திருத்தந்தை இரண்டாம் விக்டர் அடக்கம் செய்யப்பட்டுள்ள ரவென்னாவின் சாந்தா மரியா ரொத்தோந்தா திருத்தந்தை இரண்டாம் விக்டர் அடக்கம் செய்யப்பட்டுள்ள ரவென்னாவின் சாந்தா மரியா ரொத்தோந்தா 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை இரண்டாம் விக்டர்

திருஅவைக்குரிய சொத்துக்களை திருப்பி அளித்தாலன்றி, தலைமைப் பொறுப்பை ஏற்க மாட்டேன் என பேரரசருக்கு நிபந்தனை விதித்த திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

1054ம்ஆண்டு ஏப்ரல் 19ந் தேதி திருத்தந்தை ஒன்பதாம் லியோ காலமானபோது, கர்தினால் Hildebrand  அவர்கள், உரோமைய தூதுக்குழுவின் தலைவராக பேரரசரைச் சந்தித்து, யாரை அடுத்தத் திருத்தந்தையாக நியமிக்கலாம் என ஆலோசனை பெறச் சென்றார். அவரும் ஜெர்மன் ஆயர் Gebhard என்பவரை பரிந்துரை செய்தார். இந்த ஆயர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, மிகுந்த பக்தி நிறைந்த நிர்வாகியும் கூட. முதலில் ஆயர் Gebhard இப்பதவியை மறுத்தார். பேரரசர் மேலும் வலியுறுத்தவே, ஆயரும் ஒரு நிபந்தனையை முன்வைத்தார். அதாவது, திருஅவையிலிருந்து பறித்துள்ள நிலப்பகுதிகளை திருஅவைக்கே பேரரசர் திருப்பி அளித்தால், தானும் இப்பதவியை ஏற்பதாக கூறினார். அதற்கு சம்மதித்து பேரரசர் நிலப்பகுதிகளை திருப்பி வழங்க, ஆயரும் திருத்தந்தையாக பதிவியேற்க சம்மதித்தார். 1054ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு 1055ம் ஆண்டு மார்ச் மாதம்தான் இசைவு அளித்துள்ளார் ஆயர் Gebhard.  அதன்பின் உரோம் நகர் வந்து, திருந்தைக்கான தேர்தலில் முறைப்படி கலந்து கொண்டு வெற்றிபெற்ற பின்னரே, அதாவது, மக்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்றபின்னரே 1055ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ந்தேதி, புனித வியாழனன்று இரண்டாம் விக்டர் என்ற பெயரைத் தாங்கி பொறுப்பேற்றார்.

திருஅவையை சீரமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் திருத்தந்தை இரண்டாம் விக்டர். திருத்தந்தை 9ம் லியோவின் சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். அருள்பணியாளர்கள், மற்றும் திருஅவை அதிகாரிகளின் ஒழுக்கக்கேடான வாழ்வையும், பாலின நடவடிக்கைகளையும் வன்மையாகக் கண்டித்து, 1055ம் ஆண்டு ஜுன் மாதம் 4ந்தேதி இத்தாலியின் Florence  நகரில், 120 ஆயர்களுடன் பேரரசரின் முன்னிலையில் ஆயர் மாநாட்டைக் கூட்டினார். உரோமையப் பேரரசராக மூன்றாம் ஹென்றியை அங்கீகரிக்க மறுத்த இஸ்பெயின் மன்னர் ஃபெர்டினாந்தை திருஅவையிலிருந்து விலக்கிவைக்க உள்ளதாக திருத்தந்தை அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, மன்னரும் 3ம் ஹென்றியை பேரரசராக ஏற்றுக்கொண்டார்.

1056ம் ஆண்டு ஒருநாள் திடீரென பேரரசரிடமிருந்து திருத்தந்தைக்கு அழைப்பு வந்தது.   திருத்தந்தையும் அவ்வழைப்பை ஏற்று ஜெர்மனிக்குச் சென்றார். ஆனால் இவர் சென்று சேர்ந்த சில நாட்களிலேயே பேரரசர், அக்டோபர் 5ந்தேதி திடீரென மரணமடைந்தார். மரணமடைவதற்குமுன் தன் பேரரசையும், தன் 6 வயது மகன் நான்காம் ஹென்றியையும் திருத்தந்தையின் கைகளில் ஒப்படைப்பதாகக் கூறிச் சென்றார். பேரரசரை அடக்கம் செய்தபின், அக்டோபர் மாதம் 28ந்தேதி நான்காம் ஹென்றியை முடிசூட்டி வைத்துவிட்டு, பொறுப்புகளை பேரரசரின் தாய் ஆக்னஸ் வசம் ஒப்படைத்து 1057ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உரோம் நகர் திரும்பினார் திருத்தந்தை இரண்டாம் விக்டர்.  

1057ம் ஆண்டு டஸ்கனி(Tuscany) பகுதியின் புனித Donatus அரண்மனை தொடர்புடைய ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்வதற்காக அங்குச் சென்றார் திருத்தந்தை இரண்டாம் விக்டர். ஜுலை 23ந்தேதி, நியாயமான தீர்ப்பு வழங்கிய திருத்தந்தை, 5 நாட்களுக்குப்பின் (ஜூலை 28,  1057) இறைபதம் சேர்ந்தார். அவரின் பணியாளர்கள்  திருத்தந்தையின் உடலை ஜெர்மன் பேராலயத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பினர். ஆனால், அவ்வாறு எடுத்துச் செல்லும் வழியில், இத்தாலியின் ரவென்னா (Ravenna) மறைமாவட்ட  குடிமக்கள் பலர் ஒன்றிணைந்து அதனை வழிமறித்து, தங்களின் சாந்தா மரியா ரொத்தோந்தா (Santa Maria Rotonda) என்ற இடத்தில் அடக்கம் செய்தனர்.

நேயர்களே! திருத்தந்தை இரண்டாம் விக்டருக்குப்பின் திருஅவையின் இவ்வுலக தலைமைப்பதவியை ஏற்றார் திருத்தந்தை  10ம் ஸ்தேவான். அவரின் வாழ்க்கைக் குறிப்புகளுடன்  அடுத்த வாரத்தில் நாம் இப்பயணத்தைத் தொடர்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2021, 14:38