'இதோ உங்கள் அரசன்!' என்று, பிலாத்து, இயேசுவை அறிமுகம் செய்த காட்சி 'இதோ உங்கள் அரசன்!' என்று, பிலாத்து, இயேசுவை அறிமுகம் செய்த காட்சி 

கிறிஸ்து அனைத்துலக அரசர் திருநாள்: ஞாயிறு சிந்தனை

கிறிஸ்து அரசர் திருநாளன்று, தங்கள் உலக நாளைக் கொண்டாடும் இளையோர், உண்மையான தலைமைத்துவத்தின் பாடங்களை பயின்று, உன்னத தலைவர்களாக, இவ்வுலகை கட்டியெழுப்பவேண்டும் என்று மன்றாடுவோம்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

கிறிஸ்து அரசர் திருநாள்: ஞாயிறு சிந்தனை

நவம்பர் 21, இஞ்ஞாயிறன்று, 'இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' திருநாளை சிறப்பிக்கிறோம். இவ்வாண்டு, முதல் முறையாக, இத்திருநாளை, இளையோர் உலக நாளாகவும் நாம் சிறப்பிக்கிறோம். கத்தோலிக்கத் திருஅவையில், இளையோர் உலக நாளை உருவாக்கிய திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இந்நாளை, ஒவ்வோர் ஆண்டும், புனித வாரத்தின் முதல் நாளான, குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்குமாறு அழைப்புவிடுத்தார்.

2020ம் ஆண்டு, நவம்பர் மாதம், கிறிஸ்து அரசர் திருநாள் திருப்பலியை வத்திக்கானில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பலியின் இறுதியில், 2021ம் ஆண்டு முதல், இளையோர் உலக நாள், கிறிஸ்து அரசர் திருநாளன்று சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இவ்வாண்டு, கிறிஸ்து அரசர் திருநாளையும், இளையோர் உலக நாளையும், முதல் முறையாக, நாம் இணைத்து கொண்டாடுகிறோம்.

கண்ணுக்கும், கருத்துக்கும் புலப்படாத கோவிட்-19 கிருமி, உலகமனைத்தையும் தன் அதிகாரப்பிடிக்குள் அடக்கிவைத்திருந்த வேளையில், அதை எதிர்த்துப் போராட, உலகத் தலைவர்கள் யாரும் இணைந்து வரவில்லை என்ற உண்மை, இன்றைய உலகில், தலைமைத்துவம் காணாமல் போய்விட்டதை உணர்த்தியது. இன்றைய உலகத் தலைவர்களில் பெரும்பாலானோர், நன்னெறியின் அடிப்படையில் செயல்படாமல், சுயநலத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருவதால், உண்மையான தலைமைத்துவம் என்றால் என்ன என்பதை இளையோர் புரிந்துகொள்ளாமல் போகும் ஆபத்து உள்ளது.

இத்தகையச் சூழலில், உண்மையான அரசர், அல்லது, தலைவரின் பண்புகளைப்பற்றி சிந்திக்க, 'கிறிஸ்து அரசர்' திருநாளும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள இளையோர் உலக நாளும் நம்மை அழைக்கின்றன.

இவ்விரு திருநாள்களும் இணைந்துவரும் இஞ்ஞாயிறன்று, உலகத்தலைவர்களின் பிரதிநிதியான பிலாத்து, உண்மைத் தலைவரான இயேசுவைச் சந்திக்கும் காட்சி, இன்றைய நற்செய்தியாக (யோவான் 18: 33-37) நமக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிகாரத்தின் ஆணவத் தளைகளால் கட்டுண்டிருந்த பிலாத்தும், அவருக்கு முன், குற்றவாளியென பொய்க்குற்றம் சுமத்தப்பட்ட இயேசுவும், இன்றைய இளையோருக்கும், நம் அனைவருக்கும், அதிகாரம், தலைமைத்துவம் ஆகியவற்றைக் குறித்து சொல்லித்தர விழையும் பாடங்களைப் பயில, நம் உள்ளங்களைத் திறப்போம்.

