கானடா காட்டுத் தீ  கானடா காட்டுத் தீ  

காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாடு

WCC அறிக்கை : துயர் வேளைகளில், கிறிஸ்தவ சபைகள், உணவு, உறைவிடம், ஆலோசனை, ஆறுதல், நம்பிக்கை, ஊக்கம், ஒருமைப்பாடு ஆகியவைகளை வழங்கி, உதவி வருகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

அண்மைய நாள்களில், காட்டுத் தீயால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளோடு, குறிப்பாக, அதன் மக்களோடு, தங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவித்து, செய்தியொன்றை வெளியிட்டுள்ளது, WCC எனும், உலக கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு.

பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டை வெளியிடும் இந்த அறிக்கை, கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை முதுபெரும்தந்தை கிரில், கிரேக்கம், மற்றும் அல்பேனியா நாடுகளின் பேராயர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டு கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கு, WCCயின் இடைக்கால பொதுச்செயலர், அருள்பணி Ioan Sauca அவர்களால் அனுப்பப்பட்டுள்ளது.

மனிதர்களால் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றத்தின் விளைவான இந்த காட்டுத்தீ, கடந்த ஆண்டுகளைப்போல் அல்லாமல், இந்த ஆண்டு, மிகக் கடுமையானதாக இருந்தது என்றும்,  நம் பொதுவான இல்லமான உலகை, மிகப்பெரிய அளவில் மாற்றிவருவதாகவும் தெரிவிக்கிறது, WCCன் அறிக்கை.

இயற்கைப் பேரிடரான இந்த காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல அரசுகள் தேவையான உதவிகளை ஆற்றிவருவதையும், சுயவிருப்பப் பணியாளர்கள் பலர் தங்கள் உயிரையும் தியாகம் செய்து, துணிவுடன் பணியாற்றிவருவதையும் தங்கள் செய்தியில் குறிப்பிட்டுப் பாராட்டும் WCC கிறிஸ்தவ கூட்டமைப்பு, இத்தகைய துயர் வேளைகளில் கிறிஸ்தவ சபைகள், உணவு, உறைவிடம், ஆலோசனை, ஆறுதல், நம்பிக்கை, ஊக்கம், ஒருமைப்பாடு ஆகியவைகளை வழங்கி, உதவி வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.

தற்போது, கிரேக்கம், துருக்கி, இத்தாலி, அல்பேனியா, இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவைகளில் காட்டுத்தீ, அழிவுகளை தந்துகொண்டிருப்பதாக, செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2021, 14:04