குழந்தை வளர்ப்பிற்காக இணைந்திருக்கும் தம்பதியர் குழந்தை வளர்ப்பிற்காக இணைந்திருக்கும் தம்பதியர் 

மகிழ்வின் மந்திரம் : தீர்ப்பிடாமல், வழிகாட்டுவது முக்கியம்

புதிய உறவின் வழியே பிறந்த குழந்தைகளை நிராகரித்துவிடாமல், அவர்களின் வளர்ப்பு என்ற முக்கிய காரணத்திற்காக இணைந்து வாழ்வோரின் நிலையை திருஅவை நன்கு புரிந்துகொள்கிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

மனிதர்களாகிய நாம் வகுத்திருக்கும் சட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஒவ்வொன்றுக்கும் விதிவிலக்குகள் இருப்பதுபோல், திருமணம் என்ற மரபுவழி ஒழுங்குமுறைகளுக்கு விதிவிலக்கான உறவுகளில் வாழ்வோர் உள்ளனர். இவர்கள் மீது கனிவும், அக்கறையும் காட்டப்படவேண்டும் என்பதை, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

திருமணத்தைக் குறித்து திருஅவை வகுத்துள்ள சட்டங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை பின்பற்றாமல், உறவில் ஈடுபட்டிருப்போரை, ஒரே அளவுகோல் கொண்டு தீர்ப்பிடாமல், ஒவ்வொரு உறவையும் புரிந்து, தெளிந்து தேர்வு செய்வதும், அதற்கேற்றவண்ணம் வழிகாட்டுவதும் முக்கியம் என்பதை, 296 முதல் 300 முடிய உள்ள ஐந்து பத்திகளில் திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இந்த ஐந்து பத்திகளில், 298வது பத்தியில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களின் தொகுப்பு இதோ:

  • "மணமுறிவு பெற்று புதியதோர் உறவில் வாழ்வோர் அனைவரையும், கடினமான முறையில் வரையறுக்கப்பட்ட பிரிவுகளுக்குள் புகுத்திவிடாமல், அவர்கள் ஒவ்வொருவரின் நிலையையும், தனித்தனியே தெளிந்து தெரிவு செய்வது அவசியம். அவர்களில் பலர், புதிய உறவில் நீண்டகாலம் நிலைத்திருந்து, அதன் பயனாகப் பிறந்த குழந்தைகளை, சீராகப் பராமரித்து, தங்கள் உறவில் பிரமாணிக்கத்துடனும், கிறிஸ்தவ அர்ப்பணத்துடனும் வாழ்வது, திருஅவையால் கவனிக்கப்படவேண்டிய ஒரு நிலை.
  • புதிய உறவின் வழியே பிறந்த குழந்தைகளை நிராகரித்துவிடாமல், அவர்களின் வளர்ப்பு என்ற முக்கிய காரணத்திற்காக இணைந்து வாழ்வோரின் நிலையை திருஅவை நன்கு புரிந்துகொள்கிறது.
  • முதல் திருமணத்தில் அநீதியான முறையில் கைவிடப்படுதல், அந்த முதல் திருமணம், துவக்கத்திலிருந்தே, மனசாட்சியின்படி முறையற்றதாக அமைதல், ஆகிய நிலைகளையும் திருஅவை புரிந்துகொள்கிறது.

தம்பதியர் இவ்வாறு வாழும் நிலைகள், திருமணம், குடும்பம் ஆகியவற்றைக் குறித்து நற்செய்தி பரிந்துரைக்கும் உன்னத நிலைகள் அல்ல. இருப்பினும், மேய்ப்புப்பணி ஆற்றுவோர், ஒவ்வொரு சூழலையும் நன்கு தெளிந்து தெரிவு செய்யவேண்டும் என்று மாமன்றத் தந்தையர் கூறியுள்ளனர். இந்த வழிமுறையைப் பின்பற்றி பணியாற்றுவது எளிதல்ல." (அன்பின் மகிழ்வு 298)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2021, 14:09