வீடற்ற வறியோருக்கு உணவு வழங்கும் குடும்பத்தினர் வீடற்ற வறியோருக்கு உணவு வழங்கும் குடும்பத்தினர் 

மகிழ்வின் மந்திரம் : திருஅவையின் தாய்மைக்கு அடையாளம்

வறியோர் மற்றும் ஒதுக்கப்பட்டோரை, ஒரு குடும்பம் வரவேற்கும்போது, அது, திருஅவையின் தாய்மைக்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருமண உறவையும், குடும்ப வாழ்வையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் இறுதிப்பிரிவில், திருமணம், மற்றும் குடும்ப வாழ்வில் வெளிப்படும் ஆன்மீகத்தைப்பற்றி, தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார். இப்பிரிவின் இறுதி ஐந்து பத்திகளில் (321-325), குடும்ப ஆன்மீகம், பரிவு காட்டுவதாக, ஆறுதல் தருவதாக, உற்சாகமூட்டுவதாக அமையவேண்டும் என்பதைக் கூறியுள்ளார். இறுதி ஐந்து பத்திகளில், 324ம் பத்தியில் திருத்தந்தை பகிர்ந்துள்ள எண்ணங்களின் தொகுப்பு இதோ:

  • "தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் குடும்பத்தினர், தங்களுக்குள் உருவாக்கப்படும் வாழ்வை வரவேற்பதில் மட்டும் திறந்தமனம் கொண்டிராமல், தங்களைச்சுற்றி வாழ்வோருக்கு அந்த வாழ்வைப் பகிர்ந்து, அவர்களது மகிழ்வை வளர்ப்பதற்கும் உதவுகின்றனர். இவர்கள் கொண்டிருக்கும் திறந்தமனம், விருந்தோம்பலில் வெளிப்படுகிறது. அதையே, இறைவார்த்தை ஊக்குவிக்கிறது: ‘அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு’ (எபிரேயர் 13:2).
  • மற்றவர்களை, குறிப்பாக, வறியோர் மற்றும் ஒதுக்கப்பட்டோரை, ஒரு குடும்பம் வரவேற்கும்போது, அது, திருஅவையின் தாய்மைக்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. மூவொரு இறைவனின் பிரதிபலிப்பாக விளங்கும் சமுதாய அன்பு, குடும்பத்தின் ஆன்மீகம் மற்றும் மறைப்பணியை ஒன்றிணைக்கிறது. தலத்திருஅவையாகவும், உலகை மாற்றும் உயிரணுவாகவும் விளங்குவதன் வழியே, குடும்பம், தன் ஆன்மீகத்தை வாழ்வாக்குகிறது." (அன்பின் மகிழ்வு 324)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2021, 14:01