உலகில் முதல் அணுகுண்டு போடப்பட்டதன் நினைவு நாள் உலகில் முதல் அணுகுண்டு போடப்பட்டதன் நினைவு நாள் 

உலகில் முதல் அணுகுண்டு போடப்பட்டதன் நினைவு நாள்

அணு ஆயுதங்களற்ற உலகை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உலக அரசுகள், தங்களின் கூடுதலான ஆதரவை வழங்குமாறு ஐ.நா. அழைப்புவிடுத்துள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகில் முதல் அணுகுண்டு வீசப்பட்டதன் 76ம் ஆண்டு நிறைவு, ஆகஸ்ட் 06, இவ்வெள்ளி காலையில், ஜப்பானின் ஹிரோஷிமாவில் கடைப்பிடிக்கப்பட்டவேளை, அணு ஆயுதங்களற்ற உலகம் அமைக்கப்படுவதற்கு அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடு, தாங்களும் இணைவதாக, பிரித்தானிய ஆயர்கள் கூறியுள்ளனர்.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6 மற்றும் 9, ஆகிய இரு நாள்களில், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டு வீசிய கொடுமையின் 76வது ஆண்டு நினைவைக் குறிப்பிட்டு, பிரித்தானிய ஆயர் பேரவையின் பன்னாட்டு விவகாரப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Declan Lang அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் தற்போது உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை, இன்னும் 40 விழுக்காடாக அதிகரிக்கும் திட்டத்திற்கும், ஆயர்கள் சார்பாக, தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஆயர் Lang அவர்கள், ஆயுத சேமிப்பை அதிகரிப்பதன் வழியாக எவ்வழியிலும் பாதுகாப்பிற்கு உறுதி வழங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.    

அணு ஆயுதங்கள் உலகினின்று முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு பிரித்தானிய அரசு முழுவீச்சுடன் உழைக்குமாறும், ஆயர் Lang அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அந்தோனியோ கூட்டேரஸ்

மேலும், ஆகஸ்ட் 06, இவ்வெள்ளியன்று, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதன் 76ம் ஆண்டு நிறைவு கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வுக்கு, காணொளிப் பதிவு ஒன்றை அனுப்பியுள்ள ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், அணுகுண்டுகள் ஏற்படுத்தியிருக்கும் கடும் சேதங்களை நினைவுபடுத்தியுள்ளார்.

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நடைபெறவிருக்கும், அணுஆயுதப் பரவலைத் தடைசெய்வது குறித்த ஐ.நா. மாநாடுபற்றிக் குறிப்பிட்டு, அணு ஆயுதங்களற்ற  உலகை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு, உலக அரசுகள் தங்களின் கூடுதலான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். (UN)

இரண்டாம் உலகப்போரின்போது 1945ம் ஆண்டில் ஜப்பானில் வீசப்பட்ட இரு அணு குண்டுகளால், 1,40,000 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2021, 15:07