புனித மாக்சிமில்லியன் கோல்பே ஜப்பானில் பணியாற்றியதை சித்திரிக்கும் ஓவியம் புனித மாக்சிமில்லியன் கோல்பே ஜப்பானில் பணியாற்றியதை சித்திரிக்கும் ஓவியம் 

ஜப்பான், நாகசாகியின் புனிதரான மாக்சிமில்லியன் கோல்பே

Auschwitzன் புனிதரான கோல்பே அவர்கள், ஆறு ஆண்டுகள், ஜப்பானின் நாகசாகி நகரில் துறவு மடம் ஒன்றை நிறுவி பணியாற்றியதால், அவர், நாகசாகியின் புனிதர் என்றும் அறியப்படுகிறார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித மாக்சிமில்லியன் கோல்பே (Maximilian Kolbe) அவர்களின் வாழ்வில் அதிகம் அறியப்படாத பகுதியாகத் திகழும் அவரது ஜப்பான் வாழ்வைக் குறித்த இணையவழி கருத்தரங்கம், இப்புனிதரின் திருநாளான ஆகஸ்ட் 14ம் தேதிக்கு முந்தைய நாள், ஆகஸ்ட் 13, இவ்வெள்ளியன்று நடைபெற்றது.

இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மன் அரசின் நாத்சி கொள்கைகளுக்கு எதிராக தன் கருத்துக்களை வெளியிட்டு வந்த புனித கோல்பே அவர்கள், Auschwitz வதைமுகாமில் அடைக்கப்பட்டு, அங்கு, பட்டினிக்கொலைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்தலைவனுக்குப் பதில் தன்னையே வழங்கி, அந்த வதைமுகாமில் கொல்லப்பட்டதால், அவர் Auschwitz வதைமுகாமின் புனிதர் என்று அழைக்கப்படுகிறார்.

Auschwitzன் புனிதரான கோல்பே அவர்கள், 1930ம் ஆண்டு முதல், ஆறு ஆண்டுகள், ஜப்பானின் நாகசாகி நகரில், துறவு மடம் ஒன்றை நிறுவி பணியாற்றியதால், அவர், நாகசாகியின் புனிதர் என்றும் அறியப்படுகிறார்.

இவர் நாகசாகி நகரில் ஒரு மலையடிவாரத்தில் அமைத்த துறவு மடம், நாகசாகி நகர், அணுகுண்டு அழிவில் தரைமட்டமானபோது, இந்த மலையால் பாதுகாக்கப்பட்டு, இன்றளவும் செயலாற்றி வருகிறது.

ஜப்பான் நாட்டில் உடல் நலம் குன்றிய காரணத்தால், 1936ம் ஆண்டு, போலந்து நாட்டுக்கு திரும்பிச் சென்ற அருள்பணி கோல்பே அவர்கள், நாத்சி படையினரால் 1941ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, Auschwitz வதைமுகாமில் அடைக்கப்பட்டார்.

அருள்பணி கோல்பே அவர்கள், நாகசாகி நகரில் பணியாற்றிய வேளையில், அங்கிருந்த புத்த மதத்தினருடன் உரையாடல் முயற்சிகளை மேற்கொண்டார் என்றும், அவரது அறிவு நிறைந்த வாதங்களால் பல அறிஞர்கள் கத்தோலிக்க மதத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டனர் என்றும் அவரது வாழ்க்கை குறிப்புகள் கூறுகின்றன.

ஆகஸ்ட் 13, இவ்வெள்ளியன்று நடைபெற்ற இணையவழி மெய்நிகர் கருத்தரங்கை, 16ம் பெனடிக்ட் நிறுவனம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், Wiseblood பதிப்பகம் ஆகியவை இணைந்து நடத்தின. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2021, 14:46