கிறிஸ்துவை அரசராகக் கொண்டாடும்போது, நமக்குள் ஒரு சங்கடம் எழ வாய்ப்புண்டு. அதை முதலில் சிந்திப்போம். ஆயன், மீட்பர், போதகர், செம்மறி, வழி, ஒளி, வாழ்வு என்ற பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்க்கும்போது, மனநிறைவு பெறுகிறோம். ஆனால், கிறிஸ்துவை அரசராக எண்ணும்போது, மனதில் சங்கடங்கள் உருவாகின்றன. ஏன் இந்த சங்கடம் என்று சிந்திக்கும்போது, ஓர் உண்மை புலப்படுகிறது. சங்கடம், ‘கிறிஸ்து’ என்ற வார்த்தையில் அல்ல, ‘அரசர்’ என்ற வார்த்தையில்தான்.

அரசர் என்றதும், நம் மனத்திரையில் தோன்றும் கற்பனைகள், இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம... என்ற அர்த்தமற்ற பல அடைமொழிகளைச் சுமந்துத் திரியும் உருவம்! பட்டாடையும், வைரமும் உடுத்தி, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் கொழுத்து, பெருத்த உருவம்! ஆயிரமாயிரம் அப்பாவி மக்களைப் படிக்கற்களாக்கி, அரியணை ஏறும் அரக்க உருவம்!

அரசர் என்றதும், குப்பையாய் வந்துசேரும் இந்தக் கற்பனை உருவங்களுக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. பிறகு, எப்படி இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொள்வது? சங்கடத்தின் அடிப்படை, இதுதான்.

அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், தவறான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு கட்டாயம் ஓர் அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர், ஓர் அரசை நிறுவியவர்.

அவர் நிறுவிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, அதைப் பாதுகாக்கக் கோட்டைகள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை.

இன்னும் ஆழமான ஓர் உண்மை இதில் என்னவென்றால், எதுவுமே தேவையில்லாமல், இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் மட்டுமே இந்த அரசு நிறுவப்படும். யார் பெரியவர் என்ற எண்ணமே இல்லாத இந்த அரசில், எல்லாருக்கும் அரியணை உண்டு, எல்லாரும் இங்கு அரசர்கள்! இந்த அரசர்கள் நடுவில், இயேசு, ஓர் உயர்ந்த, நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று நாம் தேடினால், ஏமாந்துபோவோம். காரணம்?... அவர் நமக்குமுன் மண்டியிட்டு, நம் காலடிகளைக் கழுவிக்கொண்டிருப்பார். மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அவர்களது காலடிகளைக் கழுவும் இயேசு என்ற மன்னரின், வேறுபட்ட அரசத்தன்மையைக் கொண்டாடத்தான், இந்த கிறிஸ்து அரசர் திருநாள்.

‘ராஜாதி ராஜ’ என்று நீட்டி முழக்கிக்கொண்டு, தன்னை மட்டும் அரியணை ஏற்றிக் கொள்ளும் அரசர்களும் உண்டு. எல்லாரையும் மன்னர்களாக்கி, அனைவருக்கும் மகுடம் சூட்டி மகிழும் அரசர்களும் உண்டு. இருவகை அரசுகள், இருவகை அரசர்கள். இந்த இரு வேறு அரசுகளின் பிரதிநிதிகளான பிலாத்து, இயேசு ஆகிய இருவரையும் இணைத்து சிந்திக்க, இன்றைய நற்செய்தி வாய்ப்பளிக்கிறது.

நற்செய்தியாளர் யோவான், இயேசுவின் பாடுகளைப்பற்றி பதிவு செய்துள்ள 82 இறைவாக்கியங்களில் (பிரிவு 18,19) பெரும் பகுதி, தலைமைக்குரு, மற்றும், பிலாத்து ஆகியோருக்கு முன் நிகழ்ந்த விசாரணைகளாக அமைந்துள்ளது. இவ்விரு விசாரணைகளிலும், இயேசு, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தாலும், உண்மையில், தலைமைக்குரு, மதத்தலைவர்கள், பிலாத்து, மற்றும் அங்கிருந்த மக்கள் அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுகின்றனர்.

கரங்கள் கட்டப்பட்டு, கசையடிப்பட்டு, முள்முடி தாங்கி, சக்தி அனைத்தையும் இழந்த நிலையில், மக்கள் முன் நிறுத்தப்பட்டிருந்த இயேசு, சூழ நின்ற அனைவரையும் விட சுதந்திரமாக, சக்திமிகுந்தவராக விளங்கினார் என்பதை, நற்செய்தியாளர் யோவான், இப்பகுதியில், நமக்கு, மீண்டும், மீண்டும் நினைவுறுத்துகிறார்.

