எல் சல்வதோர் நாட்டில் 2022 ஜனவரி 22ல் அருளாளர்களாக அறிவிக்கப்பட உள்ள 4 இறையடியார்கள் எல் சல்வதோர் நாட்டில் 2022 ஜனவரி 22ல் அருளாளர்களாக அறிவிக்கப்பட உள்ள 4 இறையடியார்கள்  

எல் சல்வதோர் நாட்டிற்கு 4 புதிய அருளாளர்கள்

எல்சால்வதோர் நாட்டில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்ட 4 இறையாடியர்கள், வரும் சனவரியில் அருளாளர்களாக உயர்த்தப்பட உள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

எல்சால்வதோர் நாட்டில் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட 2 அருள்பணியாளர்கள் மற்றும் 2 பொதுநிலையினரை அருளாளர்களாக அறிவிக்கும் சடங்கு தலைநகர் சான் சால்வதோரில் 2022ம் ஆண்டு சனவரி மாதம் 22ம் தேதி இடம்பெறும் என்று, தலத்திருஅவை அறிவித்துள்ளது.

சான் சால்வதோர் மாநகராட்சியின் கீழுள்ள El Paisnal எனுமிடத்தில் 1928ல் பிறந்த இயேசு சபை அருள்பணியாளர் Rutilio Grande அவர்கள், 1977ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, இரு பொதுநிலை உதவியாளர்களுடன் காரில் சென்ற வேளையில், அம்மூவரும், இராணுவத்தின் மரணப் படையால் கொலைச் செய்யப்பட்டார்.

மாலை திருப்பலி நிறைவேற்ற காரில் சென்றுகொண்டிருந்த வேளையில் இராணுவத்தின் மரணப்படையால் கொல்லப்பட்ட இயேசுசபை அருள்பணி Rutilio Grande, பொதுநிலையினரான, 72 வயது Manuel Solórzano, 15 வயது Nelson Rutilio Lemus Chávez, ஆகியோர், வரும் சனவரியில் அருளாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.

இவர்களுடன் இணைந்து, இத்தாலி நாட்டவரான, பிரான்சிஸ்கன் துறவி, அருள்பணி Cosma Spessotto அவர்களும் அருளாளராக அறிவிக்கப்பட உள்ளார். 1923ம் ஆண்டு இத்தாலியில் பிறந்து, 1950ம் ஆண்டு எல்சால்வதோரில் பணியாற்றத் துவங்கிய  அருள்பணி Cosma Spessotto அவர்கள், 1980ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, San Juan Nonualco எனுமிடத்தில், திருப்பலிக்கு முன், பீடத்திற்கு முன்பாக செபித்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மனிதர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இரு அருள்பணியாளர்கள், இரு பொதுநிலையினர் என இந்த நான்கு இறையடியார்களின் அருளாளர் அறிவிப்பு திருப்பலி, சான் சால்வதோர் பேராலயத்தில் இடம்பெறும் என அறிவித்த சான் சால்வதோர் பேராயர் José Luis Escobar Alas அவர்கள், இந்த சடங்கிற்கு தலைமைத் தாங்க எல் சால்வதோர் கர்தினால் Gregorio Rosa Chávez அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த அருளாளர் அறிவிப்புத் திருப்பலி, மிகப் பெரிய அளவில் பொதுமக்கள் பங்கேற்புடன் இடம்பெற முடியாது எனினும், கட்டுப்பாடுகளை மதித்து மிகக் குறைந்த அளவு பங்கேற்புடன் இடம்பெறும் எனவும் அறிவித்தார் பேராயர் Escobar Alas.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2021, 14:19