இலங்கை நீர்கொழும்புவில் நடைபெற்ற போராட்டம் இலங்கை நீர்கொழும்புவில் நடைபெற்ற போராட்டம் 

இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்த கர்தினால்

நீர், மற்றும் நில வளங்கள் கொண்டதாகவும், பல்லுயிர்களின் சரணாலயமாகவும் விளங்கும் Muthurajawela பகுதி, மின்சக்தி நிலையம் அமைக்கும் இலங்கை அரசின் திட்டத்தால், பெருமளவு பாதிக்கப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் நீர்கொழும்புவில், இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாக விளங்கும் Muthurajawela சதுப்பு நிலத்தில், அந்நாட்டு அரசு, மின்சக்தி நிலையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருவதை எதிர்த்து, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், இலங்கை உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

நீர், மற்றும் நில வளங்கள் கொண்டதாகவும், பல்லுயிர்களின் சரணாலயமாகவும் விளங்கும் Muthurajawela பகுதி, அரசின் இத்திட்டத்தால், பெருமளவு பாதிக்கப்படும் என்றும், அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களுக்கு ஆபத்து உருவாகும் என்றும், கர்தினால் இரஞ்சித் அவர்கள், தன் விண்ணப்பத்தில் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் கர்தினால் இரஞ்சித்
செய்தியாளர்கள் கூட்டத்தில் கர்தினால் இரஞ்சித்

இப்பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் அமிலங்கள் கலந்த கழிவு நீர், ஏற்கனவே, அப்பகுதியில் காணப்படும் மீன் இனங்களை அழித்துவருகின்றன என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் கவலையை வெளியிட்டுள்ளனர்.

Muthurajawela பகுதியில் அரசு திட்டமிட்டு வரும் மின்சக்தி நிலையத்தால் உருவாகக்கூடிய ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன், நவம்பர் 7, இஞ்ஞாயிறன்று, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும், பல்வேறு விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இதையடுத்து, நவம்பர் 9, இச்செவ்வாயன்று, நீர்கொழும்புவில், நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்கள், அருள் சகோதரிகள் மற்றும் மீனவத்தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து அரசின் இத்திட்டத்தை எதிர்த்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர் என்று UCA செய்தி கூறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நீர்கொழும்புவின் புனித செபஸ்தியார் திருத்தலத்தில் நிகழ்ந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலின் முழு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் முன்வைத்தனர். (AsiaNews/ UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2021, 13:36