உதவி செய்யப்படும் தற்கொலையின் விளக்கப்படம் உதவி செய்யப்படும் தற்கொலையின் விளக்கப்படம்  

இஸ்பெயினில் ஒவ்வொரு நாளும் 10 தற்கொலைகள்

தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ளும் சோதனைகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு நல்வழி காட்டி வாழவைக்க வேண்டியது, ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒவ்வொரு நாளும் 10 பேருக்கு மேல் தற்கொலை வழியாக உயிரிழக்கும் ஸ்பெயின் நாட்டில், தற்கொலை முயற்சிகளை மேற்கொள்ளும் சோதனைகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு நல்வழி காட்டி வாழவைக்க வேண்டியது, ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை என அழைப்பு விடுத்துள்ளார், அந்நாட்டு ஆயர் Juan Carlos Elizalde Espinal.

பல இளைஞர்களும், முதியோரும் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள முடிவெடுத்து வருவது பெரும்கவலை தருவதாக உள்ளது என தெரிவித்த, இஸ்பெயினின் Vitoria மறைமாவட்ட ஆயர் Elizalde அவர்கள், கருணைக் கொலையையும், பிறர் உதவியுடன் தற்கொலை புரிவதையும், 2020ம் ஆண்டு, டிசம்பர் மாதம், இஸ்பானிய அரசு, சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளதையும் நினைவூட்டினார்.

இஸ்பெயின் நாட்டின் பொது நிறுவனங்கள், அமைப்புக்கள், பள்ளிகள், குடும்பங்கள், மற்றும் திருஅவை ஒன்றிணைந்து, இத்தற்கொலைகளை தடுக்க திட்டங்களைத் தீட்டி, தற்கொலை செய்துகொள்ள முயலும் மக்களில் நம்பிக்கையை உருவாக்கி, நல்வழி காட்டவேண்டும் என்ற அழைப்பினை விடுத்த ஆயர், ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு திட்டத்தை வகுத்துள்ளார் என்பதையும், எல்லாவற்றிலும் ஒரு புதிய துவக்கத்தைக் காணமுடியும் என்பதையும் மக்களுக்கு உணர்த்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், பலவீனமான மாணவர்கள் மீது அத்துமீறிய வன்முறைகளை பிற மாணவர்கள் மேற்கொள்வது, இளையோரின் தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் ஆயர் Elizalde.

தற்கொலைகள் அண்மைக்காலங்களில் பெருகிவரும் ஐரோப்பாவில், ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு இலட்சம் பேருக்கு, 13.9 பேர் தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2021, 13:54