மிசோராம் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மியான்மார் புலம்பெயர்ந்தோர் மிசோராம் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மியான்மார் புலம்பெயர்ந்தோர் 

மியான்மாரின் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் கத்தோலிக்கர்

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மிசோராம் மாநிலத்தில், மியான்மாரின் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் அடைக்கலம் தேடியுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மாரின் பதட்டநிலைகளால் அங்கிருந்து வெளியேறி அடைக்கலம் தேடும் கிறிஸ்தவ புலம்பெயர்ந்தோருக்கு உதவிகளை ஆற்றிவருகிறது, இந்தியாவின் மிசோராம் மாநில காரித்தாஸ் அமைப்பு.

கடந்த 6 மாதங்களில் மட்டும் மியான்மாரில் இருந்து வெளியேறியுள்ள பல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மிசோராம் மாநிலத்தில் அடைக்கலம் தேடியுள்ளனர்.

மியான்மாரிலிருந்து ஏறக்குறைய 15,000 புலம்பெயர்ந்தோர் இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் வாழ்வதாக உரைத்த Aizawl மறைமாவட்ட ஆயர் Stephen Rotluanga அவர்கள், கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, CRS கத்தோலிக்க அமைப்பு, மிசோராமின் இளையோர் அமைப்புக்கள், அரசு சாரா அமைப்புக்கள் ஆகியவைகளோடு இணைந்து கத்தோலிக்க மறைமாவட்டம் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் ஆற்றிவருவதாகத் தெரிவித்தார்.

கடந்த பல ஆண்டுகளாக மியான்மார் நாட்டிலிருந்து மிசோராம் மாநிலத்திற்கு வந்தும் போய்க்கொண்டும் இருக்கும் புலம்பெயர்ந்தோரை விரிந்த கரங்களுடன் வரவேற்று, மிசோராம் கிறிஸ்தவ இளையோர் உதவிவருவதைக் குறித்து பேசிய ஆயர் Rotluanga அவர்கள், கத்தோலிக்க திருஅவை நடத்திவரும் பல புனர்வாழ்வு மையங்கள் வழியாக உதவிகள் ஆற்றப்படுவதாகத் தெரிவித்தார்.

மிசோராம்  மாநிலத்தின் 11 இலட்சம் மொத்த மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களாக இருக்கும் நிலையில், பங்களாதேசுக்கும்  மியான்மாருக்கும் இடையே உள்ள மிசோராம் மாநிலத்தில் மியான்மார் கிறிஸ்தவர்கள் அடைக்கலம் தேடிவருகின்றனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2021, 15:13