வறியோருக்காக, வறியோர் உலக நாள் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம், நவம்பர் 2020 வறியோருக்காக, வறியோர் உலக நாள் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம், நவம்பர் 2020 

உலக வறியோர் நாள் – தயாரித்துவரும் தலத்திருஅவைகள்

வருகிற ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக வறியோர் நாளையொட்டி, உலகின் பல்வேறு நாடுகளின் திருஅவைகளில், தீவிர முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 14, வருகிற ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக வறியோர் நாளையொட்டி, உலகின் பல்வேறு நாடுகளின் திருஅவைகளில், தீவிர முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

ஜெர்மன் நாட்டில் இடம்பெற்றுவரும் முன்னேற்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட அந்நாட்டு  ஆயர் பேரவையின் பிறரன்பு பணிகளுக்கான தலைவர், பேராயர் Stephan Burger அவர்கள், எழைகளை பராமரிக்கும் பணி, அரசு, பாராளுமன்றம், மற்றும் பிறரன்பு அமைப்புக்களை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக, அனைத்து மக்களின் பொறுப்புணர்வாகும் என உரைத்தார்.

துணையின்றி ஒற்றை பெற்றோராக குழந்தைகளை வளர்ந்து வந்தோர், தனியாக சுயதொழில் செய்வோர், மாற்றுத்திறனாளிகள், தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு பெறாதோர், ஆகியோர், ஏற்கனவே துயர்களை அடைந்துள்ள நிலையில், அண்மைய கோவிட் பெருந்தொற்று மேலும் துயர்களைக் கொணர்ந்துள்ளது என்று கூறிய பேராயர் Burger அவர்கள், அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கி, சமுதாயத்தில் சரிநிகர் நிலைகளை உருவாக்க வேண்டியதை, உலக வறியோர் நாள் எதிர்பார்க்கின்றது என எடுத்துரைத்தார்.

'ஏழைகள் என்றும் உங்களோடு உள்ளனர்' என்ற இவ்வாண்டின் உலக வறியோர் நாள் தலைப்புபற்றி குறிப்பிட்ட இஸ்பானிய ஆயர்கள், இல்லங்கள், மருத்துவமனைகள், புறநகர் பகுதிகள், நகரின் வறுமைப் பகுதிகளை நாடிச்சென்று, ஏழை மக்களைச் சந்தித்து உதவுவது, இந்த உலக வறியோர் நாளில் தலத்திருஅவையின் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்றுரைத்தனர்.

ஏழ்மையால் துயர்களை ஏற்கனவே அடைந்துள்ள பிரேசில் நாட்டிலும், நடைமுறைக் கருணையை ஊக்குவிக்கவேண்டும் என, அந்நாட்டு ஆயர்கள், விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

நவமபர் 7ம் தேதி முதல், 14ம் தேதி வரை பிறரன்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும்படியும், ஏழைகளுடன் சிறப்பு ஒருமைப்பாட்டை அறிவிக்கும்படியும், அந்நாட்டு ஆயர்கள் விடுத்திருந்த அழைப்பை ஏற்று, கத்தோலிக்கர்கள், தங்களால் இயன்ற அளவு, பிறரன்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2021, 14:22