பல்வேறுவகை ஆயுதங்கள் பல்வேறுவகை ஆயுதங்கள் 

ஆயுதவியாபாரங்கள் உலகில் நிறுத்தப்பட ஆயர்கள் அழைப்பு

இரத்தத்தினால் நனைந்துள்ள ஆயுதவியாபாரம் குறித்து உலகம் மௌனம் காக்கும் வேளையில், இதற்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டியது, கத்தோலிக்கத் திருஅவையின் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மோதல்களையும், துயர்களையும், கட்டாயக் குடிபெயர்தலையும் உருவாக்கும் ஆயுத வியாபாரங்கள் உலகில் நிறுத்தப்பட வேண்டும் என பிரிட்டனின் கத்தோலிக்க ஆயர்களும், நீதி மற்றும் அமைதி அமைப்புக்களும், மனிதாபிமான நிறுவனங்களும் அழைப்புவிடுத்துள்ளன.

உலகின் மிகப்பெரிய ஆயுத வியாபார கண்காட்சிகளுள் ஒன்று, இலண்டனில் துவக்கப்பட உள்ள இவ்வேளையில், இங்கிலாந்து, வேல்ஸ், மற்றும் ஸ்காட்லாந்து ஆயர்களும், நீதி மற்றும் அமைதிக்காக உழைக்கும் மத அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிர்களைக் கொல்லும் ஆயுதங்களின்  விற்பனையைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்பைச் சுட்டிக்காட்டி, ஆயுத வியாபாரங்கள் நிறுத்தப்பட விண்ணப்பித்துள்ளனர்.

ஆயுத வியாபாரங்களால் பலம்பெறும் மோதல்கள், உலகின் ஏழை சமுதாயங்களுக்கு ஊறுவிளைவிப்பதுடன், அப்பாவி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்தோராக குடிபெயரவும், சுற்றுச்சூழல் அழிவுக்கும் காரணமாகின்றன என திருத்தந்தை ஏற்கனவே ஆயுத வியாபாரங்களுக்கு எதிராக விடுத்திருந்த விண்ணப்பத்தை தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், மிகப்பெரும் துயர்களை மக்களுக்கு வழங்கிவரும் ஆயுத வியாபாரத்தை உலகம் தொடர்ந்துகொண்டிருப்பதற்கு பணத்தின் மீதான ஆசையே காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இரத்தத்தினால் நனைந்துள்ள ஆயுதவியாபாரம் குறித்து உலகம் மௌனம் காக்கும் வேளையில், இதற்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டியது, கத்தோலிக்கத் திருஅவையின் கடமை எனவும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர், பிரிட்டன் ஆயர்கள்.

ஒவ்வொரு நாடும் தன்னைத் தற்காத்துக்கொள்ள இருக்கும் உரிமையை அங்கீகரிக்கும் அதேவேளை, மனித வாழ்வை அழிப்பதற்கும், மனித மாண்பை மீறுவதற்கும், ஆயுத வியாபாரம் காரணமாகிவிடக்கூடாது என்பதையே தாங்கள் வலியுறுத்த விரும்புவதாவும், ஆயர்கள், தங்கள் அறிக்கையில் மேலும் கூறியுள்ளனர்.

உலகில், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், மற்றும் ஏனைய ஆயுதங்களை தயாரிக்கும் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இம்மாதம் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல், 17ம் தேதி வரை ஆயுதகண்காட்சி ஒன்றை, இலண்டனில் நடத்த உள்ளன.

அண்மை ஆய்வுகளின்படி, 2020ம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாடு மட்டும், ஆயுத மற்றும் பாதுகாப்புக் கருவிகளுக்கென 77 ஆயிரத்து 800 கோடி டாலர்களைச் செலவிட்டுள்ளது. இத்தொகை, ஆயுதச் செலவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனாவை விட, மும்மடங்காகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2021, 14:00