திருத்தந்தை மூன்றாம் விக்டர் திருத்தந்தை மூன்றாம் விக்டர்  

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை மூன்றாம் விக்டர்.

திருத்தந்தையாக பொறுப்பேற்க ஓராண்டாக மறுத்து வந்ததால், வலுக்கட்டாயமாக பொறுப்பில் அமர்த்தப்பட்ட துறவி தெசிதேரியஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

1085ம் ஆண்டு திருத்தந்தை 7ம் கிரகரி காலமானபோது, அடுத்து யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி பலமாக எழவில்லை. ஏனெனில் ஏற்கனவே அனைவரும் ஒருவரை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். அவர்தான் இத்தாலியின் Monte Casino துறவுமட அதிபர். ஆனால் அத்துறவிக்கோ இதில் எள்ளளவும் ஆர்வமில்லை. பயந்து ஓடத் துவங்கிய அத்துறவிதான், மூன்றாம் விக்டர் என்ற திருத்தந்தை.

   Benevento பிரபுக் குடும்பத்தில் 1026, அல்லது 1027ல் பிறந்த திருத்தந்தை மூன்றாம் விக்டர், இளம் வயதிலேயே துறவுவாழ்வு மீது மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். பெற்றோருக்கு ஒரே மகனாக இருந்த இவர், துறவியாகச் செல்ல விரும்பியபோது, பலத்த எதிர்ப்பு இருந்தது. இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், 1047ல் நார்மானியர்களுடன் நடந்த சண்டையில் இவரின் தந்தை இறந்ததைத் தொடர்ந்து, துறவுமட வாழ்வுக்கெனச் சென்றார். செல்வாக்கு மிகுந்த இவரின் குடும்பத்தினர் இவரைக் கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து வந்தனர். இரண்டாம் முறையும் இவர் தப்பியோட, வேறுவழியின்றி துறவு வாழ்வை ஏற்க குடும்பத்தினரின் இசைவு கிட்டியது. Boneventoவில் உள்ள Sophia துறவுமடத்தில் இணைந்து தெசிதேரியஸ் (Desiderius) என்ற புதுப்பெயரையும் எடுத்துக்கொண்டார், பின்னாளில் மூன்றாம் விக்டர் என அழைக்கப்பட்ட திருத்தந்தை

    வழக்கமாக துறவுமடத்தில் புகும் இளைஞர்களுக்கு முதலில் துறவுமட வாழ்வு சிரமமாகத்தான் இருக்கும். ஆனால் புதிய துறவி தெசிதேரியஸுக்கோ, துறவுமட வாழ்வு என்பது இன்னும் கடுமையாக இருக்கவேண்டும் என எதிர்பார்த்தார். ஆகவே, வேறு துறவுமடத்திற்கு மாறிச் சென்றார். இவ்வாறு கடுமையான துறவுவாழ்வை நாடிச் சென்றுகொண்டிருந்தபோது, Monte Casinoவின் இரு துறவியரை வழியில் சந்தித்த துறவி தெசிதேரியஸ், 1055ம் ஆண்டு அவர்களுடன் Monte Casino துறவுமடத்தில் அடைக்கலம் புகுந்தார். இங்கு அவர் துறவுமட விதிகளை திருத்தி அமைத்தார். கோவில்களைக் கட்டியதுடன், பல கல்வி நிலையங்களையும் நிறுவினார். இவர் அங்கு துறவுமட அதிபராக இருந்த போது 200 துறவிகள் இருந்தனர்.

துறவி தெசிதேரியஸின் புகழ் எங்கும் பரவியதால், திருத்தந்தை இரண்டாம் அலெக்சாண்டர் அவர்கள், இவரை Campania, Apulia, Calabria, Benevento ஆகிய இடங்களுக்கு தன் பிரதிநிதியாக நியமித்து, துறவுமடங்களை சீரமைக்கும் முழு அதிகாரத்தையும் வழங்கினார். துறவுமடங்களின் அதிபர்களோ, ஆயர்களோ இப்பகுதிகளில் இறக்கும்போது, புதியவர்களை நியமிக்கும் பொறுப்பை தெசிதேரியஸுக்கு வழங்கினார் திருத்தந்தை. திருத்தந்தை ஏழாம் கிரகரி பாதுகாப்புப் பிரச்சனைகளை சந்தித்தபோது நார்மானிய இளவரசர்களோடு பேசி, திருத்தந்தையுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த வழிவகுத்தவரும் இவரே. ஆனால் 1085ம் ஆண்டு மே மாதம் 25ந்தேதி திருத்தந்தை ஏழாம் கிரகரி இறந்தபோதுதான் உண்மையான சிக்கல் துவங்கியது.

