ஆலோசனை பெறுதல் ஆலோசனை பெறுதல்  

மகிழ்வின் மந்திரம் : பிறரன்பின் பாதையில் செல்ல அழைப்பு

திருநற்கருணை என்பது, குறைபாடற்றவர்களுக்குரிய வெகுமதியல்ல, மாறாக, பலவீனமானவர்களுக்குரிய சக்திவாய்ந்த மருந்து, மற்றும் ஊட்டச்சத்து.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “சட்டங்களும், தெளிந்துதேர்தலும்” என்ற குறுந்தலைப்பின்கீழ் மூன்று பத்திகளில் (304-306), கூறியுள்ள கருத்துக்களில், 306ம் பத்தியின் தொகுப்பு இதோ:

இறைவனின் சட்டத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பதில் உருவாகும் சிரமங்களை மக்கள் எதிர்நோக்கும் சுழல்களில், பிறரன்பின் பாதைகளில் செல்வதற்கான அழைப்புக்கு அருள்பணியாளர்கள் செவிமடுக்க வேண்டும். உடன்பிறந்த நிலையின் பிறரன்பு என்பது, கிறிஸ்தவர்களின் முதல் கட்டளை (காண்க. யோவான் 15:12; கலா. 5:14).

“எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள். ஏனெனில், அன்பு திரளான பாவங்களையும் போக்கும்” (1 பேதுரு 4:8); “நல்லறத்தைப் பேணி, தீச்செயல்களை நீக்குக! ஒடுக்கப்பட்டோர்க்கு இரக்கம் காட்டி, உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்க! ஒருவேளை உமது வளமை நீடிப்பதற்கு இது வழியாகலாம்” (தானி 4: 27); "எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும்; தருமம் செய்தல் பாவங்களைக் கழுவிப் போக்கும்" (சீரா 3:30), என்று, விவிலியம் தரும், உறுதியளிக்கும் வார்த்தைகளை நாம் மறந்துவிடக்கூடாது.

அதையே புனித அகுஸ்தீனாரும், "அச்சுறுத்தல் தரும் பெரும்நெருப்பின்போது, அதை அணைக்க நாம் தண்ணீரை நோக்கி ஓடுவதுபோல், நம் சருகுகளிலிருந்து பாவம் எனும் நெருப்பு கிளம்பும்போது, அதை அணைக்க, கருணையின் செயலை ஆற்றுவதற்குரிய வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டால், அது, நெருப்பை அணைக்க நமக்கு வழங்கப்படும் ஒரு நீரூற்று என்றறிந்து, அது குறித்து மகிழ்வோம்", என்று உரைக்கிறார். (அன்பின் மகிழ்வு 306)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2021, 15:31