அதற்கு நேர்மாறாக, தன் பதவியைக் காத்துக்கொள்வதற்காக, தவறான தீர்ப்பு சொன்ன பிலாத்தும், பொறாமையாலும், வெறுப்பாலும் சிறைப்பட்டிருந்த மதத்தலைவர்களும், சுதந்திரமாகச் சிந்திக்கும் சக்தியை இழந்து நின்ற மக்கள் அனைவரும், பல்வேறு வழிகளில், தங்கள் சுதந்திரத்தை இழந்து, குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இன்றைய நற்செய்தியில் சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சியில், யார் உயர்ந்தவர்? தன் மனசாட்சியும், மனைவியும் கூறும் உண்மைகளைக் காணமறுத்து, தன் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில், அரியணையில், தன்னையே இறுக்கமாக அறைந்துகொண்ட பிலாத்து உயர்ந்தவரா? அல்லது, பதவி என்ன, உயிரே பறிபோனாலும், உண்மையை நிலைநாட்டுவதே முக்கியம் என்று, நிமிர்ந்து நிற்கும் ஏழை இளைஞன் இயேசு உயர்ந்தவரா? யார் உண்மையில் அரசர்?

அரியணையில் நிரந்தரமாய் அமரவேண்டும் என்ற வெறியில், உண்மையை, உன்னத இலட்சியங்களை புறக்கணித்த பிலாத்து, இன்றைய உலகத் தலைவர்கள் பலரை நம் நினைவுக்குக் கொணர்கிறார். இவர்கள் அனைவரும், உண்மைக்கு எதிர்சாட்சிகளாக வாழ்பவர்கள்.

உண்மைக்காக வாழ்ந்தவர்கள், இன்றும் வாழ்பவர்கள், அலங்கார அரியணைகளில் ஏறமுடியாது. அவர்களில் பலர், சிலுவைகளில் மட்டுமே ஏற்றப்படுவார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே, இறைவனின் அரசில் என்றென்றும் அரியணையில் அமர்வர் என்ற உண்மையே, இந்தத் திருநாள் நமக்குச் சொல்லித்தரும் பாடம். உன்னதமான இந்தப் பாடத்தைப் பயில, சிலுவை என்ற அரியணையை நாம் நம்பிக்கையுடன் அணுகிச்செல்வோம்.

இறுதியாக, ஒருசில எண்ணங்கள், வேண்டுதல்கள்... முதல் எண்ணம் - "அரசன் எவ்வழி, குடிமக்கள் அவ்வழி" என்ற பழமொழியை நாம் அறிவோம். ஆனால், மற்றொரு கோணத்தில் சிந்தித்தால், "குடிமக்கள் எவ்வழி, அரசன் அவ்வழி" என்றும் சொல்லத் தோன்றுகிறது. அதாவது, குடிமக்கள் அடிமைகளாக வாழத் தீர்மானித்துவிட்டால், அரசர்கள் கட்டுப்பாடற்ற அதிகாரத்துடன் ஆள்வர் என்பதும் உண்மை.

கிறிஸ்துவை அனைத்துலக அரசர் என்று கொண்டாடும் இந்த விழாவன்று, அடிமைகளாக வாழ்வதில் சுகம் கண்டு, தலைவர்களையும், தலைவிகளையும் துதிபாடி வாழும் மக்கள், தங்கள் தவறுகளிலிருந்து விழித்தெழவேண்டும் என்றும், உண்மையானத் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தலைமைப்பொறுப்புகளை வழங்கி, அவர்களுடன் இணைந்து, நீதி நிறைந்த உலகை உருவாக்க முன்வரவேண்டும் என்றும், அனைத்துலக அரசரான கிறிஸ்துவிடம் வேண்டுவோம்.

இரண்டாவது எண்ணம், கிறிஸ்து அரசர் விழா உருவான வரலாற்றுப் பின்னணி... கத்தோலிக்கத் திருஅவையில், கிறிஸ்துவை அனைத்துலக அரசர் என்று கொண்டாடும் இவ்விழா உருவாக, முதல் உலகப்போர் ஒரு காரணமாக அமைந்தது. இந்த வரலாற்றுப் பின்னணி, இவ்விழாவைக் குறித்தும், உண்மையானத் தலைவர்களுக்குத் தேவையான பண்புகளைக் குறித்தும் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது.

