செபமாலை அன்னை மரியா செபமாலை அன்னை மரியா 

புனித பூமியில் அமைதி நிலவ ஒன்றிணைந்த செபமாலை

தீவிரவாதக் குழுக்கள், வேலைவாய்ப்பின்மைகள், பொருளாதார மற்றும் அரசியல் நிலையற்றதன்மை, போர்களும் மோதல்களும் என பல்வேறு துயர்நிலைகளைக் கண்டுவரும் மத்தியக் கிழக்குப் பகுதி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித குலத்திற்காகவும், மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி நிலவவும் வேண்டி, பல மரியன்னை திருத்தலங்கள் இணைந்து, இத்திங்கள்கிழமையன்று செபமாலை செபித்தன.

பாலஸ்தீன அன்னை மரியாவின் திருவிழாவான அக்டோபர் 25ம் தேதி, திங்கள்கிழமையன்று, சிரியா, எகிப்து, ஈராக், லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இடங்களில் உள்ள மரியன்னை திருத்தலங்களுடன் இணையம்வழி தொடர்பை ஏற்படுத்தி, செபமாலையை இணைந்து செபிக்க ஏற்பாடு செய்திருந்தது, மெக்சிகோவின் குவாதலூப்பே மரியன்னை பெருங்கோவில்.

பல்வேறு உலகக் கத்தோலிக்க நிறுவனங்கள் இணைந்து மெக்சிகோ குவாதலூப்பே மரியன்னை பெருங்கோவிலை மையமாகக் கொண்டு பல்வேறு மரியன்னை திருத்தலங்களுடன் இணைந்து செபித்த இந்த செபமாலை பக்தி முயற்சியில், அனைத்துக் கிறிஸ்தவர்களும், மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு வன்முறைகளை அனுபவித்துவரும் கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறு விண்ணப்பம் விடப்பட்டிருந்தது.

தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்கள், வேலைவாய்ப்பின்மைகள், பொருளாதார மற்றும் அரசியல் நிலையற்றதன்மை, தொடர்ந்து கொண்டிருக்கும் போர்களும் மோதல்களும் என பல்வேறு துயர்நிலைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் மத்தியக் கிழக்குப் பகுதிக்காக பாலஸ்தீனாவின் அன்னைமரியாவின் பரிந்துரையை வேண்டுவோம் என்ற நோக்கத்தில் இந்த ஒன்றிணைந்த செபமாலை பக்தி முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரேபியம், இஸ்பானியம் மற்றும் அரமாயிக் மொழிகளில் செபிக்கப்பட்ட இந்த செபமாலையின் இறுதியில், புனித யோசேப்பின் பரிந்துரையை வேண்டும் செபம் ஒன்றும் அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2021, 14:39