   திருத்தந்தை ஏழாம் கிரகரி மரணப்படுக்கையில் இருக்கும்போதே, தனக்குப் பின் துறவி தெசிதேரியஸ்தான் அடுத்த திருத்தந்தையாக இருக்கத் தகுதிபெற்றவர் என அறிவித்துவிட்டார். இவரும் உரோம் நகர் வந்தார். திருத்தந்தையின் மரணத்திற்குப்பின் அங்கு குழுமியிருந்த கர்தினால்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட துறவி தெசிதேரியஸ்,  திருத்தந்தையாக பொறுப்பேற்க மறுத்ததுடன், சொல்லாமல் கொள்ளாமல் Monte Casinoவுக்குத் திரும்பிவிட்டார். ஆனால் கர்தினால்கள் விடுவதாக இல்லை. இதற்கிடையில், உரோம் நகரில் அமைதியை நிலைநாட்ட விரும்பிய துறவி தெசிதேரியஸ், நார்மானியர்களுடனும் லொம்பார்தியர்களுடனும் கலந்து பேசி, அப்படைகளோடு உரோம் நோக்கி பயணமானார். ஆனால் அவர் மட்டும் உரோம் நகருக்குள் நுழையவில்லை. தான் உரோமுக்குள் நுழைந்தால், தன்னை திருத்தந்தை நாற்காலியில் உட்கார வைத்துவிடுவார்கள் என்ற பயமே அதற்கு காரணம்.

   நீங்கள் என்னை திருத்தந்தையாக தேர்ந்தெடுக்க மாட்டோம் என உறுதி வழங்கினால் ஒழிய நான் உரோம் நகருக்குள் நுழைய மாட்டேன் என செய்தி அனுப்பினார் அத்துறவி. கர்தினால்கள் அந்நிபந்தனைக்கு இசைவு அளிக்கவில்லை. அவர்கள் உடனே, துறவி தெசிதேரியஸும் அவருடன் இருக்கும் கர்தினால்களும் உரோம் அவைமுன் வரவேண்டும் என ஆணைப் பிறப்பித்ததால் அவரும் வரவேண்டியதாகியது. அவர் மீது திருத்தந்தைப் பொறுப்பைத் திணித்தனர். ஆனால், அவரோ ஏற்றுக்கொள்ள மறுத்து, தான் Monte Casinoவுக்கு திரும்பிப் போவதாக அச்சுறுத்தினார். அடுத்த நாளும் அவை கூடியது. பெந்தகோஸ்தே திருநாளான அன்று மீண்டும் துறவி தெசிதேரியஸ் மறுக்க, கர்தினால்கள் பொறுமையிழந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விக்டர் என்ற பெயரைச் சூட்டி, திருத்தந்தைக்குரிய ஆடைகளை அணிவித்தனர். ஏனெனில், ஓராண்டாக திருத்தந்தை இன்றி இருந்துள்ளது திருஅவை.

   இவரை வலுக்கட்டாயமாக திருத்தந்தையாக நியமித்த 4 நாட்களிலேயே இவரும் கர்தினால்களும் உரோம் நகரைவிட்டு தப்பியோட வேண்டியதாகியது. பேரரசரின் பிரதிநிதி உரோம் நகர்மீது தாக்குதல் நடத்தியதே இதற்கு காரணம். உரோம் நகருக்கு சிறிது வெளியேயுள்ள Terracina என்ற பகுதிக்குச் சென்ற, திருத்தந்தையாக நியமிக்கப்பட்ட மூன்றாம் விக்டர், அதாவது,   துறவி தெசிதேரியஸ், தன் பாப்பிறை அடையாளங்களைக் கழற்றிவைத்துவிட்டு, மீண்டும் துறவியாக Monte Casino சென்று விட்டார். அங்கேயே ஓராண்டு காலம் துறவியாகவே இருந்தார். மீண்டும் 1087ல் கூடிய கர்தினால்களும் பல்வேறு இளவரசர்களும், இவரை மீண்டும் கட்டாயப்படுத்தி, திருத்தந்தையாக அமர்த்தினர். அதாவது, முந்தைய திருத்தந்தை 7ம் கிறகரி இறந்து ஏறத்தாழ 2 ஆண்டுகள் இந்த போராட்டம் நடந்துள்ளது. 1087ம் ஆண்டு மே மாதம் 9ந்தேதி புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தையாக பொறுப்பேற்றார் துறவி தெசிதேரியஸ்.

   இத்திருத்தந்தையின் வாழ்வு அதன்பின் அதிக காலம் நீடிக்கவில்லை. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 16ந்தேதி காலமானார். துறவியாக இருந்தபோது அரும்பெரும் செயல்கள் ஆற்றிய தெசிதேரியஸ் அவர்கள், மூன்றாம் விக்டர் என்ற பெயரில், தன் விருப்பத்திற்கு மாறாக திருத்தந்தையாக பொறுப்பேற்றபோது அவரால் பெரிதாக எதுவும் ஆற்றமுடியவில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் துறவு வாழ்வுக்கும் திருஅவைக்கும் உண்மையுள்ளவராக இருந்த இத்திருத்தந்தை, தனக்கென அவரே கட்டியிருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

திருஅவையில் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள திருத்தந்தை மூன்றாம் விக்டரின் விழா செப்டம்பர் 16ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2021, 18:22