முதல் உலகப்போர் நிகழ்ந்த வேளையில், திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை, 15ம் பெனடிக்ட் அவர்கள், அந்தப் போரை, "பயனற்றப் படுகொலை" (useless massacre) என்றும், "கலாச்சாரம் மிக்க ஐரோப்பாவின் தற்கொலை" (the suicide of civilized Europe) என்றும் குறிப்பிட்டார்.

முதல் உலகப்போர் முடிவுற்று, நான்கு ஆண்டுகள் சென்று, 1922ம் ஆண்டு, திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், அரசர்கள், மற்றும், அரசுத்தலைவர்களின் அகந்தையும், பேராசையும் முதல் உலகப்போருக்கு முக்கியக் காரணங்களாய் இருந்தன என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அந்த அரசர்களுக்கும், அரசுத்தலைவர்களுக்கும் மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அனைத்துலக அரசரென அவர் அறிவித்தார். கிறிஸ்துவின் அரசத்தன்மையையும், அவர் நிறுவவந்த அரசின் விழுமியங்களையும் கண்டு, இன்றையத் தலைவர்கள், ஒருசிலப் பாடங்களையாகிலும் கற்றுக்கொள்ள வேண்டுமென செபிப்போம்.

மூன்றாவது எண்ணம்... யோவான் நற்செய்தியில், இயேசுவக்கு, ‘அரசர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு சில நிகழ்வுகள், நமக்குப் பாடங்களாக அமைகின்றன. 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்த புதுமையின் இறுதியில், அந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், தன்னை 'அரசராக்கப் போகிறார்கள்' என்பதை உணர்ந்த இயேசு, அவ்விடத்திலிருந்து தப்பித்துச்சென்றார் (காண்க. யோவான் 6:15) என்று யோவான் கூறுகிறார்.

புதுமை ஆற்றக்கூடிய தன் சக்தியை தவறாகப் புரிந்துகொண்டு, மக்கள், தன்னை அரசராக்க முயன்றவேளையில், அங்கிருந்து தப்பித்துச்சென்ற இயேசு, தன் சக்தியை எல்லாம் இழந்து, குற்றவாளியென கட்டப்பட்டிருந்த வேளையில், தன்னை ஏளனம் செய்வதற்காக, 'அரசர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொண்டார் என்பதை யோவான் நற்செய்தியில் காண்கிறோம்.

இயேசுவைச் சந்தித்த பிலாத்து, அவரிடம் விளங்கிய அரசத்தன்மையை உள்ளூர உணர்ந்தாலும், தன் பதவிமீது கொண்ட வெறியால், அவரைச் சாட்டையால் அடிக்கச் செய்தார். (காண்க யோவான் 19:1) இயேசுவை, சாட்டையால் அடித்து, முள்முடியைச் சூட்டிய  வீரர்கள், 'யூதரின் அரசே வாழ்க' (யோவான் 19:3) என்று ஏளனம் செய்தனர். அடிபட்டு, உருவிழந்து நின்ற இயேசுவை, 'இதோ உங்கள் அரசன்!' (யோவான் 19:14) என்று, பிலாத்து, மக்கள்முன் அறிமுகம் செய்துவைத்தார். இயேசு அறையப்பட்ட சிலுவையின் மீது, பிலாத்து எழுதிவைத்த குற்ற அறிக்கையில், 'நாசரேத்து இயேசு, யூதர்களின் அரசன்' (யோவான் 19:19) என்று எழுதப்பட்டிருந்தது.

புகழின் உச்சியில் அரசராக்கப்படுவதை விரும்பாத இயேசு, தன் பாடுகளின்போது அரசராக கருதப்பட்டதை, விரும்பி ஏற்றுக்கொண்டார். இயேசு, தன் பாடுகளின்போது, அரசர் என்ற பட்டத்தை, மீண்டும், மீண்டும் பெறுவது, அவரது உண்மையான அரசத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசரை, நம் உள்ளங்களில் அரியணை ஏற்றவும், அவரது அரசப்பண்புகளை நம் வாழ்வில் வெளிப்படுத்தவும், அனைத்துலக அரசராம் கிறிஸ்து நமக்கு உதவி செய்வாராக.

சிறப்பாக, கிறிஸ்து அரசர் திருநாளன்று, தங்கள் உலக நாளைக் கொண்டாடும் இளையோர், உண்மையான தலைமைத்துவத்தின் பாடங்களை பயின்று, எதிர்காலத்தில் உன்னத தலைவர்களாக, இவ்வுலகை கட்டியெழுப்பவேண்டும் என்று மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2021, 14:09