார்த்த மேற்கு பெர்லின் நகர மக்கள், இதற்கு என்ன செய்யலாம் என கூடிப்பேசினார்கள். அதன்படி, ஒரு லாரி நிறைய உணவுப் பொருள்கள், பால் பொருள்கள், ரொட்டிகள், மளிகை சாமான்கள் என நிரப்பி, இரவோடு இரவாகக் கொண்டுபோய் கிழக்கு பெரலின் பக்கம் வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு வந்துவிட்டார்கள். அதோடு, ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொடுப்பார்கள் என்ற வரிகளையும் எழுதிவைத்துவிட்டு வந்தார்கள். இதைப் பார்த்த கிழக்கு பெர்லின் மக்கள் வெட்கமடைந்தார்கள். அந்தப் பொருள்களையும் நன்றியோடு எடுத்துப் பயன்படுத்தினார்கள். இச்செய்தி பெர்லினின் இரு பகுதிகளிலும் பரவியது. மெது மெதுவாக இரு ஜெர்மானியர்களுக்கு இடையே நட்பு மலரத் தொடங்கியது. பனிப்போரும் பணிய ஆரம்பித்தது. இதன் விளைவாக, 1989ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி நூற்றுக்கணக்கானவர்கள்கூடி ஒரே நேரத்தில் பெர்லின் சுவரில் ஏறி மேற்கு ஜெர்மன் பக்கம் வந்தார்கள், ஆயிரக்கணக்கான மேற்கு ஜெர்மானியர்களும் இவர்களை அன்போடு வரவேற்று கைகுலுக்கினார்கள். பின்னர் பிரிவினையின் அடையாளமாக இருந்த பெர்லின் சுவரும் தகர்க்கப்பட்டது.   

ஆயுதத்தால் வெல்ல முடியாததை அன்பு வென்றுவிட்டது. நம்மை ஆயுதத்தால் காயப்படுத்தியவரை அன்பால் காயப்படுத்தவேண்டும். அன்பா? பகையா?, அமைதியா? வன்முறையா? வாழ்வா? சாவா? இவற்றில் எது நம்மிடம் இருக்கிறதோ அதைத்தான் மற்றவருக்குக் கொடுப்போம். ஒருவரால் கடவுளைத் தெரிந்துகொள்ள முடியாது, ஆனால் நான் என்ற சுவரைத் தகர்த்தெறிந்தபின்பு, கடவுளாய் ஆக முடியும் என்று ஞானி ஒருவர் சொல்கிறார். எனவே, ஆயுதத்தால் அல்ல, அன்பால் மற்றவரை காயப்படுத்துவோம். உலகில் அமைதி நிலவ நம் பங்கை ஆற்றுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2022, 14:50