கட்டாயத் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிறுமி கட்டாயத் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிறுமி 

இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக குரல்

கண்டி ஆயர் : தொழில் ரீதியாக பாலர் சுரண்டப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் சட்ட திருத்தங்கள் இலங்கை நாட்டில் கொணரப்பட வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தொழில் ரீதியாக பாலர் சுரண்டப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் சட்டத் திருத்தங்கள் இலங்கை நாட்டில் கொணரப்பட வேண்டும் என அந்நாட்டு அரசுத்தலைவருக்கு விண்ணப்பக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார், கண்டி ஆயர் Joseph Vianney Fernando.

முன்னாள் இலங்கை அமைச்சர் Rishad Bathiudeenன் வீட்டில் பணி செய்துகொண்டிருந்த இஷாலினி என்ற 16 வயது இளம்பெண் காயங்களுடன் மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சிறார்களின் பாதுகாப்புக்கு உறுதி வழங்கும் விண்ணப்பத்தை விடுத்து அரசுத்தலைவர் Gotabaya Rajapaksa அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் ஆயர் வியான்னி பெர்னாண்டோ.

இஷாலினியின் மரணம் குறித்த சுதந்திர விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும், இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ள ஆயர் வியான்னி பெர்னாண்டோ அவர்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தவைகளில் சட்ட சீர்திருத்தங்கள் இடம்பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

வீட்டுவேலை புரியும் தொழிலாளர்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ள கண்டி ஆயர், குறிப்பாக மலைவாழ் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள், அவர்களுக்கே உரிய மாண்புடனும், ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகளுடனும் வாழ்வதற்கு உறுதி வழங்கப்பட வேண்டியதையும் வலியுறுத்தியுள்ளார்.

தேயிலை ஏற்றுமதியில், உலகில், நான்காவது இடத்தைக் கொண்டிருக்கும் இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில், 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர், அதில் பெரும்பான்மையினோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2021, 14:11